மாற்றம்

– டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

இந்த உலகத்தை ‘பூ’ உலகமாகவே எப்போதும் அவள் பார்த்து வந்தாள். எந்தப் பூங்காவிற்கு சென்றாலும் பூக்களைத் தவிர வேறு எதையும் அவள் காண்பதில்லை. மலர்களின் மென்மையும் வசீகரமும் வாய்க்கப்பெற்ற அந்தப் பெண்மணி விடியலில் பூக்களின் வரவுக்காக பூபாளம் இசைத்துக் கொண்டிருந்தாள்.

சிறிய பெண்ணாக இருந்தபோதே ஒரு பெரிய நகரத்தில் ஒரு சிறந்த மலர் அங்காடியை நிறுவ வேண்டும் என்ற கனவு கண்டவள். காலப் போக்கில் குடும்ப பாரம், குழந்தை, பொருளாதாரப் பற்றாக்குறை, விவாகரத்து ஆகிய சுமைகளால் அவளது இளமைக்காலத்து இனிய கனவு மாயமாய் விட்டது. தன் குழந்தை நோய் வாய்ப்பட்டு உயிர் நீத்தபோது சுற்றத்துத் தோழிமார் அனைவரும் மலர்களையும் மலர் மாலைகளையும் கொணர்ந்து அஞ்சலி செலுத்தினர். அந்த மலர்களையும் குழந்தையின் மலர் மேனியையும் தொட்டுப்பார்த்த அவள் பொன்விரல்களில் ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. மலர்களின் மென்மையிலும் நறுமணத்திலும் இறைவனின் ஆற்றலைக் கண்டாள். “மலரினும் மென்மையான மகப்பேறே! நீ ஏன் மீளாத துயிலுக்குச் சென்றுவிட்டாய்?” எனக் கதறி அழுதாள். கண்ணீரை மழையெனப் பொழிந்தாள். இருண்டு போன அவள் வானத்தில் ‘பளீர்’ என ஒரு மின்னல் தோன்றியது. அந்த மின்னலைப் பிடித்து தன் எதிர்கால வாழ்விற்கு அஸ்திவாரமிட்டாள். விலைக்கு வந்த ஒரு பூக்கடையை விரைந்து வாங்கினாள். தன் இளமைக் காலக்கனவுக்கு மீண்டும் உயிர் கொடுத்தாள். அவளுடைய மலர் அங்காடி நித்தம் நித்தம் மலர்க்கண்காட்சியானது. பிறந்த நாள், காதலர் தினம், திருமணம் போன்ற அனைத்து விழாக்களுக்கும் சேவை மனப் பான்மையோடு மலர்களை, மலர் மாலைகளை பூச் செண்டுகளை, மலர் வளையங்களை விநியோகம் செய்தாள். மக்கள் கூட்டம் அலைமோதியது. கோடிகள் குவிந்தன. அனைத்தையும் தன் இறந்தும் இறவாக் குழந்தைக்கு அர்ப்பணித்தாள். ஒவ்வொரு மலரிலும், தங்க நாணத்திலும், தன் குழந்தையின் முகத்தையே கண்டாள். இறைவன் உலகைப் படைத்தான். ஆனால் அவளோ உலகை அலங்கரித்தாள். அவள் குழந்தை உலகத்தை விட்டு மறைந்தாலும் அவள் உள்ளத்தை விட்டு அகலவே இல்லை.

சோதனையில் சாதனை படைத்த இந்தப் பெண்மணி நம்பிக்கை நட்சத்திரம்.

குறிப்பு: உலகப்புகழ் பெற்ற சிந்தனையாளரும் எழுத்தாளருமான ஸ்டீபன் ஆர்.கோவே அவர்கள் எழுதிய, “The Flower Shop” என்ற கதையைத் தழுவியது. “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழிகளில் பெயர்த்தல் வேண்டும்” என்ற சிந்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *