இளம் சாதனையாளர் சக்தி ஜோதி நேர்காணல்
பெண்களுக்கு தொழில் பயிற்சி – சுயஉதவிக் குழுக்கள் மூலம் பல்லாயிரக்கணக்கானவர் களுக்கு மறுமலர்ச்சி – இளைஞர்களுக்கு தன்னாளுமை எழுச்சி – நிலத்தடி நீர் மேம்பாட்டில் கவனம் – சுற்றுச் சூழல் மலர்ச்சி – இத்தனைக்கும் மூலமாய் ஒரு சக்தி! சக்தி அறக்கட்டளையின் நிறுவனர், உலக நாடுகளில் கருத்தரங்குகளில் முத்திரை பதித்த இளம் சாதனையாளர், நவீன தமிழ்க் கவிதையில் வளர்ந்து வருகிற ஆளுமை கவிஞர் சக்தி ஜோதி, தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
பயிற்சி வழங்கும் நிறுவனங்களை நீங்கள் உருவாக்கத் தொடங்கியது எப்படி?
ஓவியம் தீட்டுவது, எம்ப்ராய்டரி மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வது போன்றவற்றில் எனக்கு ஆர்வம் அதிகம். திருமணத்திற்குப்பிறகு என்னுடைய படைப்பு மற்றும் கற்பனைத் திறனுக்கு ஏற்றாற்போல் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தேன். ஆனால் நான் மட்டுமே ஒரு நிறுவனத்தை நடத்தப் போதாது என்பதால் எங்கள் பகுதியில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யத் துவங்கினேன். ஆனால் நான் எதிர் பார்த்தது போல் பெண்கள் வேலைக்கு கிடைக்கவில்லை. எனவே பயிற்சியும் பின்பு வேலையும் என ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தினேன். ஆனால் இலவசமாக பயிற்சி பெறுவதற்குக்கூட அநேக பெண்கள் ஆர்வம் காட்டவில்லை.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம் பாளையம் தென்னை விவசாயம் சார்ந்த கிராமம். இந்தப் பகுதியில் பெண்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்தார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்களால் அடிமைப்படுத்தப்பட்டோ அல்லது வேறு வகையில் ஒடுக்கப்பட்ட பெண்கள் இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
இந்தப்பகுதியில் வாழும் பெண்கள் தென்னை விவசாயம் சார்ந்த தொழில்களைச் செய்து தங்களுக்குத் தேவையான அல்லது கொஞ்சம் அதிகமாகவே வருமானம் ஈட்டினர்.
ஆனால் நான் சந்தித்த வேறு ஒரு புதிய அனுபவம். இந்தப் பகுதி பெண்களில் பலர் திருமணமாகி வெளியூர் சென்று, பெருநகரங்களில் தென்னை சார்ந்த தொழில்கள் இல்லாத காரணத்தினாலும் இவர்களுக்கு இதைத் தவிர வேறு தொழில் தெரியாத காரணங்களினாலும் பொருளாதார ரீதியாக கணவரை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் அவர்கள் தள்ளப் படுகிறார்கள்.
திருமணத்திற்கு முன்பே விவசாய கூலித் தொழில் என்றாலும் பொருளாதார தற்சார்பு அடைந்திருந்த பெண்கள் திருமணத்திற்குப் பிறகு அவ்வாறு இருக்க முடியாத நிலையில் கணவனைப் பிரிந்து அல்லது கணவனோடு சேர்ந்து அய்யம் பாளையம் பகுதிக்கே வந்துவிடுகின்றனர். அந்தக் கணவன்மார்களோ இங்கு வந்து புதிதாய் வேலை கற்றுக் கொள்ள சிரமப்படுவர். எனக்கு குடும்பம் என்கிற அமைப்பு சிதைவுறுவது வேதனை அளித்தது.
இந்தப் பகுதியை சேர்ந்த பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென முடிவு செய்தேன். திருமணமாகி எந்தப் பகுதிக்குச் சென்றாலும் வேறு சில தொழில் பயிற்சிகள் பெற்றிருந்தால் அவர்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியும் என நம்பினேன். எனவே, பெண்களுக்கான தொழில் பயிற்சி நிலையம் துவங்கினேன்.
உங்களுக்காக தொடங்கிய பயிற்சி நிறுவனம் ஊருக்காக வளர்ந்தது எப்படி?
என் உறவினர் ஒருவர் அரசு அதிகாரி. அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது நான் என்னுடைய பயிற்சி நிலையம் பற்றிக் கூறினேன்.
வீட்டின் ஓர் அறையில் பெண்களுக்காக பயிற்சியளிப்பது பற்றி சொன்னபோது, அவர் கூறினார், ‘தனியோர் ஆளாக நீ பயிற்சி கொடுத்துக் கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.
ஆனால் ஏதேனும் சிறு இடையூறு ஏற்பட்டால் சோர்ந்து போய்விடுவாய். இதுவே உன்னை நீ நிறுவனமாக கட்டமைத்துக் கொண்டால் மிகச் சிறப்பாக பல பணிகளைச் செய்யமுடியும்” என்று உற்சாகமூட்டினார். அதன் பின்புதான், ‘சக்தி அறக்கட்டளை’ என்கிற அமைப்பினை உருவாக்கினேன்.
இந்த நிறுவனத்தின் மூலமாக பெண்களுக்கு தையல், எம்பராய்டரி, ஜுட் மற்றும் ரெக்சின் பை தயாரிப்பு, சானிட்டரி நாப்கின் தயாரிப்பு பயிற்சி மற்றும் காலணிகள் தயாரிப்பு பயிற்சி போன்ற பன்னிரெண்டு வகையான பயிற்சி நிறுவனமாக மாற்றியுள்ளேன்.
சுயஉதவிக்குழுக்களும் தொடங்கி அதில் முத்திரை பதித்துள்ளீர்கள். அதுகுறித்து சொல்லுங்களேன்…
பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிறுவனம் துவங்கி நடத்திக் கொண்டிருந்தபோது, மகளிர் குழுக்கள் ஆரம்பித்து நடத்தலாமே என எங்கள் பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் கேட்டனர்.
அய்யம்பாளையத்தை மையமாக வைத்து ஆரம்பத்தில் முப்பது மகளிர் குழுக்களை அமைத்தேன். ஆரம்பகாலகட்டத்தில் மகளிர் குழு அமைப்பது என்பது இன்றுபோல் அத்தனை எளிதானதாக இல்லை. பெண்கள் வங்கிக்கு வந்து செல்வது என்பது அந்த காலகட்டத்தில் அரிதான ஒன்று. வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோருடன் பேசுவதற்கு பயப்படும் பெண்கள் இன்று வங்கி நடவடிக்கைகளை எளிதாக புரிந்து கொண்டு நேரடியாக பங்குபெறும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.
மகளிர் குழுக்கள் அமைத்து கடன் பெற்று, திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகளில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்தாமல், அவர்களுக்குத் தேவையான தொழில் முனைவோர் பயிற்சிகளும், தொழிற்பயிற்சிகளும் தொடர்ந்து கொடுத்தோம். இதன் மூலமாக வங்கியில் வாங்குகின்ற கடனை பெண்கள் தாங்களே ஒரு தொழில் செய்து திரும்ப செலுத்தும் வழக்கத்தை உருவாக்கினோம். திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சுமார் 780 கிராமங்களில் சுமார் நாற்பதாயிரம் பெண்களை மகளிர் குழுக்களில் இணைத்து வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறோம்.
குடும்பங்களை இணைக்க உங்கள் பயிற்சி மையங்கள் பயன்பட்டதாக பத்திரிகைகள் எழுதின. அது பற்றி…
மழைக்குறைவினால் 2004ம் வருடம் ஏற்பட்ட வறட்சி காரணமாக பலர் கிராமப் புறத்திலிருந்து நகர்புறங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றார்கள். தென்னை சார்ந்த தொழில் நலிவுற்றது. பொருளாதார தேவைக்காக குடும்பங்களை விட்டு, தங்களுக்குத் தெரிந்த தொழில்களை விட்டு பலர் இடம் பெயர்ந்தனர். அந்தச் சூழ்நிலையில் மகளிர் குழுக்களுக்கு கிடைத்த கடனுதவி பெரிய அளவில் அவர்களுக்கு நம்பிக்கையளித்தது.
குறிப்பாக நிலக்கோட்டை பகுதியில் பித்தளைப் பாத்திரம் செய்யக்கூடிய பல குடும்பங்களும் இடம் பெயர்ந்து சென்றனர். அவர்களை ஒருங்கிணைத்து ஆண், பெண் இருவருமே பித்தளைப் பாத்திர தொழில் செய்வதற்கான வழியினை உருவாக்கித் தந்தோம்.
பெண்களை தொழில் முனைவோராக்கு வதற்கு புதுமையான ஒன்றை புகுத்தியோ, விற்பனை வாய்ப்பு குறைவான ஒரு தொழிலை அறிமுகப்படுத்தியோ அவர்களை நாங்கள் சிரமப் படுத்துவது இல்லை. அவர்களுக்கு எளிதாக அதே சமயம் வெற்றி வாய்ப்புகள் உருவாக்கித் தரக்கூடிய வகையிலும், எதிர்காலத்தில் அந்தத் தொழிலின் தேவை பற்றிய சிந்தனையோடும் அந்தப் பகுதியில் கிடைக்கக்கூடிய கச்சாப் பொருட்களைக் கொண்டும் சிறு தொழில்களை துவங்கும் வழிகாட்டி மையமாக செயல்படுகிறோம்.
இந்த மாதிரியான செயல்பாடுகள் பற்றி பத்திரிகைகளும், சில தொலைக்காட்சி சேனல்களும் எங்களைப் பாராட்டியது எங்கள் செயல்பாடுகளை மேலும் ஊக்கப்படுத்தியது.
பயிற்சி மையங்களை நடத்துவதிலும் சுயஉதவிக் குழுக்கள் நடத்துவதிலும் உங்களுக்கு ஏதும் அனுபவப் பின்புலம் இருந்ததா?
இந்தக் களம் எனக்குப் புதிது. எனது தந்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பவர் ஹவுசில் கட்டிடப் பொறியாளர். அவர் தேனி மாவட்டம் மணலாறு அணைக்கட்டில் பணிபுரியும் போது நான் பிறந்தேன். பின்பு கோயம்புத்தூர் காடம்பாறை அணைக்கட்டிலும், பவர் ஹவுஸிலும் பணிபுரிகையில் என் பால்ய காலமும் பள்ளிப்பருவமும் கழிந்தது.
ஆனால், தேனி மாவட்டம் புனித அன்னாள் பள்ளியில் விடுதியில் பள்ளிப்படிப்பு, என்னுடைய நினைவில் மலைகளும் பசுமையும் நீரோடைகளும் என குளிர்வை கவிழ்த்திய நினைவுகளே அதிகம் படர்ந்து இருந்தன.
சொந்த கிராமமான அய்யம்பாளையம் விவசாய நிலப்பரப்பு, கொடைக்கானல் மலையின் அடிவாரம், திருமணமாகிய குடும்பமும் விவசாயக் குடும்பம், கல்வித்தகுதியும் தமிழில் எம்.ஏ., எம்.பில், சங்க இலக்கியத்தில் ஆர்வம். எனவே, தொண்டு நிறுவனம் நடத்துவதற்கான குறைந்தபட்ச அனுபவம் எதுவும் எனக்கு இல்லை.
ஆனால் இயற்கையாகவே எனக்குள் இருந்த ஆர்வம் என்னை இந்த களத்தில் சிறப்பாக செயல் பட வைத்தது என்றுதான் நினைக்கிறேன். அதே சமயத்தில் எங்களது நிறுவனத்திற்கு கிடைத்த சமூக அங்கீகாரம், வங்கி மற்றும் அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்பு எங்களை உற்சாகமாக செயல்பட வைத்தது.
சில சமயம் எங்கள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட இடையூறுகளும்கூட எங்களை மேலும் ஆர்வமுடன் செயல்பட வைத்தது என்றுதான் சொல்லவேண்டும்.
பெண்களுக்கான தொழிற்பயிற்சி மையமாக இருந்த உங்களது நிறுவனத்தை மாணவர்களுக்கான மென் திறன் வளர் பயிற்சி மையமாக மாற்றவேண்டும் என்று எப்படித் தோன்றியது…
கிராமப்புறங்களில் மகளிர் குழுக்கள் அமைத்து, பயிற்சியளிக்கும் போது அவர்களிடமிருந்து நான் சந்திக்க நேரிட்ட இன்னொரு அனுபவம், அவர்கள் தங்களுடைய குழந்தைகள் கல்லூரியில் சேர்ந்து ஏதேனும் பட்டம் பெற்றுவிட்டால் போதும். அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைந்து விடுவார்கள் என்று நம்பினார்கள். பட்டப்படிப்பு மட்டும் வாழ்க்கையில் வெற்றி பெற போதுமானதல்ல என்பதை நான் உணர்ந்திருந்தேன். கல்லூரியில் படிக்கக்கூடிய பாடத்திட்டங்கள் தாண்டியும் அவர்களுக்கு வேறு சில பயிற்சிகளும் தேவையாக இருந்தது என்பதை உணர்ந்து மாணவர்களுக்கான மென்திறன் வளர் பயிற்சி மையத்தை துவக்கினோம்.
மாணவர்களுக்கான மென்திறன்வளர் பயிற்சி மையங்களில் நடத்தப்படும் பயிற்சி முறையைப் பற்றி சொல்லுங்கள்…
ஒரேயொரு பட்டப்படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு மாணவர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் வேலையில் சேரமுடியாமல், அதேசமயத்தில் குறைவான சம்பளத்தில் இலக்கின்றி வேறுவேறு வேலைகளில் மாறிக் கொண்டிருப்பவர்களாகவும், நிறையப்பேர்களை நான் சந்தித்திருக்கிறேன். கிராமப்புறங்களில் பட்டம் பெற்ற மாணவர்கள் பலர் நகர்புறங்களில் பள்ளி மாணவர்களோடு உரையாடக்கூட தயங்குவார்கள். இதற்கு மொழி அறிவுதான், அதாவது ஆங்கிலம் தெரியாததுதான் காரணம் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். கிராமப்புற மாணவர்களும்கூட. ஆனால் உண்மையில் அதுமட்டும் காரணமல்ல.
இயல்பாகவே இவர்களுக்கு தங்களுடைய ஆளுமைத்திறனில் தாழ்வுமனப்பான்மை இருக்கிறது. எனவே அவர்கள் தங்களுடைய தனித்திறன்களை அறிந்துகொள்ள முறையான பயிற்சி தேவை. கல்லூரிகளில் படிக்கும்போது, இளைஞர் களுக்கான ஆளுமைப்பயிற்சி தருவது என்பது மட்டும் போதாது. எனவே, இளம் பிராயத்திலேயே அவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டியிருக்கிறது. 14 வயதிற்குட்பட்ட அல்லது எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தனியாக ஒரு பயிற்சி. அவர்களுடைய கற்பனா சக்தி வெளிப்படும் வகையிலான பயிற்சிகள் தருகிறோம்.
ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டி பயிற்சி தருகிறோம். கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆளுமைப் பயிற்சியும் தொழில் முனைவோர் பயிற்சியும் தருகிறோம். மொத்த மாணவர்களுக்கும் ஒரேவிதமான அளவுகோல் கொண்டு பயிற்சியளித்துவிட முடியாது. உண்மையில் அவர்களுடைய தேவை என்ன என்பதை அறிந்தே பயிற்சி அளிக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக செயல்படுகிறோம்.
இளைய தலைமுறையின் பலவீனம் என்று எதை நினைக்கிறீர்கள்?
குறிக்கோளற்று அலைபாய்கின்ற மனநிலை. இன்றைக்கு டி.வி.யைப் பார்க்கின்ற போது ரிமோட் இல்லாமல் டி.வி பார்ப்பதில்லை. ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை சேனலை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். தொலைக்காட்சி திரை, மொபைல் திரை, கம்ப்யூட்டர் திரை என ஏதேனும் ஒரு திரை முன்புதான் இன்றைய இளைய தலைமுறை தங்களுடைய பொழுதுகளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். டி.வி. சேனல் மாற்றுவது போல, தங்களுடைய குறிக்கோளை மாற்றிக் கொண்டிருக்கிற மாணவர்களை நான் சந்திக்கிறேன்.
எனவே, இலக்கு நிர்ணயிப்பதில் தங்களை அவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக எங்களுடைய பயிற்சியை வடிவமைக்கிறோம். மேலும், புத்தக வாசிப்பு என்பது இன்றைய தலைமுறையிடம் குறைவாக இருக்கிறது.
உங்கள் அயல்நாட்டுப் பயணம் பற்றிய தகவல்கள்…
2005ல் பெண்களுக்கான மாநாட்டை லண்டனைச் சேர்ந்த ஒரு அமைப்பு இலங்கையில் நடத்தியது. அதுதான் என்னுடைய முதல் வெளிநாட்டுப் பயண அனுபவம். அங்கு ரண்ய்ய்ண்ய்ஞ் ற்ட்ங் ஜ்ஹஹ் ச்ர்ழ் ஜ்ர்ம்ங்ய் என்கிற தலைப்பில் பேசினேன். உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் என்னுடைய உரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த சர்வதேச அமைப்பில் நான் தொடர்ந்து உறுப்பினராக செயல்பட்டு வருகிறேன். அதன் தொடர்ச்சியாக ரர்ம்ங்ய் நற்ஹற்ங் ண்ய் ரர்ழ்ப்க் ரண்க்ங் என்கிற தலைப்பில் பேசுவதற்காக உலகெங்குமிருந்து 3000 பெண்கள் கலந்து கொண்ட அமெரிக்காவில் நடந்த மாநாட்டில் நானும் பங்கு பெற்றேன்.
அங்கு நிகழ்த்திய என்னுடைய உரையின் தொடர்ச்சியாக இந்த சர்வதேச அமைப்பின் மத்திய ஆசியப் பகுதிகளில் உறுப்பினராக இருக்கும் அமைப்புக்களுக்கான வட்டார கருத்தரங்கை மதுரையில் நடத்துவதற்கான அங்கீகாரம் பெற்றிருக்கிறோம். இந்தக் கருத்தரங்கு 2011ல் எங்களது சக்தி அறக்கட்டளையின் சார்பாக மதுரையில் நடத்தப்பட உள்ளது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் மூலமாக தேனி மாவட்டத்தின் சிறந்த சமூக சேவகராக விருது பெற்று பின்பு தமிழக அளவிலும் சிறந்த சமூக சேவகராக விருது பெற்றிருந்தேன். இதன் தொடர்ச்சியாக இந்திய – சீன நல்லுறவு பயணத்தில் கலாச்சார தூதராக தமிழகத்தின் சார்பாக நான் சீனாவிற்கு சென்றிருந்தேன்.
ஏண்ற்ங்ஸ்ரீட் அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங் ஹய்க் அஞ்ழ்ர் டழ்ர்ஸ்ரீங்ள்ள்ண்ய்ஞ் மய்ண்ற்ள் ஈங்ஸ்ங்ப்ர்ல்ம்ங்ய்ற் – பயிற்சி பெறுவதற்காக நபார்டு வங்கி மூலமாக இஸ்ரேல் சென்றிருந்தேன்.
இதைத்தவிர சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன்.
வெளிநாட்டுப் பயணத்தின் போது நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள், சந்தித்த வித்தியாசமான மனிதர்கள்…
ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்திலும் ஒவ்வொரு விதமான அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். புதிய மனிதர்களை சந்தித்திருக்கிறேன். இதன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தியாவைச் சேர்ந்த 100 பேர் கலந்து கொண்ட சீனப் பயணத்தில் மாணவர்களோடு மாணவராக நானும் கலந்து கொண்டது என்னுடைய வித்தியாசமான அனுபவம்..
சீனாவில் வான்டோ என்கிற இளைஞர் எங்களுடைய வழிகாட்டியாக வந்திருந்தார். அவர் இந்தியாவிலிருந்து நாங்கள் வந்திருந்ததால் இந்திய அரசியல் பற்றியும், தேசியக் கட்சிகள் பற்றியும் நிறையப் பேசினார். அதையெல்லாம் விட தமிழகத்தைச் சேர்ந்த என்னிடம் அவர் தமிழகத்தில் உள்ள கட்சிகள் பற்றியும் பேசினார். மேலும், நம்முடைய இந்து கலாச்சாரம் பற்றியும் நிறையப் பேசினார். இது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
அமெரிக்காவில் என்னை நெகிழ வைத்த சம்பவம் ஒன்று, ஆர்கான்சாஸ் மாகாணத்தில் ஹார்ட் ஸ்பிரிங்ஸ் நகரில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன்.
கருத்தரங்கு முடிந்து இறுதி நாளன்று இரவு விருந்திற்காக நமது கலாச்சார உடையணிந்து சென்றிருந்தேன். பின்பு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினோம். அங்கு ஒரு தந்தையும், அவரது 10 வயது மகளும் அமர்ந்திருந்தனர். அந்தக் குழந்தை என்னைக் கைகாட்டி பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பின்பு அவரது தந்தை என்னிடம் வந்து அவள் என்னிடம் பேச விரும்புவதாக கூறினார். நானும் அந்தக் குழந்தையிடம் பேசினேன்.
அவள் இதுவரையில் சேலை அணிந்த பெண்களையோ, இந்திய முகங்களையோ சந்தித்திருக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டேன். அடிப்படையான உரையாடல்களை கூட அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் என்னை ஆர்வமாகப் பிடித்துக் கொண்டிருந்தாள். நான் கேட்கும் கேள்விகளுக்கு அவள் தந்தை பதில் கூட அமைதியாக சிரித்துக் கொண்டு கண்கள் மின்ன நின்றிருந்தாள். புகைப்படம் எடுத்துக் கொள்வோமா என்று கேட்டபோது என்னை நெருங்கி வந்து அத்தனை இறுக்கமாக என்னை அணைத்துக் கொண்டாள்.
இறுதி நாளாக இருந்ததால் என்னிடம் அவளுக்குத் தர கைகளில் பரிசுப்பொருள் எதுவுமில்லை. எனவே எனது அறைக்குச் சென்று பார்த்தேன். ஒரே ஒரு முத்துமாலை இருந்தது. அதனை எடுத்துக்கொண்டு திரும்ப கீழே வந்தேன். ஆனால் அந்தக் குழந்தையைக் காணவில்லை.
நினைவுச்சின்னமாக பரிசுப் பொருட்கள் எதுவும் தேவையில்லை. நினைவுகளே சிறந்த பரிசு பொருள் என உணர்த்தி சென்றுவிட்டாள் அந்தக் குழந்தை. அந்த முத்துமணி மாலையும், அவள் என்னை அணைத்துக் கொண்ட இறுக்கமும், அந்த புகைப்படமும் பத்திரமாக இன்றும் என்னுடன்…
பெற்ற விருதுகள் பற்றி…
விருதுகள் எப்போதும் பெருமைக்காகவோ, புகழ்ச்சிக்கோ அல்ல என்பது எனது அனுபவம். பாராட்டுக்களை அல்லது விருதுகளை பெறும் போது ஏற்படுகிற மனஉந்துதல் அளவிட முடியாதது. சில நேரங்களில் நெருக்கடிகளுக்கு எங்களை ஆட்படுத்தியிருக்கிறது. மேலும், உற்சாகமாகவும் இயங்க வைத்திருக்கிறது. விருதுகள் எங்களை மேலும் பொறுப்புடன் செயல்படுவதற்காக தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.
பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் நுண்கடன் திட்டத்தில் செயல்பட்டதற்காக சிறந்த நிறுவனமாக கிடைத்த விருது.
பின்பு ஆண்டுதோறும் அரசு வங்கி, கல்லூரிகளிலிருந்து கிடைத்துக் கொண்டிருக்கும் விருதுகள். குறிப்பாக, மாவட்ட ஆட்சியரின் பசுமை விருது, நபார்டு வங்கியின் விருது, லயோலா கல்லூரியின் விருது, பண்ணைக்காடு வீரம்மாள் – பரமசிவம் கல்லூரியின் விருது மற்றும் நேரு யுவகேந்திரா, தேனி மாவட்ட விருது மற்றும் மாநில விருது.
இன்று பொருளாதாரத் தன்னிறைவு கிராமங்களில் இருக்கிறதா?
கிராமங்களில் அனைவரும் பொருளாதார தன்னிறைவு அடைந்துவிட்டார்கள் என்று சொல்வது ஒரு மாயை என்று தான் நினைக்கிறேன். அனைவருக்கும் வேலைவாய்ப்பு இருப்பதாக கருதுவதும்கூட ஒரு மாயைதான். அடுத்த தலைமுறைக்கான உணவு, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இலக்கற்ற ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். ஆனால் சில பகுதிகளில் அதற்கான விழிப்புணர்வும் ஏற்பட துவங்கியுள்ளது.
தன்னிறைவு அல்ல என்றால் தேக்கமடைந்திருக் கிறார்களா…
ஆம் என்றுதான் நினைக்கிறேன். நமது முன்னோர்கள் கடின உழைப்பாளர்களாகவும், உயர்ந்த நோக்கத்தோடு செயல்படுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இன்று நமக்கு கிடைத்திருக்கக்கூடிய விஞ்ஞான வளர்ச்சியில் நாம் இன்னும் பல மடங்கு நம்மை உலக நாடுகளின் மத்தியில் உயர்த்திக் கொள்ள முடியும். ஆனால் நம்நாட்டில் வேலையில்லாமல் பலரும், பொழுதுபோகாமல் பலரும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் வேலை நேரத்தில் பயனற்று பொழுதைக் கழிக்கும் மனிதர்களை நான் சந்திக்கவேயில்லை.
ஊடகங்கள் நம்மை திசை மாற்றுவதாக அல்லது நமது கவனத்தை சிதறடிப்பதாகக் கருதுகிறோம். இந்த ஊடகங்களின் அசுர வளர்ச்சியில் முன்னிலையிலிருக்கக்கூடிய பல்வேறு வெளி நாடுகளில் இருப்பவர்கள் சாதனையாளர்களாக இருப்பதைக் காண்கிறோம். எனவே, இந்தியாவில் நாம் வளர்ந்திருப்பதாகக் கருதுவது என்பது மாயை என்றுதான் நினைக்கிறேன்.
வெளிநாடுகளில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது? குறிப்பாக சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளில்?
பொதுவாக வேலை செய்யாமல் இருப்பதை பெண்கள் விரும்பவில்லை. சீனாவில் குடும்பம் என்கிற அமைப்பிற்கு அதிக கவனம் கொடுக்கிறார்கள். சீனாவின் கிராமப் பகுதிகளில் இந்தியக் கிராமங்களைச் சேர்ந்த பெண்களைப் போல சார்பு மன நிலையில் சிலரைச் சந்தித்தேன். ஆனால் ஷாங்காய் போன்ற பெருநகரங்களில் மேற்கத்திய கலாச்சாரத்தை எடுத்துக் கொண்ட பெண்களையும் சந்தித்தேன்.
சீனா என்பது நம் நாட்டைப் போல பல்வேறு கதைகளையும், கலாச்சாரங்களையும் உள்ளடக்கிய ஒரு பாரம்பரியமான நாடு. ஆனால் இஸ்ரேல் என்பது மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட நாடாக இருந்தாலும், புதியதாக உருவான ஒரு நாடு என்பது நமக்குத் தெரியும்.
இஸ்ரேலில் கிபுட்ஸ் என்கிற கூட்டுறவு சமுதாயப் பண்ணையம் என்கிற அமைப்பில் வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய, யூத இன மக்களை ஒருங்கிணைத்து நிலம் கொடுத்து, விவசாயத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்து அந்த மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதோடு, லாப பங்கீட்டிலும் குடும்ப அமைப்பிலும் ஒரே மாதிரியான ஒரு வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது என்பதும், இதில் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்களைப் பற்றிய உங்களின் கருத்து…
நான்கு விதங்களில் நம்மை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.
முதலில் நம்மை நாமே நேசிக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்மிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை நாம் கண்டறிய முடியும். நம்முடைய திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சிகளை கைக்கொள்ள முடியும்.
இரண்டாவதாக நாம் சார்ந்திருக்கக்கூடிய குடும்பத்தை அல்லது நம்மை சார்ந்திருக்கக்கூடிய குடும்பத்தை நாம் நேசிக்க வேண்டும். சீனாவில் ஒரு வழக்கம் உண்டு. சாதனையாளர்கள் யாரையேனும் பாராட்ட வேண்டும் என்றால் அவர்களது மூன்று தலைமுறையைச் சேர்ந்த முன்னோரை மரியாதை செய்வார்கள். இது தங்களுக்கும் இதே போன்ற பாராட்டு கிடைக்க வேண்டும் என்று கருதி, தங்களது குழந்தைகளை சிறப்பாக வளர்ப்பார்கள் என்பது சீனர்களின் நம்பிக்கை. அதனால், நம்முடைய இளைய தலைமுறையை ஆரோக்கியமாக உருவாக்குவதற்கு தகுந்த மனநிலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக, நாம் வாழும் சமூகத்தை நேசிக்க வேண்டும். நமது கலாச்சாரம் என்பது விருந்தினரைப் போற்றுவது. நமது முன்னோர்களின் வீடுகளில் திண்ணை வைத்து கட்டுவார்கள். வழிப்போக்கர்கள் யாரேனும் வந்து அமர்ந்து தண்ணீர் பருகி விட்டுச் செல்வதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்த வழக்கம்.
பின் காலங்களில் சமூகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. நமது அருகாமை வீடுகளில் வசிக்கும் மனிதர்களை அறிந்து கொள்ளக்கூட நாம் தயங்குகிறோம். நம்மைத் தவிர வேறுயாரும் நல்லவர்களாக இல்லை என்று நாம் நினைக்கிறோம்.
ஆனால் இந்த சமூகத்திற்குள்தான் நமது குழந்தைகளும்
வளர வேண்டியிருக்கும். இந்த சமூகத்திற்குள்தான் நமது குழந்தைகள் தங்களை நிலைநிறுத்தி கொள்ள வேண்டியிருக்கும். எனவே, இந்தச் சமூகத்தை நேசிப்பதற்கான சின்னசின்ன விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான்காவதாக சுற்றுச் சூழலை நேசிக்க வேண்டும். நாம் வாழும் காலத்தில் குறைந்த பட்சம் சுற்றுச்சூழல் மாசுபடாமல் தடுப்பதற்கான சிறிய சிறிய நடவடிக்கைகளையாவது கைக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 80 ஆண்டுகள் ஒருவர் வாழ்கிறார் என்றால், 80 மரங்களாவது நட்டு பராமரித்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
நம் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் செல்வங்களில் சுத்தமான காற்றும், தண்ணீரும் முதன்மையான இடத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
இந்த நான்கு விதமாக நான் என்னை வடிவமைத்துக் கொண்டுள்ளேன்.
எதிர்காலத் திட்டங்கள் என்ன…
ஆரோக்கியமான இளைய சமூகத்தை உருவாக்கும் விதமாக நாங்கள் தரும் பயிற்சி முறையை தமிழகத்தின் அனைத்து கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு பரவச் செய்ய வேண்டும் என்பதும் இயற்கை வளங்களை மேம்படுத்துவதும் எங்களது நிறுவனத்தின் நோக்கம்.
jaisri
we are very proud of our activities.u r like a role model for us . continue ur helping service.great salute for u sir
samundeeswari.s
i want napkin preparing details and machinery purchase details
AgaNambi
thanks maa,vaalthukkal
ashok kumar
sathiyamana varthai……………..ashok,pondicherry
pandy-
dear sir
we have prode of your achivements in social activities and human ability improvement and self bussines income motivation and also i want to meet and also see your face of man my cellno;9865385922 actual iam interesting in this feild and apriciate all social field aspects this our nation useful please thank for your all thouts
.by
s.pandy
tirupur
Rasi covering
கவரிங் தொழில் செய்ய இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்படும்.வீட்டிலிருந்தபடியே
காலை 2மணி நேரம், மாலை 1மணி நேரம் பார்த்தாலே 15ஆயிரம் வருமானம்.
லட்சாதிபதியாய் மாற்றும் அருமையான தொழில்.
மேலும் இலவச ஆலோசனைகளுக்கு…..
ராசி கோல்டு கவரிங் சிதம்பரம்.
செல்.9751881542