அறிய வேண்டிய ஆளுமைகள்

மகிழ்ச்சி என்பது, எதிர்காலத்திற்காக நீங்கள் வைத்திருக்கும் திட்டமல்ல.

நிகழ்காலத்திற்கான உங்களின் வடிவமைப்பு என்ற ஜிம்ரானின் வாசகம் ஒரு முழு புத்தகம் பேச வேண்டிய சிந்தனையைப் பேசிவிடுகிறது.

தனி மனிதன் தான் குடும்பத்தலைவர் என்ற பொறுப்பிலிருந்து, பணியாளர் – அலுவலர் – ஆட்சியாளர் – தொழிலதிபர் என்று விதம் விதமான பொறுப்புகளை ஏற்கிறான். அத்தகைய பொறுப்புகளை ஏற்கிற மனிதனை எது பாதிக்கிறது? அவன் நடந்து கொள்கிற விதம்!

தனியொரு மனிதன் நடந்து கொள்கிற விதம் சீரமைக்கப்பட்டால், அவனுக்குத் தொடர்புடைய எல்லா விஷயங்களுமே சீரமைக்கப்படுகின்றன. இந்த சித்தாந்தத்துடன், சுயமுன்னேற்ற உலகில் ஆளுமையுடன் சுடர்விட்டவர்தான் ஜிம்ரான்.

1900களின் தொடக்கத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜிம்ரான். அதென்னவோ ஆரம்பம் தொட்டே அவரிடம் ஒருவிதமான பணிச்சீர்மை, பணி நேர்மை போன்ற குணங்கள் இயல்பாகவே அமைந்தன.

தங்கத்தின் தரத்துடன் தகதகத்துக் கொண்டிருந்த அவரை வார்த்தெடுக்கும் வழி காட்டியாய் அமைந்தவர் எர்ல் ஷாலைஃப். தன்னுடைய இருபத்தைந்தாவது வயதில் தன் வழிகாட்டியை சந்தித்தார் ஜிம்ரான். அவருக்கு எர்ல் ஷாலைஃப் தந்த வழிகாட்டுதல் அபாரமானது. ”தாக்கத்தின் வலிமையை ஒரு போதும் குறைத்து மதிப்பிட்டு விடாதே” என்று தன் வழிகாட்டி சொன்ன வாக்கியத்தை ஒரு வேத வாசகமாகவே வாழ்நாள் முழுவதும் மதித்தார் ஜிம்ரான்.

தாங்கள் தாக்கத்திற்கு ஆளாகிறோம் என்பது தெரியாமலேயே வேண்டாதவற்றின் தாக்கத்துக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். ஏனென்றால், தாக்கத்தின் விளைவு என்னவென்று தெரிவதற்கே சில காலங்கள் ஆகும். அதற்குள்ளாக தாக்கத்தின் பிடிக்குள் நாம் இருப்போம். இது மிகவும் நுட்பமாக கவனிக்கப்பட வேண்டியது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் ஜிம்ரான்.

நாம் எவ்விதமான தாக்கத்திற்கு ஆளாகிறோம் என்பது தெரிய வேண்டுமென்றால், நம்மை நாமே சில கேள்விகள் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றார் ஜிம்ரான்.
முதல்கேள்வி, ”நாம் யாருடன் இருக்கிறோம்” என்பது. நாம் தொடர்ந்து தொடர்பிலிருக்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களுடைய குண இயல்புகள் என்ன என்றெல்லாம் ஆராய்வதும் அந்த குண இயல்புகள் ஆக்கம் தருபவையா என்று யோசிப்பதும், முக்கியமான தேவைகள்.

நம்முடன் பழகுபவர்களை நன்கு தெரிந்து கொள்வது எல்லா விதத்திலும் நல்லதுதானே!!

இதில் ஜிம்ரான் பரிந்துரைக்கும் இரண்டாவது கேள்வி, ”இந்தத் தொடர்புகளால் எனக்கு என்ன நிகழ்கிறது?” இது மிகவும் முக்கியமான கேள்வி.

சிலருடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு நாம் படிக்கும் பழக்கத்தைத் தொடங்கியிருப்போம். அல்லது சிலருடன் தொடர்பு ஏற்பட்டபிறகு நாம் படிக்கும் பழக்கத்தை குறைத்திருப்போம். கேட்கிற கதை, பார்க்கிற படங்கள், பேசுகிற பேச்சு, இவை எல்லாமே நம் பழக்கங்களின் அடிப்படையில் பிறக்கிறவைதான்!!

அந்தப் பழக்கங்கள் நம்மில் நிகழ்த்தும் மாற்றங்களால் நமக்கு என்ன நிகழ்கிறது என்று பார்த்து, அந்தப் பழக்கங்களுக்குக் காரணமான வர்களின் தொடர்புகளைத் தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பது, முன்னேற்றத்துக்கான பாதையில் முக்கியமான அம்சம்.

”என் நண்பர்கள் சரியில்லைதான்! ஆனால் அவர்களால் நான் பாதிக்கப்படுவதில்லை!” இப்படி யாராவது யோசித்தால் அது மிகவும் மேலோட்டமான அபிப்பிராயமாகத்தான் இருக்கும் என்கிறார் ஜிம்ரான்.

ஒரு பழக்கூடையில் அழுகிய பழம் ஒன்றிரண்டு இருந்தாலும் அவை மற்ற பழங்களையும் கெடுத்துவிடும். பழகும் மனிதர்களும் பழங்கள் போலத்தான் என்கிறார் ஜிம்ரான்.

பழக்கங்கள் நம் வாழ்வை வடிவமைக்கின்றன. தொடர்புகள் நம்மில் தெரிந்தும் தெரியாமலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நண்பர்கள் தங்கள் இயல்புகளை நம் இயல்புகளாக்கி விடுகிறார்கள். இவற்றுக்கு மத்தியில் நாம் என்னவாக மாற வேண்டும் என்று எண்ணுகிறோமோ அது நமக்கு சாத்தியப்படுகிறதா என்று கவனமாக ஆராய வேண்டும் என்பது ஜிம்ரான் சொல்லும் வெற்றிச் சூத்திரம்.

நீண்டகாலம் வாழ்ந்து தொண்ணூறுகளைத் தொட்டு மறைந்த ஜிம்ரான், அனாயசமாகவும், சுவாரஸ்யமாகவும் வாழ்வின் விதம்விதமான அம்சங்களை விளக்கிக் கொண்டே போகிறார்.

வாழ்வின் அடிப்படைகள் என்பவை ஏற்கெனவே உருவானவை. அதைத்தான் படைப்பாளர்களும் பயிற்சியாளர்களும் மீட்டெடுக்கிறார்கள் என்பது ஜிம்ரானின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஒருமுறை வேடிக்கையாக சொன்னார், ”வாழ்வின் அடிப்படைகளை ஒருவர் உருவாக்குவதாக சொன்னால், அவரை நம்பாதீர்கள். இது எப்படி இருக்கிறது என்றால், புராதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை ஒருவர் நடத்துவதாக சொல்வது போலத்தான்” என்றார்.

வாழ்க்கையில் ஜெயிக்க விரும்புகிறவர்கள் சில வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். ஆரோக்கியத்திற் காக தினமும் ஓர் ஆப்பிள் பழம் சாப்பிடுவது என்று முடிவெடுத்தால், தினமும் சாப்பிடுங்கள். வாரம் முழுக்க மறந்துவிட்டு, வாரக்கடைசியில் ஏழு ஆப்பிள் பழங்களை முக்கி முனகி திக்கித் திணறி சாப்பிடுவதால் எதுவும் ஆகப் போவதில்லை என்றார் அவர்.

”உங்கள் வாழ்க்கையை நீங்கள் வடிவமைக்காவிட்டால் வேறு யாராவது வடிவமைப்பார்கள். உங்களுக்காக யாராவது யோசித்தால் என்ன பெரிதாக யோசித்து விடப் போகிறார்கள்” என்று கேட்டார் ஜிம்ரான். சின்னச் சின்ன விஷயங்களுக்காக மற்றவர்கள் சண்டை போடட்டும். சின்னச்சின்ன காயங்களுக்காக மற்றவர்கள் அழுதுகொண்டே இருக்கட்டும். நீங்கள் உங்களுக்கான உயரங்களைத் தொடுங்கள்” என்றார் ஜிம்ரான்.

மனிதர்கள் பலர் தங்கள் தேவைகளை சந்தைக்குள் கொண்டு வருகிறார்கள். ஆனால் தங்கள் திறமைகளை சந்தைக்குள் கொண்டு வருபவர்களே ஜெயிக்கிறார்கள் என்பது அவருடைய பொன்மொழிகளில் ஒன்று.

மகிழ்ச்சி என்பது, எதிர்காலத்திற்காக நீங்கள் வைத்திருக்கும் திட்டமல்ல. நிகழ்காலத்திற்கான உங்களின் வடிவமைப்பு என்ற ஜிம்ரானின் வாசகம் ஒரு முழு புத்தகம் பேச வேண்டிய சிந்தனையைப் பேசிவிடுகிறது.

சில அழுத்தமான விஷயங்களைக் கூட நகைச்சுவையாக சொல்வதில் ஜிம்ரான் வல்லவர். ”உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வசிக்கக் கூடிய ஒரே இடம் அதுதான்” என்றார் அவர்.

நல்ல விஷயங்களை வடிவமைப்பதில் இருக்கிற சௌகரியமே, அந்த நல்ல விஷயங்கள் நம்மை வடிவமைக்கும் என்பதுதான்” என்ற ஜிம்ரான், நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஆளுமை. மறைந்தும் மறையாத மானுடத் தோழமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *