குழந்தைகளை கொன்றுவிடாதீர்கள்

உங்களுக்கு அதிர்ச்சியூட்ட வேண்டும் என்ற நோக்கில் கொடுக்கப்பட்டதல்ல, இந்தத்தலைப்பு. தலைப்பைக் காட்டி கட்டுரையைப் படிக்க வைக்கும் மலினமான உத்தியும் அல்ல.
பிறகு எதற்காக இப்படியோர் உக்கிரமான தலைப்பு? கட்டுரையைப் படித்து முடித்த பின் நீங்களே முடிவு செய்யுங்கள்.

என்னை சந்திக்கிற பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம், முதலில் மாற்ற விரும்புவது அவர்களின் கோபத்தைத்தான். ஆனால் நான் முதலில் மாற்றவிரும்புவது பெற்றோர்களின் கோபத்தைத்தான்.

மரத்தின் மீது கொதிக்க கொதிக்க இருக்கும் வெந்நீரை ஊற்றுகிறோம். பெரிதாக பாதிப்பு இருக்காது. ஆனால் அதே வெந்நீரை புதிதாக துளிர் விட்டுள்ள சிறு செடியின் மீது ஊற்றினால் கருகிவிடும். அதனால்தான் பெற்றோர்களிடம் குழந்தைகளிடம் கோபப்படாதீர்கள் என்கிறோம்.
“நாங்கள் எங்கே கோபப்படுகிறோம்? அவர்கள் எங்களை கோபப்பட வைக்கிறார்கள்” என்கிறார்கள் பல பெற்றோர்கள்.

முதலில் கோபத்தை கொஞ்சம் புரிந்து கொள்வோம்.

கோபம் என்பது விஷம். விஷம் என்ன செய்யும் ஒருவரை முற்றிலுமாக கொன்றுவிடும். பிறகேன் கோபப்படுகிறார்கள்? கோபம் விஷம் என்பது ஏன் தெரியவில்லை? கோபம் விஷம்தான். ஆனால் ஸ்லோ பாய்சன் அதாவது மெல்ல கொல்லும் விஷம். அதனால்தான் நாம் கொடுத்தது விஷமென்றே தெரியவில்லை.

நாம் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை செலுத்த அவரும் சிறிது சிறிதாக இறந்து கொண்டிருப்பார். பெற்றோரின் கோபத்தால் உள்ளொடுங்கி நடைப்பிணங்களாக வாழ்கிற பல குழந்தைகளை நான் சந்திக்கிறேன். அதனால்தான் இதை வருத்தத்தோடு எழுதுகிறேன்.

கோபம் குழந்தைகளை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை உங்களுக்கு உணர்த்த, எங்கள் சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் மாணவர் ஒருவர் அவர் தந்தைக்கு எழுதிய கடிதத்தை தந்திருக்கிறேன். (பெட்டிச்செய்தி )

அதைப் படித்துத்தான் கோபம் குழந்தைகளை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும் என்றில்லை. உங்களையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களிடம் ஒருவர் கடுமையாக கோபப் படுகிறார். அந்த நேரம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று யோசித்துப்பாருங்கள்? பதட்டமாகி படபடப்பில் ஒன்றும் ஓடாமல் செயலற்று போய்விடுகிறீர்கள்.
நீங்கள் ஒரு குழந்தையின் அம்மாவென்றால் இந்த உதாரணத்தில் உங்களை பொருத்திப் பாருங்கள். உங்கள் சமையல் சுவையாக இல்லையென்று சாப்பாட்டு தட்டை வீசி எறிந்தால் அடுத்த நாள் உங்களால் சுவையாக சமைக்க முடியுமா?

நீங்கள் ஒரு தந்தையென்றால் இது உங்களுக்கான உதாரணம். நீங்கள் செய்த வேலை சரியில்லை என்று ஆபிஸில் பைலை உங்கள் மீது வீசி எறிந்தால் மறுநாள் அந்த இடத்தில் உங்களால் உற்சாகமாக பணி புரிய முடியுமா?

அதனால்தான் கோபம் விஷத்தை விட கொடியதாக கருதப்படுகிறது. அது ஒரு மனிதனை செயலற்றவனாக்கி சாய்த்துவிடும்.

ஒரு சிலர் கேட்கிறார்கள், ‘என்னை அறியாமல் கோபப்பட்டுவிடுகிறேன். கோபம் என் கட்டுப்பாட்டிலேயே இல்லாதபோது நான் என்ன செய்ய முடியும்?’

எனக்கொரு சந்தேகம். உங்களை விட பதவியிலோ, தகுதியிலோ, வயதிலோ, பெரியவர் களிடம் கோபம் வருகிறதா? வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் கீழ் உள்ள ஆபிஸ் பாயிடம் மட்டும் கட்டுக்கடங்கா கோபம் வரும் உங்களுக்கு. ஆனால் ஒருபோதும் உங்கள் நிர்வாக இயக்குநரிடம் கோபம் வராது. வராது என்றில்லை அதை வெளிக்காட்ட மாட்டீர்கள். அப்போது மட்டும் எப்படி கட்டுப்படுத்திக்கொண்டீர்கள்?
பின் விளைவுகள் ஞாபகத்தில் இருப்பதால் மறந்தும்கூட கோபம் தலைகாட்டுவதில்லை. இப்போது சொல்லுங்கள். கோபம் உங்கள் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது.

சிலர் கேட்கிறார்கள், ‘கோபத்தை எப்படி விடுவது?’ என்று.

உங்கள் கையில் குழந்தைக்கு கொடுப்பதற்கு தண்ணீர் வைத்திருக்கிறீர்கள். அதில் ஏதோ பூச்சி விழுந்து தண்ணீர் விஷமாகிவிட்டது. இப்போது யாரிடமாவது போய் அதை எப்படி தூக்கிப் போடுவது? என்று கேட்டுக்கொண்டிருப்பீர்களா? இல்லை, தெரிந்த அடுத்த நொடி பாட்டிலை தூக்கி எறிந்து விடுவீர்களா?
கோபத்தை நீங்கள் தூக்கி எறியவில்லை என்றால், அதன் விஷத்தன்மை உங்களுக்கு புரியவில்லை என்றே அர்த்தம். புரிந்தால் அடுத்த நொடி கோபப்படுவதை விட்டுவிடுவீர்கள்.

புவி வெப்பமயமாதலை தவிர்ப்பதற்கு முன்னால் நம் வீடு வெப்பமாவதை தவிர்ப்போம். அதற்காகவே உங்களை வேண்டுகிறேன். தயவு செய்து உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள்.
அன்புள்ள அப்பாவுக்கு,

இந்தக் கடிதம் உங்களுக்கு கோபத்தை தரும் என்றாலும் எனக்கு வேறு வழியில்லை. கோபப்படாதீர்கள் என்பதை சொல்லத்தான் இந்தக் கடிதமே.

வீட்டில் எல்லோரும் உங்களைப் பார்த்து பயப் படுகிறார்கள் என்பது தவிர, கோபத்தால் நீங்கள் சம்பாதித்தது என்ன?

நீங்கள் எதற்காக கோபப்பட்டீர்களோ, அதெல்லாம் அதன் பிறகு நீங்கள் நினைத்தது போல் மாறிவிட்டதா என்ன? இத்தனை வருடத்தில் எதுவும் மாறவில்லை என்பதிலிருந்தே தெரியவில்லையா.. கோபத்தால் எந்த விஷயத்தையும் மாற்றிவிட முடியாது என்று.

சமையல் ஒருநாள் சரியாக அமையவில்லை என்றால், அதற்கு என்ன காரணம்? என்று கண்டுபிடித்து மறுநாள் சேர்மான அளவை கூட்டியோ குறைத்தோ சரியான ருசிக்கு கொண்டு வருவதை போலத்தான், அப்பா! நாம் எதிர்பார்க்கும் ரிசல்ட் வரவில்லை என்றால் முறைகளை மாற்றிப் பார்க்க வேண்டும்.
தவறொன்று நிகழ்ந்தால் உங்களின் நோக்கம் தண்டிப்பதா? திருத்துவதா? தண்டிப்பது என்றால் கோபம்தான் வழி. திருத்துவது என்றால் அன்புதான் சரியான மொழி.

கோபம் என்பது இயலாமைதானே அப்பா. ஒரு சூழலை நம்மால் கையாளத்தெரியாத போதுதான், அந்த இயலாமையால்தானே நமக்கு மிகவும் கோபம் வருகிறது.

கோபத்தால் எங்களை விடவும் அதிகம் பாதிக்கப்பட்டது நீங்கள்தான். எப்போது பார்த்தாலும் உர்ரென்று இருந்து நிகழ்கால சந்தோஷங்கள் அனைத்தையும் இழந்து விட்டீர்களே.

நீங்கள் திட்டுவதாலேயேகூட கூடுதலாக ஒரு அலட்சியம் ஏற்பட்டுவிடுகிறது அல்லது பதட்டம் கூடிவிடுகிறது. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள், எந்த விஷயத்திற்கும் கோபம் மட்டுமே தீர்வாவதில்லை.

கோபப்பட்டு ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் அடுத்து பேசாமல் இருப்பீர்கள். இதனால் சக மனிதர்களுடனான தொடர்பை நீங்கள் இழக்கிறீர்கள். ஏன் சில நேரங்களில் வீடு வருவதற்குகூட நான் விரும்புவதில்லை. காரணம், உங்களின் கோபம்.

சரி. எதற்காக கோபப்படுகிறேன், உங்களின் நன்மைக்குதானே என்று சொல்வீர்கள். நிச்சயம் என் வளர்ச்சியை தடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் கோபப்படுவதில்லைதான். ஆனால் உங்கள் கோபம் உங்களுக்கு தெரியாமல் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது என்று ஏன் உங்களுக்கு புரியவில்லை.

பாட்டிலில் பால் குடிக்கும் பழக்கத்தை ஒரு வயதோடு நிறுத்திக் கொள்கிறோம். அடம் பிடிக்கும் பழக்கத்தை ஒரு வயதோடு நிறுத்திக் கொள்கிறோம் ஆனால் இந்த கோபத்தினை விட்டொழிக்க வயதே இல்லையா? யோசிக்காமல் வரும் கோபம்கூட ஒரு வகையில் குழந்தைத்தனம்தான்.

உங்கள் கோபத்தின் விளைவு எனக்குள் சதா ஒரு பதட்டம். எதைச் செய்தாலும் இதற்கு என்ன சொல்வீர்கள் என்பதில்தான் கவனம் இருக்கிறதே, தவிர செயலில் அல்ல…

அடிகூட இவ்வளவு வலிக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் அடி வலிக்கிற வரையில்தான் நினைவில் இருக்கும். ஆனால் சுடு சொற்கள் நினைவிருக்கிறவரை வலிக்கும்.

கடைசியாக ஒன்று… ஒவ்வொருநாள் நான் நடக்கும் போது சிரிக்கும்போது உங்களைப்போலவே இருப்பதாய் சொல்கிறார்கள். நாளை நான் கோபப்படுவதில் கூட உங்களைப் போலவே வந்துவிடக் கூடாதல்லவா. எனவேதான் இக்கடிதம்!

என்றென்றும் அன்புடன்
உங்கள் மகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *