சின்னவர் ஆனால் பெரியவர்

– தூரிகா

இளைஞர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப் படுத்த வேண்டிய ஊடகத் துறையில் இன்று எண்ணற்ற கறைகள் படிந்துள்ளன. இருப்பினும் கறைகள் துடைக்கப்பட்டு பளீரென மிளிர்ந்து மின்னும் சில நிகழ்வுகள் இல்லாமல் இல்லை. இன்றைய தலைமுறைக்கு “தமிழ்” என்ற மொழி அந்நியப்பட்டு வரும் வேளையில், இது நம் தாய் மொழி

என்று அறிமுகப்படுத்த வேண்டிய சூழலில் தமிழ் மக்கள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி “தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு”. ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் வெற்றிகரமாய் நடைபெற்ற இத்தொடர் நிகழ்ச்சியில் இறுதிச் சுற்று வரை தேர்வு செய்யப்பட்ட மாணவன் நரேன் கௌதம்.

படிப்பு, தொழில் என இன்றைய இளைஞர்கள் கவனம் செலுத்திவரும் வேளையில் கோவை, யுவபாரதி பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் நரேன் கௌதம் பாராட்டப்பட வேண்டியவர். எல்.கே.ஜி, யு.கே.ஜி போன்ற வகுப்புகளில் குழந்தைகள் சேர்க்கப்படும்போது தான் நம் குழந்தைகள் தமிழ் எழுத்துக்களையே கற்று கொள்கின்றன. ஆனால் அந்த வயதிலேயே உரைகள் நிகழ்த்தி பரிசு பெற்றவர் நரேன் கௌதம்.

ஒரு முறை பெறுவதல்ல, வெற்றி. தொடர்ந்து ஒவ்வொரு முறையும் நம்மை முன்னிருத்திக் கொள்வதே நிலையான வெற்றி என்ற கோட்பாட்டின் கீழ் தொடர்ந்து ஏழு வருடங்களாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா நடத்தும் “இளைஞர் தினம்” பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்று வருகிறார்.

விருதுகள் வழங்கப்படுவதே நல்ல திறமைகளையும் ஆக்கங்களையும் ஊக்கப்படுத்த தான். இன்று பெரும்பாலும் விருதுகள் சாதித்து முடித்த சாதனையாளருக்கு வழங்கப்பட்டு வரும் வேளையில் திறமைசாலிகள் எங்கெல்லாம் துளிர்க்கிறார்களோ, அவர்களை தட்டிக் கொடுத்து வழி நடத்துவது இன்றைய சமூகத்தின் கடமையாக கொள்வது நரேன் கௌதம் போன்று வெல்லத் துடிக்கும் இளைஞர்களுக்கான வெற்றி முனைப்பை இன்னும் கூட்டும். மதுரையை சேர்ந்த “பாரதி யுவகேந்திரா” என்ற அமைப்பின் “யுவஸ்ரீ கலாபாரதி” என்ற பட்டத்தை பெற்றவர் நரேன் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் பயிலும் பள்ளிகளில், பணியாற்றும் அலுவலகத்தில் போட்டிகள் நிறைந்த துறையில் நம்மை நம் தனித்துவத்தோடு அடையாளப் படுத்திக் கொள்ள அனுபவம் வாய்ந்த பெரியவர்களே எண்ணற்ற போராட்டங்களை சந்திக்கும் சூழலில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட 6000 மாணவர்களிலிருந்து ஒவ்வொரு சுற்றிலும் முன்னேறி ஸ்டார் விஜய் நடத்திய, “தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆறுமாணவர்களில் நரேனும் ஒருவர்.

தமிழர் பண்பாடு, அரசியலும் ஆட்சியும் போன்ற தலைப்புகளில் இவர் நிகழ்த்திய உரை நடிகர் சிவக்குமார், கவிஞர் விஜய், பத்திரிகையாளர் திரு. நக்கீரன் கோபால், விமர்சகர் ஞானி, தமிழருவி மணியன் போன்ற தமிழகத்தின் முன்னணி ஆளுமைகளால் பாராட்டப்பட்டது.

“ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது” என்ற வாசகங்களையெல்லாம் சாதாரணமாக கடந்து வரும் இன்றைய இளைஞர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் பல. படிப்பையும் அவர்களின் தனித்திறமைகளையும் சரியாக எடைபோட அவர்களோடு துணை நிற்க வேண்டியது மட்டுமே பெற்றோர்களின் கடமை. இந்த இளம் வயதிலேயே அவர்களுக்கே உரிய போராட்டங்களை புன்னகையோடு வெற்றி காணும் நரேன் போன்ற இளைஞர்களை சிறியவர் என்று எப்படிச் சொல்ல!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *