சிந்திப்போம் சாதிப்போம்!

ஒவ்வொரு நாளையும் நாம் வேகவேகமாய் இயக்குகின்றோம். அல்லது இயக்கப்படுகின்றோம். அன்றைய பணிகளை செய்து முடிப்பதற்கே நேரம் போதாமல் நாளையோ, நாளை மறுநாளோ செய்துக் கொள்ளலாம் என பல பணிகளை ஒதுக்கிவைத்து விடுகிறோம்.

ஒவ்வொரு நாளின் பணிகளை செய்து முடிக்கவே நேரமில்லை எனும்போது முந்தைய நாட்களின் பணிகளும் சேர்ந்து கொண்டால் எப்படிச் செய்ய முடியும்?

தொழில்ரீதியாகவும், குடும்பரீதியாகவும் நமக்காக காத்திருக்கும் பணிகளை செய்வதற்கு தாமதமாகிக் கொண்டே போனால் இரண்டு இடத்திலும் உறவுகள் சீர் குலைந்து போகிறது.

என்னதான் சரியான காரணங்களை நாம் வைத்திருந்தாலும், எடுத்துக் கூறினாலும் அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டியவற்றை செய்யத் தவறும்போது நம்மைச் சார்ந்தவர்கள் மற்றும் நாம் சார்ந்திருக்க வேண்டியவர்களால் நாம் குறைத்து மதிப்பிடப்படுகிறோம்.

ஒருமுறை நம்மீது விழப்படும் முத்திரையானது நாம் என்னதான் சரிப்படுத்திக் கொண்டாலும் அகலுவதில்லை. மற்றவர்கள் நினைவில் நம்மைப் பற்றிய நல்ல விஷயங்கள் தங்குவதைக் காட்டிலும், குறைகள்தான் நிலையாய் தங்கி விடுகிறது.

நாம் அதிக பணிச்சுமையால்தான் எதையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்ய முடியாமல் திணறுகிறோம் என்பது உண்மையாய் இருக்கலாம். ஆனால் அதற்கும் தீர்வு நம் வசமே இருக்கிறது. பணிச் சுமையைக் குறைக்கவும், பளு தெரியாமல் பணியாற்றவும் வழிகள் உள்ளன. அவற்றைப் பார்ப்பதற்கு முன் அழுத்தம் எவ்வாறு ஏற்படுகிறது எனப் பார்ப்போம்.

அதிக பணிச்சுமையானது அழுத்தத்திற்கு (ள்ற்ழ்ங்ள்ள்) வழி வகுத்துவிடுகிறது. அழுத்தம் எனப்படும் இடர்ப்பாடு அதிகமானால் அது உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடுகிறது.

வெளிப்படையான உண்மையென்ன வென்றால் அழுத்தத்திற்கு ஆளாகியிருப்போர், தான் அழுத்தத்தால் (ஆஹக் ள்ற்ழ்ங்ள்ள்) பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதையே அறிவதில்லை. அதனால்தான் தனக்கு உடல்நலம் கெட்டுள்ளது என்பதையும் உணருவதில்லை.

நம்முடைய உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளது என்றால் உடனே நாம் அன்றைய தினமோ அல்லது முந்தைய தினமோ என்ன உணவு எடுத்துக்கொண்டோம்? மாசடைந்த குடிநீரை எடுத்துக்கொண்டோமா? அல்லது சுத்த மில்லாத வெளி உணவுகளை சாப்பிட்டோமா? என்றெல்லாம்தான் ஆராய்கிறோமோ தவிர அதீதமான பணிச்சுமையால் அழுத்தம் ஏற்பட்டு அதுதான் நோயை வரவழைத்துள்ளது என்பதை உணர மறுக்கிறோம்.

நாம் ஏன் அதிகமான பணிச்சுமைக்கு ஆளாகிறோம்?

அவரவர் சூழலுக்கு ஏற்றாற்போல் பல்வேறு காரணங்களை நாம் கூறலாம்.

ஆனால் பொதுவான, மிகப் பொருத்தமான காரணம் என்னவென்றால் சிந்தித்து திட்டம் வகுத்து செயல்படாததுதான் என்பதை கண்டிப்பாக ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை குறைந்தபட்சம் ஒருமுறையாவது ஆழ்ந்த சிந்தனைக்கு நேரம் ஒதுக்கவேண்டும்.

காலை விழித்தெழுந்து அரைமணிநேரம் கழிந்தபின் கண்களை மூடியபடி குறைந்தது இருபது நிமிடங்களாவது சிந்திப்பதை மட்டும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இது தியானத்திற்கோ, பிரார்த்தனைக்கோ அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். கண்கள்தான் மூடியபடி இருக்கவேண்டுமேயன்றி நம்முடைய ஆழ்மனம் முற்றிலும் விழிப்பாய் இருந்து சிந்தித்தல் வேண்டும். சற்று விளக்கமாய் சொல்வ தென்றால் மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும்.

எதைப்பற்றி சிந்திப்பது?

நம் முன் உள்ள போட்டிகளை, சவால்களைப் பற்றிச் சிந்திக்கலாம்.

அவற்றை திறமையாய் எதிர்கொண்டு மேலேறுவது எப்படியென சிந்திக்கலாம்.

புதுமைகளை, புதியவைகளை அறிமுகப் படுத்துவது பற்றிச் சிந்திக்கலாம்.

இப்போதிருக்கும் வரையறைகளை தாண்டி விரிவாக்கம் செய்வது குறித்துச் சிந்திக்கலாம்.

நம்மை மேம்படுத்திக் கொள்வது, நம்முடன் அல்லது நம்மிடம் பணியாற்றுவோரை மேம்படுத்துவதுப் பற்றி சிந்திக்கலாம்.

குடும்பத்தினரின் நலன்கள் குறித்துச் சிந்திக்கலாம்.

நமக்கு முன் காத்திருக்கும் கடமைகளை வகைப்படுத்தி விரைந்து முடிப்பது தொடர்பாய் சிந்திக்கலாம்.

நீண்ட நாட்களாக தள்ளிப்போட்டுவரும் செயல்களை செய்வதற்கு கால வரையறை செய்வதைச் சிந்திக்கலாம்.

வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறை களைச் சிந்திக்கலாம்.

எதிர்காலத்திற்கான முதலீட்டுத் திட்டங்களைப் பற்றி சிந்திக்கலாம்.

உடல்நலத்தைப் பரிசோதிப்பதற்கு நேரம் ஒதுக்கிச் செல்லவேண்டுமென்பதைச் சிந்திக்கலாம்.

வீடுகட்டுதல், மறுசீரமைத்தல், தொழில் நிறுவனத்திற்குத் தேவைப்படும் புதிய கட்டமைப்புகளை உருவாக்குவது, பழுது பார்ப்பது பற்றிச் சிந்திக்கலாம்.

நம் வாழ்க்கைக்கான அர்த்தத்தைப் பற்றிச் சிந்திக்கலாம்.

வாழ்ந்த நாட்கள் பாராட்டும்படி, பேசப்படும்படி அமைந்திருக்கவில்லையெனில் வாழ்கின்ற நாட்களையும், இனி வாழும் காலத்தையுமாவது அவ்வாறு மாற்றுவது குறித்துச் சிந்திக்கலாம்.

பரவலாய் சமுதாயத்தால் நாம் அடையாளம் காணப்படுவதற்கான வழிமுறைகளையும், செயல்பாடுகளையும் சிந்திக்கலாம்.

நட்புவட்டத்தையும், உறவுகளையும் வலுப் படுத்திக் கொள்வது குறித்துச் சிந்திக்கலாம்.

வந்திருக்கும் அழைப்புகளுக்கு ஏற்ப நாம் கண்டிப்பாக செல்லவேண்டிய நிகழ்வுகளை வகைப்படுத்துவதைச் சிந்திக்கலாம்.

அவரவர் சூழலுக்கு ஏற்றவாறு அன்றாடப் பொறுப்புகளை செம்மையாய் நிறைவேற்றுவது பற்றிச் சிந்திக்கலாம்.

சரி. எல்லாவற்றையும் ஒரே நாளில், ஒரே நேரத்திலா சிந்திக்க வேண்டும்?

அப்படிச் செய்ய வேண்டியதில்லை.

அது சாத்தியமுமில்லை.

ஒவ்வொரு நாளும் சிந்தனைக்கென நேரம் ஒதுக்கி சிந்திக்கத் தொடங்கினாலே தானாய் முன்னுரிமைப்படுத்தும் வழிகள் கிடைத்துவிடும். நாம் செய்யவேண்டியதெல்லாம் சிந்திப்பதை ஒரு நாளின் முதன்மைப்பணியாய் வைத்துக் கொள்வது தான்.

நம்மை ஒருமுகப்படுத்தி சிந்திக்க உட்காருவதே மிகப்பெரும் செயல்தான். ஏனெனில் ஒன்றைப்பற்றி சிந்திக்கும் போதே உடனே செய்ய வேண்டிய வேலைகள் நினைவுக்கு வந்து சிந்திப்பதிலிருந்தேகூட எழுந்துவிட நேரலாம்.

அவ்வாறு செய்வதிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாய் மாற்றத்தை கொண்டுவருதல் வேண்டும்.

சிந்திப்பதற்கான நேரம் என்பது வெறும் அன்றையப் பணிகளுக்கானது மட்டுமல்ல என்பதில் தெளிவு இருத்தல் அவசியமாகும்.

சிந்திக்க நேரம் ஒதுக்குதலானது தலைமைப் பண்பின் வெற்றிபெறும் தந்திரங்களில் ஒன்றாகும்.

எங்களின் மனிதவள மேம்பாட்டு பயிற்சிகளின் போது பங்கேற்பாளர்கள் அவர்களின் பணிச்சுமையால் அழுத்தம் ஏற்பட்டு மிகச் சலிப்பாய் எங்களிடம் பல்வேறு விஷயங்களைச் சொல்வதுண்டு.

“விழித்திருக்கும் நேரம் முழுவதையுமே பணிச்சுமை ஆக்கிரமித்துக் கொள்கிறது.”

“எப்போதும் ஓட்டமும் நடையுமுமாகவே உள்ளது வாழ்க்கை”.

“எதற்காக ஓடுகிறோம் என்பதையே அனுபவிக்க முடியாமல் ஓட வேண்டி உள்ளது.”

மேற்கண்டவை உள்ளிட்ட இன்னும் பல்வேறு விமர்சனங்களை வைப்பார்கள்.

இதற்கெல்லாம் தீர்வு பல் தேய்ப்பது, குளிப்பது எப்படி அன்றாடத்தின் அவசியப் பணிகளோ அதே போல் நேரம் ஒதுக்கிக் கொண்டு சிந்திப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

சிந்தனை தெளிவை ஏற்படுத்துகிறது.

தெளிவுதான் வெற்றிக்கான பாதையை அமைக்கிறது.

ஆழ்ந்து சிந்திப்பது நம் பணிகளை வகைப்படுத்த உதவுகிறது. எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதற்கு பதில்கள் கிடைக்கிறது. செயல்களில் நேர்த்தியை அமைத்துத் தருகிறது.

தேர்ந்தெடுப்பதில் புத்திசாலித்தனமும் சரியான முடிவெடுக்கும் திறனும் வசப்படுகிறது. நம் பணிச்சுமைகளை, பளுவைக் குறைத்து சுலபமாக்கி விடுகிறது.

சிந்தித்துச் செயல்பட்டால் சுடர்விட்டு பிரகாசிப்போம். சிந்திப்போமா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *