மாத்தி யோசி

தோல்விதான் வெற்றியின் முதல்படி

தோல்விதான் வெற்றியின் முதல்படி. எனில் தோல்வி என்ற முதல்படியில் ஏறாமல் யாராலும் வெற்றி எனும் உயரத்திற்கு போக முடியாதா?

வெற்றி பெறவேண்டுமென்றால் முதலில் தோற்றுவிட்டு மற்ற வேலையை பாருங்கள் என்றல்லவா அர்த்தமாகிவிடும். இல்லை, இல்லை, அனர்த்தமாகிவிடும்.

ஒருவேளை தோல்வியில் துவண்டு கிடப்பவர்களை, தட்டி எழுப்பி உட்காரவைக்க, எழுந்து ஓட வைக்க, சமாதானப்படுத்த, இப்படி சொல்லப்பட்டதா?

வெற்றி பெற்றவர்களைவிட தோற்பவர்கள் தான் அதிகம் வைராக்கியம் வளர்த்துக் கொள்கிறார்கள். கவனித்திருக்கிறீர்களா? இப்படி வைராக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தோல்வியைப்பற்றி இப்படி சொல்லப்பட்டதோ?
இதைப்பற்றியெல்லாம் யோசித்திருக் கிறீர்களா? வெற்றி பெற்ற தருணத்தில் இந்த வார்தைகள் நினைவுக்கு வர வாய்ப்பில்லை. அட்லீஸ்ட் தோல்வி அடைந்த தருணத்திலாவது ஏன் இப்படி சொன்னார்கள், என்று யோசித்திருக்கிறீர்களா?

தோல்வியை யாருமே விரும்புவதில்லை. அதாவது முதல்படியில் யாருமே கால்வைக்க விரும்புவதில்லை. முதல்படியில் கால்வைக்காமல் அடுத்த படிக்கு போவது எப்படி? ஜெயித்தவர்கள் எல்லோருமே தோற்றவர்கள்தானா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் கொஞ்சம் மாற்றி யோசித்தால் விடை கிடைக்கும்.

வெற்றியின் முதல் படி நிச்சயம் மன உறுதிதான். சரி. ஒருவரின் மன உறுதியை எப்படி அளப்பது? வெற்றி பெறத் தேவையான அளவுக்கு மனஉறுதி இருக்கிறதா என்பதை எப்படி சோதிப்பது?

தோல்வியில்கூட துவளாமல் மன உறுதியோடு இருக்கிறார் என்றால், அவர் மன உறுதி, அசைக்க முடியாத உறுதி என்று அர்த்தம். அதனால்தான் தோல்வியே வெற்றியின் முதல்படி என்று சொல்லப்படுகிறது.

மனஉறுதியை பரிசோதிக்க தோல்வியை விட சிறந்த பரிசோதகர் கிடையாது.

முயற்சியில் வெற்றி பெறமுடியவில்லை என்றால் மட்டும் தோல்வியில்லை. முயற்சியை முழுமையாக்காமல் பாதியிலேயே கைவிடுவது கூட தோல்விதான்.

தோல்விக்கு பிறகும் செயல்படும் மன வலிமை இருந்தவர்கள்தான் வெற்றியாளர்களாக மாறுகிறார்கள் என்பதே இதன் அர்த்தம்.

ஆக, தோல்வியைக்கூட துச்சமென மதிக்கும் மனஉறுதிதான் வெற்றியின் முதல்படி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *