நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி

எப்படி பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும்

எல்லா தினசரி பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் விளம்பரம் வந்திருந்தது. சதாசிவம் எல்லா பத்திரிகைகளையும் திரும்ப திரும்ப பார்த்தார். வேலைக்கு ஆட்கள் தேவையில்லை என்ற வாசகம் நிச்சயம் அனைவரையும் கவனிக்க வைக்கும். ‘வேலைக்கு ஆட்கள் தேவை என்று தானே விளம்பரம் வரும். ஆனால் இவர்கள் என்ன

வேலைக்கு ஆட்கள் தேவையில்லை என்று கொடுத்திருக்கிறார்களே..’ என்று ஆச்சரியமாக படிப்பார்கள். இன்று நிறைய போன் வரும் என்று சதாசிவம் நினைத்துக்கொண்டார்.

அடுத்த பத்து நிமிடத்தில் போன் வந்தது. அவருக்கு நெருக்கமான மனிதர், ஜாம் சப்ளை செய்யும் நந்தகுமாரிடமிருந்து வந்தது. என்னண்ணே இப்படி விளம்பரம் கொடுத்திருக்கீங்க. நம்ம ஆளுகளுக்கு தெளிவா சொன்னாலே விஷயம் புரியாது. நீங்க என்னடான்னா புதுமையா சொல்றேன்னு ஒருத்தனுக்கும் புரியாத மாதிரி விஷயத்தை சொல்லியிருக்கீங்க. எங்க கடை பையன் காலையில போன் பண்ணி வேலைக்கு ஆள் வேண்டாம்னு, இவ்வளவு பத்திரிக்கையில விளம்பரம் கொடுத்திருக்காங்களே. நிறைய பேர் வேலை வேணும்னு கேட்டு தொந்தரவு பண்றதால இப்படி விளம்பரம் கொடுத்திருக்காங்களா. நம்ம கடைக்கு டெலிவரிக்கு வேலைக்கு இரண்டு பேர அனுப்பி வைக்கச்சொல்லுங்கண்ணேங்கிறான். அவன் கிண்டல் பண்ணல. அவனுக்கு அவ்வளவுதான் புரிஞ்சிருக்கு. எனக்கே இரண்டு முறை படிச்சவுடன்தான் உங்க விளம்பரம் புரிஞ்சது. நம்ம வேலைக்கு, படிச்சவன் எவன் வர்றான். படிக்காதவன்தானே வர்றான். இப்படியெல்லாம் கொடுத்தா எப்படி அவனுகளுக்குப் புரியும்.”

சதாசிவத்திற்கு ஒரே நொடியில் குழப்பத்தின் உச்சிக்குப் போனார். ‘இன்னும் இரண்டு பேரிடம் கருத்து கேட்டிருக்கலாமோ? ஐம்பதாயிரம் ரூபாயை ஒரே நொடியில் வீணடித்து விட்டோமோ?’

ஒவ்வொன்றிற்கும் பேராசிரியரிடம் பேசி அவரை தொல்லை செய்ய வேண்டாம் என்பதால் தான் விளம்பரம் கொடுக்கிறேன் என்பதை மட்டும் சொல்லிவிட்டுச் செய்தோம். ஒரு வேளை விளம்பர வாசகங்களை காட்டியிருக்கலாமோ?

சதாசிவம் குழம்பிக்கொண்டிருக்கும்போதே பேராசிரியரிடம் இருந்து போன் வந்தது. “சார் விளம்பரம் சூப்பர். யார் விளம்பர வார்த்தைகளை டிசைன் பண்ணது? நீங்களா? கவிஞராயிட்டீங் கன்னு சொல்லுங்க. நீங்க யாரோ விளம்பர ஏஜென்ஸி மூலமா இத செஞ்சிருக்கீங்கன்னு நான் நினைச்சேன். ரியலி குட்.”

சதாசிவம் தன் சந்தேகத்தைக் கேட்டார், சார், என் நண்பர் ஒருவர் போன் செய்து இந்த விளம்பரம் புரியாது என்கிறாரே?”

நாம் நம் நிறுவனத்தில் புதுமையான எண்ணங்களோடு நிர்வாகப் பணிகளை செய்யும் ஒரு மேனேஜரை எதிர்பார்க்கிறோம். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க இந்த புதுமையான விளம்பரம்தான் சரி. ஆனாலும் சரியா? தவறா? என்பதை ரிசல்ட்டால் மட்டுமே தீர்மானிக்க முடியும். இந்த வார இறுதிவரை எத்தனை அப்ளிகேஷன் வருகிறது என்று பாருங்கள். அதன் பிறகு பேசுவோம். எனி வே, ஐ கேட்ச் யுவர் அட்வர்டைஸ்மெண்ட். வாழ்த்துக்கள்.”

பேராசிரியரின் பாராட்டுக்கள் சதாசிவத்திற்கு எழுச்சியைத் தந்தது. “சார் வர்ற ஞாயிறு இண்டர்வியூ வைச்சிடலாமா? உங்களுக்கு காலேஜ் லீவுதானே? நீங்க வந்தா நல்லாயிருக்கும். நாங்கன்ன தொழில் அனுபவத்தை மட்டும்தான் பார்ப்போம். நீங்கன்னா ஆளுகள நல்லா கணிச்சு சொல்லிடுவீங்க.”

கண்டிப்பா வர்றேன். காலைல ஒரு டிரைனிங் புரோகிராம் இருக்கு. அத முடிச்சிட்டு நா வர எப்படியும் ஒரு மணியாயிடும். ரிஜெக்ஷன் பிராசஸை மட்டும் நீங்க முடிச்சு வைங்க. லஞ்சுக்கு அப்புறம் நாம செலக்ஷனை வைச்சுக்கலாம். ஓகேயா?”

பேராசிரியர் சார். எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். இண்டர்வியூல நீ எத்தனை படி ஏறி வந்த? அப்படின்னுல்லாம் கேட்பாங்கன்னு சொல்றாங்களே, எதுக்கு சார் இந்த மாதிரி கேள்வி எல்லாம்?”

பல காரணங்களுக்காக இந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படுது. முக்கியமான காரணம் அட்டிடியூட்ன்னு சொல்லப்படற அவங்க மனப் பான்மையை சோதிக்கத்தான். மனப்பான்மைன்னா ஒரு மனிதன் சிந்திக்கும் விதம். ஒரு மனிதன் எப்படி சிந்திக்கிறாங்கிறத வைச்சே அவன் எப்படி வேலை பார்ப்பாங்கிறத ஓரளவு கணிச்சிடமுடியும்”

“இப்ப நீங்க சொன்ன கேள்வியையே உதாரணத்திற்கு எடுத்துக்கலாம். இந்தக்கேள்விக்கு ஒருத்தர், இந்த வேலைக்கும் இந்தக்கேள்விக்கும் சம்பந்தமேயில்லை. நம்மளை கழட்டி விடறதுக்குத் தான் இப்படி கேள்வி கேட்கிறாங்கன்னு நினைக்கலாம்.”

“இல்ல.. அடடா படியேறும்போது சரியா கவனிக்காம விட்டுட்டோமே. ச்சே! இப்படித்தான் ஒவ்வொரு சான்ஸையும் மிஸ் பண்றோம். நாம ஒண்ணுக்கும் லாயக்கில்ல என்றும் நினைக்கலாம்”

அல்லது ‘இது ஒரு சவாலான கேள்வி. படியை எண்றதுனால என்ன பயன்? இப்படி ஒரு கேள்வி கேட்கிறாங்கன்னா நமக்கு சமயோசிதம் இருக்கான்னு டெஸ்ட் பண்றாங்கன்னு அர்த்தம். நிச்சயம் இதுக்கு பதில் சொல்லணும்.’ இப்படி கூட யோசிக்கலாம். இதுக்குத்தான் மனப்பான்மைன்னு பேர்.”

இந்தக் கேள்விக்கு எப்படியெல்லாம் பதில் சொல்லலாம்னு பாருங்க. ‘ஸாரி சார்! நா கவனிக்கல’. ‘நா எத்தனை படி போகும்போது இறங்கப்போறேனோ, அத்தனை படிதான் ஏறி வந்திருப்பேன்’. ‘எத்தனை படி ஏறினேங்கிறது முக்கியமில்லை. உங்க நிறுவனத்துக்கு வந்து இனிமே எத்தனை படி ஏறப்போறேங்கிறதுதான் முக்கியம்.’ ‘வாழ்க்கையில ஏற்ற இறக்கங்கள் சகஜம். இறங்கும்போதும் சரி. ஏறும்போதும் சரி. எதனால் இப்படின்னு, எண்ணிப்பார்க்கணும்ங்கிறத உங்க கேள்வி மூலமா கத்துக்கிட்டேன் சார்.’ பதில்கள் போதுமா. இன்னும் கொஞ்சம் சொல்லட்டுமா” பேராசிரியர் சிரித்துக்கொண்டே கேட்டார்.

சதாசிவத்திற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. இப்படி எதையாவது கேட்டு தெரிந்து கொண்டே இருக்கலாம் போலிருந்தது. அந்த பரவசத்திலிருந்து விடுபட்டு, “சார். பிச்சு உதறிட்டீங்க. என்னை கவிஞர்னு சொல்லிட்டு நீங்க கடைசியில அசத்திட்டீங்க. நீர்தான் கவிஞர்” என்றார் திருவிளையாடல் பாணியில்.

‘சரி. ஞாயிறு சந்திப்போம்’ என்று பேராசிரியர் தொலைபேசியில் விடைபெற்றபோது நிச்சயம் நல்ல மனப்பான்மை உள்ளவர்களாக எடுக்க வேண்டும் என்று சதாசிவம் நினைத்துக் கொண்டார்.

விளம்பரத்தை பார்த்துவிட்டு, 40 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். சதாசிவம் எப்படியும் நூறுக்குமேல் விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்த்தார். விளம்பரம் வந்து மூன்று நாட்கள் தானே ஆகியிருக்கிறது. இந்த வாரக் கடைசி முடிய பார்க்கலாம் என்று சமாதானம் சொல்லிக் கொண்டார்.

சதீஷ் வந்தவுடன் எல்லோருக்கும் போன் செய்து வரும் ஞாயிற்றுக்கிழமை நேர்முகத் தேர்விற்கு வரச்சொல்ல வேண்டும். எங்கே சதீஷ்? எப்போதும் காலையில் 8 மணிக்கு வந்து விடுவான். இன்று பத்தரை மணியாகியும் ஆளைக் காணும். உடம்பு முடியவில்லையா? அப்படி இருந்தாலும்கூட எப்போதும் பேக்கரிக்கு வந்து அன்றைய வேலைகளுக்கான வழிகாட்டுதல்களை கொடுத்து விட்டுத்தான் ஹாஸ்பிடலுக்கே போவான். போனும் வரவில்லை.

சதீஷ் செல்லுக்கு முயற்சித்தார். ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது.

சதீஷ் வீட்டுக்கு போனடித்தார். சதீஷின் அக்காதான் போனை எடுத்தாள். ஏம்மா.. சதீஷ் எங்கே? போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கு? உடம்புக்கு எதுவும்…”

எதிர்முனையில் பதில் எதுவும் வரவில்லை. ஆனால் அங்கே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதற்கான அடையாளங்கள் மட்டும் தெரிந்தது. “அண்ணே, சதீஷ் வீட்ல இல்ல. வந்தவுடன் பேசச்சொல்றேன்.” சதாசிவம் போனை வைத்து விட்டு யோசித்தார். இது என்ன பதில்? சதீஷ் நிச்சயம் வீட்டில்தான் இருக்கிறான். இருந்து கொண்டே ஏன் பேசவில்லை?

சதாசிவத்திற்கு ஏனோ கோபம் வந்தது. படிப்பு வராமல் சுற்றிக் கொண்டிருந்தவனை பேக்கரிக்குள் இழுத்துப்போட்டு அத்தனையும் கற்றுக்கொடுத்து இன்று எனக்கு அடுத்த நிலையில் வைத்திருக்கிறேன். புதியவர்களிடம் அறிமுகப் படுத்த மேனேஜர் என்று சொன்னாலும் கிட்டத்தட்ட ஓனர் மாதிரிதான் வைத்திருக்கிறேன். பிறகு ஏன் இப்படிச் செய்தான்?

ஆனால் இத்தனை வருடத்தில் அவன் இப்படி ஒருநாளும் நடந்து கொண்டதில்லை. எதிரில் நின்று பேசியதில்லை. ஏதாவது வேண்டுமென்றால்கூட முணுமுணுப்பாகத்தான் கேட்பான். சத்தமாகப் பேசியதில்லை. பிறகு ஏன்? சதாசிவத்திற்கு எவ்வளவு யோசித்தாலும் காரணம் பிடிபடவில்லை.

மனசு கேட்காமல் மறுபடியும் சதீஷுக்கு போனடித்தார். அக்காதான் எடுத்தாள். “ஏன் சதீஷ் வேலைக்கு வரல? எதுவும் பிரச்சனையா?” கோபமாக பேசுவதாக அவருக்கே தோன்றியது. அக்கா தயங்கித் தயங்கிச் சொன்னாள். ““நீ மேனேஜர் வேலைக்கு புதுசா ஆள் எடுக்கிறியாம். அதான், ‘மாமா நிப்பாட்டறதுக்கு முன்னாடி நானே நின்னுக்கிறேன்’னு சொல்லிட்டு காலைலேந்து படுத்தே கிடக்கிறான். சாப்பிடவும் இல்லை”.”

“அவன் இங்க வேலை செய்யறவங்கள சேர்ந்தவனா? இல்லை ஓனர சேர்ந்தவனா? வேலைக்கு ஆள் போட்டா இவனுக்கென்ன வந்தது? இனி நான் சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை.” சதாசிவம் எரிச்சலோடு போன் வைத்தார்.

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பார்களே, அது இதுதான் போலும். அதனால்தான் இரண்டு மூன்று நாட்களாக சதீஷ் நம்மிடம் சரியாகப் பேசவில்லை.

சதாசிவம் எதையும் தன்னிச்சையாகத்தான் செய்வார். சதீஷோடு எதையும் கலந்து கொள்வதில்லை. அதற்கு தேவையும் இதுநாள் வரை இருந்ததில்லை. ஒரே மாதிரி வேலைகள் தானே பெரும்பாலும். எப்போதாவது புதிதாக பேக்கரியில் ஏதாவது ஐட்டம் போடுவதாக இருந்தால் எப்படிப் போகும் என்று சதீஷைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்பார். விளம்பர விஷயத்தில் அவனையும் கலந்து செய்திருந்தால் இப்படி தப்பாகப் புரிந்து கொண்டிருக்க மாட்டானோ?

சதாசிவத்திற்கு அந்த நாள் முழுக்க சதீஷ் பற்றிய சிந்தனையாகவே இருந்தது. ஒன்றைப் பெறுவதாக இருந்தால் ஒன்றை இழக்க வேண்டும் என்பார்களே. புதிய ஒருவரை வேலைக்குப் பெற சதீஷை இழக்கத்தான் வேண்டுமோ? இப்போதே இப்படி புரிந்துகொள்கிறானே.. நாளை புதிததாக பொறுப்பிற்கு வருபவரை சுதந்திரமாகச் செயல்பட விடுவானா?

சதீஷ் பிரிட்டீஷ் பேக்கரிக்கு இனி வேண்டாம் என்று சதாசிவம் உறுதியாக முடிவெடுத்தார். அங்கே சதீஷும் இதே முடிவை எடுத்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *