டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர்
இந்தியத் தொழில் வர்த்தக சபை கோவைக் கிளையின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். திரு. ம. கிருஷ்ணன் தலைமையிலான புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில், கோவை பாரதீய வித்யாபவன் தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் ஆற்றிய நெறியுரையின் ஒரு பகுதி.
தொழிலில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருமே சமூகத்தில் ஒரு நல்ல தலைவராக உருவாகி விடுவதில்லை. தொழிலில்
வெற்றி பெறுவது என்பது வேறு. சமூகத்தில் வெற்றி பெறுவது என்பது வேறு. இரண்டுக்கும் இரண்டு வேறுவிதமான அணுகுமுறைகள் தேவைப் படுகின்றன.
இந்தியத் தொழில் வர்த்தக சபை என்பது தன்முனைப்போடு தொழில் செய்து அதில் வெற்றி பெற்றபிறகு சமூகத்திற்கு சில சேவைகளை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒன்று. சபையில் இருப்பவர்கள் சமூகத்திற்கு சேவை செய்ய முதலில் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். நல்ல வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். சமூகத்தில் ஒரு நல்ல நிலையை அங்கீகாரத்தை அடைய வேண்டும்.
நம்முடைய ஊரில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் அதிகாரத்திற்கும், பொறுப்பேற் பதற்கும் உள்ள வேற்றுமை தெரிவதில்லை. அண்மையில் நமது மாண்புமிகு பிரதம மந்திரி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். ”ஒரு பிரதமராக இவ்வளவு வேற்றுமைகளைக் கொண்ட மிகப்பெரிய நாட்டின் முழுப்பொறுப்பையும் கொண்ட நீங்கள் மனஅமைதியுடன் உள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அப்போது அவர் கூறிய பதில், ”நான் இந்தப் பதவியை அதிகாரத்தின் உறைவிடமாக பார்க்கவில்லை. எனக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய பொறுப்பாகப் பார்க்கிறேன்” என்றார்.
99% பேர் தங்களது பதவிக்குரிய அதிகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அந்தப் பதவியின் பொறுப்பை ஏற்க மறுக்கிறார்கள். எங்களது கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான் பலரும் சொல்கிறார்களே தவிர, பொறுப்புக்கு வர வேண்டும் என யாரும் சொல்வதில்லை. ஒரு சங்கத்தில் புதிதாக பொறுப்பேற்பவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று இருப்பதை அவ்வாறே ஏற்றுக் கொள்வது. அல்லது அதில் புதுமைகளைப் புகுத்தி மாற்றங்களைக் கொண்டு வருவது. இன்றைய காலகட்டத்தில் மாற்றங்கள் தேவை.
நேற்றைய நிலை இன்று இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள். மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். சில மாற்றங்களைச் செய்து உங்கள் பெயரை நிலை நிறுத்த விரும்பினீர்கள் என்றால் அதற்கு நீங்கள் ஒரு விலை கொடுத்தாக வேண்டும். யாரொருவர் வித்தியாசமான சிந்தனைகளையும், மன தைரியமும் கொண்டுள்ளாரோ அவரே ஒரு படைப்பாளி ஆகிறார்.
வாழ்வில் ஜெயிக்கிறார். அப்படிப்பட்டவர்கள் மக்களிடத்தில் மிகச் சுலபமாக சென்று சேர்கின்றனர். அதைப் பெறுவதற்கு நீங்கள் கடின உழைப்பாளியாக இருக்க வேண்டும். உங்களுடைய சொந்த வாழ்வின் சில தருணங்களை தியாகம் செய்ய வேண்டும்.
ஒருவர் தன்னைச் சுற்றி மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என எண்ணினால் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கும் தன்னிடம் மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.
நம் முன் எழுகின்ற சவால்களை எல்லாம் சந்தர்ப்பங் களாக மாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். ஓர் இலக்கை நிர்ணயித்துவிட்டு அதை நோக்கிச் செல்ல நமது செயல்களைத் திட்டமிட வேண்டும். இவை அனைத்தும் தலைமைப் பொறுப்பை பெற விரும்புவோரிடம் இருக்க வேண்டிய குணாதிசயங்கள்.
Leave a Reply