– கே.ஆர்.நல்லுசாமி
கணக்கு பிள்ளைகளுக்கு தருகிற வேலையினை கணக்கு பிழையில்லாமல் செய்கிறார்களா? என்று நாம் பார்க்காமல் சரியாகத்தான் செய்வார்கள் என்று நாம் அவர்கள் மீது நம்பிக்கை கணக்கை, தப்பு கணக்கால் போட்டு விடுகிறோம்.
வெற்றி, தோல்வி, எழுந்து வர வைக்கின்ற வீழ்ச்சி, எழ முடியாத வீழ்ச்சி எப்பொழுதும் மிக விரைவாக பரவசத்துடன் இயங்கிக் கொண்டிருந்த வர்கள் எல்லாம் வீழ்ச்சியில் சிக்கி மகிழ்ச்சியை இழந்து மற்றவர்களின் மகிழ்ச்சியையும் கெடுத்து விடுகிறார்களே? இதற்கு அவர்களின் நிர்வாகத்தில் உள்ள கணக்குப்பிள்ளைகள் பொறுப்பா? கணக்குப்பிள்ளைகளால் ஏற்படுகின்ற கணக்குப் பிழைகள் பொறுப்பா? இல்லை இரண்டுக்கும் மேலாக மற்றொன்று உள்ளது. அது என்ன? பார்ப்போம்.
நிர்வாகம் என்பது கற்றுக்கொண்டே இருப்பது. அதன் மூலமாக பெற்றுக்கொண்டே இருப்பது. கற்றுக்கொள்வதை நிறுத்திக் கொண்டால் பெற்றுக் கொள்வதும் நின்று விடும்.
ஆக, தொடர் முயற்சி, தொடர் வெற்றி, வெற்றியின் வேகத்தில் சின்னச்சின்ன கணக்கு களுக்கு விடை தெரிந்தும் நேரம் இல்லாமல் விடையளிக்காமல் விட்டு விடுகிறோம். சில தேர்வுகளில் கேள்வித்தாளிலேயே விடைகளும் இருக்கும். ஆனால் பொருத்தமானவை எது என்பதை அறிய நேரம் வேண்டும். அதற்கான நேரம் போதாமையில் பதில் கூற முடியாமல் விட்டு விடுவோம்.
அது போலத்தான் அனைத்து நிறுவனத்திலும் தலைமை மேலாளர்களோ! நிர்வாகிகளோ! சரியான விடை தெரியாமல் அல்லது தெரிந்தும் நேரம் போதாத காரணத்தால் இழப்பை சந்திக்க நேருகிறது. அறிந்து கொள்கின்ற ஆர்வமும், செயல்படுத்துகின்ற ஆர்வமும் முக்கியம்.
ஏமாற்றம் எப்பொழுது வருகிறது, நம்பும் பொழுது. நம்பிக்கை எப்பொழுது வருகிறது. நடவடிக்கைகளைப் பொறுத்து. நடவடிக்கைகளை யார் கண்காணிப்பது, நிர்வாகிகள்தானே? பின் ஏன் ஏமாறவேண்டும். “கரணம் தப்பினால் மரணம்” என்ற பழமொழிக்கேற்ப மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஆனால் பல ஆண்டுகளாக சுமந்து வந்த சுகமான சுமைகளைத் தாங்க முடியாத சுமைகள் என்று எண்ணி அனைத்தையும் தனி நபரிடமோ குழுவிடமோ இறக்கி வைத்துவிட முடிவு செய்யும் போது பிழைகளை அறிய முடியாமல் போகிறது. மாறாக வேலைகளை பிரித்துக் கொண்டால் புதிய வழிகளை காணலாம்.
புதிய கண்டுபிடிப்புகளால் பல எளிமை ஏற்படுவது போல, புதிய பொறுப்பாளர்களாலும் பல நன்மைகள் அடைய முடியும், அவர்களை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து நாம் விலகாத வரை.
சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன். வெற்றியாளர்களின் வழிகள். ஒவ்வொருவரும் தன் நிலைக்கேற்ப நிர்வாகம் செய்திருக்கிறார்கள். கடுமையாக உழைத்திருக்கிறார்கள், உயர்ந்த பின் உல்லாசமாக இருக்க விரும்பவில்லை, உயர்வான செயல்திட்டங்களை, மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்களும் கற்றுக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
கண்காணிப்பில் கவனம் இருந்தால் நம்பிக்கை என்னும் வண்டி நன்றாக ஓடுகிறதா என்று பார்க்க முடியும். வண்டி புதிது, நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்ற வண்டி தான். ஆனால் அதற்கு தேவையான எரிபொருளை நிரம்பத் தவறக்கூடாது அல்லவா? ஏன் எந்தச் செலவும் இல்லாத காற்று இல்லை என்றால் வண்டி ஓடுமா? அந்தக் காற்றைகூட அதன் சவுகரியத்திற்கு வந்து போகவிடவில்லை. ட்யூப்பில் அடைத்து காற்று வெளியேறாதவாறு பாதுகாத்து வைத்துள்ளதால்தான் வண்டி இயங்குகிறது. எப்பொழுதும் கண்காணிப்பு இருந்து வந்தால் நிர்வாகக் கோளாறுகளை சரி செய்து கொள்ள முடியும்.
காரணங்கள் பல உள்ள இடத்தில் நாம் உள்ளோம். காரியங்களும், சிறப்பாக நடக்க வேண்டும். தவறுகளும் தடுக்கப்பட வேண்டும். கணக்குப்பிள்ளைகளுக்கு தருகிற வேலையினை கணக்குப்பிழையில்லாமல் செய்கிறார்களா என்று நாம் பார்க்காமல் சரியாகத்தான் செய்வார்கள் என்று நாம் அவர்கள்மீது நம்பிக்கை கணக்கை, தப்பு கணக்கால் போட்டு விடுகிறோம்.
நிர்வாகத்தில் கணக்குப்பிள்ளைகள் தவறு செய்ய மாட்டார்கள். அல்லது பிழைகளே நடக்காது என்ற தவறான கணக்கை நிர்வாகம் செய்து விடுகிறது. கணக்குப்பிள்ளையின், தவறாக இருந்தாலும் கணக்குப்பிழையாக இருந்தாலும் தவறான கணக்கை போட்ட நிர்வாகம்தான் நஷ்டப் படுகிறது.
“புதிய கண்டுபிடிப்புகளுக்கு முதலிடம் கொடுப்போம்”
“பிழையில்லா கணக்கினை செய்திட பல கணக்குப்பிள்ளைகளை அமர்த்துவோம்”
“கணக்கில்லா வளர்ச்சியை பெற்றிடுவோம்”
Leave a Reply