வெற்றிக்காக விளையாடுங்கள்

நேர்காணல் : கனகலஷ்மி

சுரேஷ்

நான் அடிப்படை வசதிகள் நிறைந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அப்பொழுது என் மனநிலை படித்துத்தான் மேலே வர வேண்டும் என்று எல்லாம் இருக்கவில்லை. ஆனால், உள்ளூர ஒரு தொழில் துவங்க வேண்டும் என்று ஆசையிருந்தது. படிப்பு என்பது வெளியுலக அனுபவங்களை தெரிந்து கொள்வதற்காகவே என்ற எண்ணம் அப்பொழுது எனக்கு இருந்தது. என் தந்தை என்னை ஒரு பொறியாளராக உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆனால் என் மனதில் ஒரு வித்தியாசமான பாடத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே இருந்தது. பின்பு பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் சோஸியாலஜி படிப்பில் சேர்ந்தேன். என் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருமே அந்தப் படிப்பை விமர்சனம் செய்தனர். இருந்தாலும் அன்று நான் படித்த மனிதவியல் கலை இன்று எனக்கு எப்படி யெல்லாம் உபயோகப்படுகிறது என்று இந்தப் பதவியில் உட்கார்ந்து பார்க்கும் பொழுது தெரிகிறது.

இளங்கலை சமூகவியல் படித்த நீங்கள் தர மேம்பாட்டுத் துறையில் ஈடுபட்டது எப்படி?

என்னை பொறுத்தவரை ஒரு பட்டப்படிப்பு படிக்க வேண்டும். பின்பு ஒரு தொழில் துவங்க வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. நான் படித்தது தமிழகத்தின் முன்னணிக் கல்லூரி என்பதால் அங்கு நிறைய தொழிலதிபர்களின் பிள்ளைகள் படித்து வந்தார்கள். குறிப்பாக 1982, 85 ஆகிய கால கட்டங்களில் திருப்பூர் பனியன் உற்பத்தித்துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டிருந்தது. அப்பொழுது எனக்கும் அந்த தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

நானும் என் நண்பர் ஒருவரும் இணைந்து பனியன் உற்பத்தித் தொழில் செய்யத் திட்டமிட்டோம். என் தந்தையிடம் சென்று தொழில் துவங்குவதாகச் சொன்னேன். பனியன் உற்பத்தி பற்றி எந்த அடிப்படைத் தகவலும் தெரியாமல் எப்படிச் செய்வாய் என்றார். என் நண்பர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று கூறினேன். உண்மையில் எனக்கு தொழில் கற்றுக் கொள்ள, எந்த ஆர்வமும் அப்பொழுது இல்லை. ஆனால், என் நண்பர் அவருக்குத் தெரிந்த தொழிலதிபர் மூலம் இந்தத் தொழிலை மிகச் சிறப்பாக நடத்தினார். நல்ல வருமானம் வந்தது.

ஒரு நாள் என் நண்பருக்கும் அந்த தொழிலதிபருக்கும் சில கருந்து மோதல்கள் ஏற்படவே, அந்தத் தொழிலதிபர், இனி அந்த நண்பர் வேண்டாம். நீங்களே தொழிலை நடத்துங்கள் என்று சொன்னார். இத்தனை நாட்கள்வரை என் எல்லா வேலைகளையும் என் நண்பரே செய்து வந்திருந்தார் உண்மையில் எனக்கு எந்த வேலையும் தெரியவில்லை. இதை உணர்ந்த அந்தக் கணம்தான் என் வாழ்நாளின் முதல் தோல்வி. அன்று இந்தத் தொழிலைக் கற்று கொள்ளவேண்டும் என்ற முனைப்பும் தீவிரம் ஆனது. தொழிலை எங்கு துவங்குவது, யாரிடம் கற்பது என்று சிந்தித்தேன்.

யாரோ செலவில் தொழில் கற்றுக்கொள்வது நல்லது என்று பட்டது. உடனே என் ஆடம்பரங்களை எல்லாம் விட்டு விட்டேன். திருப்பூரில் ஒரு சிறிய பனியன் கம்பெனியில் வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவன் என்று பொய் சொல்லிக்கொண்டு பனியன் உற்பத்தியின் அடிப்படை வேலையில் சேர்ந்தேன். பின்பு படிப்படியாக அதே கம்பெனியில் தொழில் கற்றுக் கொண்டு மேலே வந்தேன்.

எனக்குள் இன்னும் வளர வேண்டும் என்ற தேடல் இருந்துகொண்டே இருந்தது. ஆகவே, அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி வேறொரு நிறுவனத்தில் தர மேம்பாட்டு துணை அதிகாரியாக பணியில் இணைந்தேன். அப்பொழுது ணஇ (ணன்ஹப்ண்ற்ஹ் இர்ய்ற்ழ்ர்ப்) தர மேம்பாட்டு அதிகாரி என்றால் மிகவும் மிடுக்காக இருக்கும். ஓர் ஆலைக்கு சென்று பரிசோதனை செய்வதுதான் வேலை.

கிராமப் பின்புலத்தில் வந்த நீங்கள் ஒரு பன்னாட்டு நிறுவன மேலாளராக வளர்ந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்?

லிண்டாஸ் என்ற நிறுவனத்தில் துணை தர மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி கொண்டிருந்தேன். அப்பொழுது எங்கள் நிறுவனத்தின் மெர்ச்சண்டைஸர் (ஙங்ழ்ஸ்ரீட்ஹய்க்ண்ள்ங்ழ்) கம்பெனி தயாரிக்கும் பொருட்களின் சாம்பிள்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்வது வழக்கம். ஒருநாள் சாம்பிள்களை பின்னால் அமர்ந்து பிடித்துக் கொள்வதற்கு ஆளில்லாமல் போகவே என்னை அழைத்து சென்றார். நாங்கள் ஒரு புகழ்பெற்ற பையிங் ஹவுஸ் (ஆன்ஹ்ண்ய்ஞ் ஏர்ன்ள்ங்) அலுவலகம் சென்றடைந்தோம்.

அந்த அலுவலகத்தில் அதிகாரிகளாக ஓர் ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். உள்ளே செல்லும்முன் மெர்சண்டைஸர் என்னிடம், ”நீ எல்லாம் உள்ளே வரக் கூடாது. இதோ! இந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டு அந்த ஓரத்தில் அமர்ந்திரு. எக்காரணம் கொண்டும் உள்ளே வர வேண்டாம்” என்று பணித்திருந்தார். நம்மை இப்படியெல்லாம் நடத்துகிறார்களே என்று உள்ளூர ஒரு வலி இல்லாமலில்லை.

ஆனால் உள்ளே சென்ற மெர்சண்டைஸர் என்னைப் போலவே அந்த அதிகாரிகளின் முன் கைட்டி நின்றிருந்தார். எடுத்துச் சென்ற சாம்பிள்கள் சரியானதாக இல்லை என்று அந்த அதிகாரிகள், சாம்பிள்களை மிகுந்த வசைகளினிடையே திரும்ப அனுப்பி விட்டனர். மீண்டும் வேறொரு சாம்பிள்களோடு அதே அதிகாரியைப் பார்க்க அன்று மாலையே அந்த மெர்சண்டைசரும் நானும் சென்றோம். இந்த முறை அவர் என்னை உள்ளே வர வேண்டாம் என்று பணித்தும், நான் அதையும் மீறி உள்ளே சென்று அவர் பின்னால் நின்று கொண்டேன்.

மீண்டும் சாம்பிள் சரியில்லை. அதே வசை. என்னால் பொறுக்க முடியாமல், ”என்ன தவறு என்பதை தெளிவாகக் கூறினால் நான் ஒரு முறை முயற்சிப்பதாக” சொன்னேன். என்னை மேலும் கீழும் பார்த்த அதிகாரி, ”உனக்கு இந்தத் தொழில் பற்றி என்ன தெரியும்? என்ன படித்திருக்கிறாய்? முதலில் வெளியே போ!” என்றார். அன்று அவர் சொன்னது மிகச் சரி.

எனக்கு அந்தத் தொழில் பற்றி எதுவும் தெரியாது. நான் எதையும் படித்திருக்கவில்லை. ஆனால், இனியும் படிக்காமல் இருக்கப் போவதில்லை என்ற முனைப்பில் இந்தப் படிப்பை யார் கற்றுத் தருகிறார்கள் என்று வெறித் தனமாக தேட துவங்கினேன். 1980களில் இந்தியாவிலேயே பனியன் தயாரிப்பு குறித்து கற்றுத்தர எந்தப் பல்கலைக்கழகங்களும் இருக்க வில்லை. இருந்தாலும் என் தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது.

பின்பு இந்த பனியன் ஆலைகளுக்கு எல்லாம் ஏதாவது தொழில்நுட்ப உதவி செய்பவர்கள் இருப்பார்கள். அவர்களை அணுகலாம் என்று தேடிய போது அஉபஇ இஐபதஅ என்ற அமைப்பு தொழிற்சாலைகளுக்கு ஆலோசனை மையம் ஒன்றை நடத்தி வருவதாக அறிந்து அவர்களை தொடர்பு கொண்டேன். அப்பொழுது அவர்கள் நிட் கார்மெண்டிங் என்ற வகுப்பு நடப்பதாக கூறினார்கள்.

உடனே அந்த வகுப்பில் சேர்ந்தேன். அதைத் தொடர்ந்து, அங்கு மேலும் பல வகுப்புகள் துவங்கப்பட்டன. அந்த மையத்தில் துவங்கப்பட்ட அத்தனை வகுப்புகளிலும் சேர்ந்து தேர்வு பெற்ற ஒரே மாணவன் நான்தான். என் வகுப்பு நேரங்களில் ஏராளமான கேள்விகள் கேட்டேன். பல நேரங்களில் அவை முட்டாள்தனமாக இருந்ததும் உண்டு.

ஆனால் ஒரு மனிதனை வெற்றியாளனாக ஆக்குவது நம் புரிதல்தான். அதற்காக காலையில் வகுப்புக்கும் மாலையில் என் நிறுவனத்தில் வேலைக்குச் செல்வேன். என் ஆர்வமும் உழைப்பும் அங்கு இருந்தவர்களுக்கு என்னை ஒரு தனித்துவத்தோடு அடையாளப் படுத்திக் காட்டியது. அங்கு மேலாளராக இருந்த ராமமூர்த்தி என்பவர்தான் என் முதல் வழிகாட்டி. அந்த சமயத்தில் ”ஐடிசி” என்ற பன்னாட்டு நிறுவனம் திருப்பூருக்கு வேலைக்கு ஆட்கள் தேடி வந்தார்கள்.

அந்த நேர்காணல்களில் பல பொறியாளர்கள் பங்கேற்றும், நிறுவனத்தின் தேவைகளை பூர்த்திசெய்த ஒரே நபர் நான்தான் என்ற அடிப்படையிலும், சிட்ராவில் நான் பயின்றிருந்த அனைத்து வகுப்பு சான்றிதழ்களும் அனைத்திற்கும் மேலாய் ராமமூர்த்தி அவர்கள் என்னை பரிந்துரைத்ததும் என்னை கிராம பின்புலத்தில் இருந்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியராக என்னை உயர்த்தியது. என் கனவுகள் புலர ஆரம்பித்தது அந்தப் பொழுதுகளில்தான்.

கடைநிலை ஊழியர் பதவியில் இருந்த எப்படி உங்களால் ஒரு மேலாளராக உயர முடிந்தது?

”ஐடிசி” ஒரு பன்னாட்டு நிறுவனம் என்பதால் அங்கு அவர்கள் கடைப்பிடித்த கொள்கைகளும் வரைமுறைகளும் இத்தனை நாட்கள் நான் பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்து மாறுபட்டு இருந்தது. அந்தக் கலாச்சாரத்தை கற்கத் துவங்கினேன். நான் இந்தத் துறையில் நுழைந்தது ஒரு விபத்துதான். ஒருவன் தன்னை காப்பாற்றி கொள்ள நீச்சல் கற்று பின்பு அந்தத் துறையில் மாபெரும் நீச்சல் வீரனாக வர வேண்டும் என்ற ஆர்வம் கொள்வதை போல் தான் என் நிலையும்.

எனக்கு ”ஐடிசி”யில் நல்ல வேலை, நல்ல சம்பளம் அது போதும் என்று நான் இருந்திருந்தால் என்னால் திருப்பூரை தாண்டி வெளியே வந்திருக்க வாய்ப்பில்லை. அடுத்தது என்ன என்று கற்றுக் கொள்கிற வேட்கையும், நம்மை தனித்துவமாக காட்டிக் கொள்கிற பண்பும்தான் ஒரு மனிதனை உயர்த்தும் என்பது நம்பிக்கை.

நீங்கள் கடைப்பிடித்த தனித்துவமான அல்லது வித்தியாசமான அணுகுமுறை ஒன்றை கூற முடியுமா?

எனக்கு ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் இருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. அந்த நேர்காணலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்து, பின்பு அதற்கான செயல்முறைகளில் இறங்கினேன். தோல்வியை தவிர்க்க விளையாடுவதை காட்டிலும், வெற்றி பெற வேண்டும் என்று விளையாடுவதுதான் வித்தியாசமான அணுகுமுறை. அதற்கேற்ப என் வெற்றியை தக்க வைக்க வித்தியாசமான முறையில் முயற்சி செய்தேன்.

1. நேர்காணலில் என்னென்ன கேள்விகள் கேட்பார்கள் என்று நானே யூகித்து, இணையதளம், புத்தகம் அனைத்தையும் தேடி ஒரு கையேடு ஒன்றை தயாரித்தேன்.

2. நேர்காணலுக்கு ஒரு நாள் முன்பே சென்னை சென்று அங்கு நான் தங்கியிருக்கும் பகுதியிலிருந்து நேர்காணல் நடக்கும் இடம் எவ்வளவு தூரம், எப்படி செல்ல வேண்டும் என களப் பணியாற்றினேன்.

3. அடுத்த நாள் நேர்காணலின் போது ஒரு மணி நேரம் முன்பே அந்த இடத்தை சென்றடைந்தேன். அன்று சென்னையில் நல்ல மழை என்பதால் நேர் காணலுக்கு வர வேண்டிய அனைவரும் தாமதமாகவே வந்தனர். அதிலும் குறிப்பாக, பெரும்பாலானோர் நனைத்து தெப்பமாக வந்தனர்.

4. எங்கள் நேர்காணல் நடந்த இடம் ஒரு நட்சத்திர விடுதி யென்பதால் நான் முன்பே யூகித்து ஒரு வாடகைக் காரில் சென்று இறங்கி கொண்டேன். பெரும் பாலும் கார்களை நட்சத்திர விடுதிக்குள் அனுமதிக்கும் பழக்கம் உண்டு. எனவே, எந்தவித பாதிப்பும் இன்றி மிகவும் மிடுக்காக நேர் காணலை சந்தித்தேன்.

5. அன்று நேர்காணல் செய்த பெண்மணி என்னை கேள்வி கேட்க முனைகையில் என் கையில் இருந்த கையேடு குறித்துக் கேட்டார். நானே நேர்காணலுக்காக அதை பிரத்யேகமாக தயாரித்ததாகக் கூறினேன். என் அணுகு முறையையும் நம்பிக்கையையும் பாராட்டி அடுத்த சுற்றுக்குத் தேர்வு செய்தார். அந்த நேர்காணலில் வெற்றியும் பெற்றேன்.

இது போல் நம்மை அடையாளப்படுத்தி கொள்ள நம் நிறைகுறைகளை நாமே சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதை நாங்கள் ஆங்கிலத்தில், S-strenth, W-Weakness,O-Oppourtunity, T-Threat (SWOT) Analysis என்கிறோம். நம் பலம், பலவீனம், வாய்ப்புகள் மற்றும் செய்யக் கூடாதவைகள் எது என்று நம் ஒவ்வொரு செயலிலும் நாம் சிந்தித்து பார்த்தால் வெற்றி நிச்சயம்.

உயர்ந்த பதவியில் உட்கார்ந்த போது உங்கள் சகாக்கள் எப்படி உங்களை முதலில் அங்கீகரித்தார்கள்?

நான் மேலாளரான புதிதில் என் சகாக்களால் நான் சரியாக அங்கீகரிக்கப் படவில்லை. அதற்கான காரணங்கள், என் கிராமப் பின்புலம், படிப்பு. வெறும் சோஸியாலஜி படிப்பைப் படித்து விட்டு, மொத்த இந்தியாவிற்கே மேலாளராக நான் இருந்ததை யாராலும் ஒப்புக் கொள்ள முடியவில்லை. நான் மேலாளரான போது என் வயது 32. இதற்கு முன் மேலாளராக இருந்த அனுபவமும் இல்லை. எனவே, நான் பல நேரங்களில் எண்ணற்ற இன்னல்களைச் சந்தித்தேன்.

மேலாளர் என்ற பதவி பற்றிய தவறான புரிதல். அதற்கு மற்றொரு காரணம், எனக்கு வேலை நன்றாகச் செய்யத் தெரியுமே, அன்றி மற்றவர்களை எவ்வாறு வேலை செய்ய வைப்பது என்ற கலை தெரியவில்லை. இதற்காக நிறைய பயிற்சி வகுப்புகள் பங்கு பெற்று எண்ணற்ற சான்றிதழ்கள் பெற்று, மெல்ல மெல்ல அனுபவம் பெற்றேன். எனக்கான அங்கீகாரத்தை தக்க வைக்க என் திறமைகளுக்கான சரியான களம் கிடைக்கும் பொழுதெல்லாம் என்னை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன்.

இளைஞர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டும்?

இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள மேலும் நிறைய படிக்க வேண்டும். நிறைய அனுபவம் பெறவேண்டும். நான் இளைஞர்களை மூன்று வகையாக பிரிக்கிறேன். ஒன்று 19 வயதுக்கு உட்பட்டவர்கள். கல்லூரி முடிக்கும் மாணவர்கள், மூன்றாவது எந்த வேலை கிடைத்தாலும் போதும் என்று நினைக்கிற இளைஞர்கள். முதல் வகையினரை இனம் காண வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.

இரண்டாம் வகையினர் முதலில் நேர்காணல்களை சந்திப்பது எப்படி, எந்தத் துறையில் படிக்கிறார்களோ, அதன் சார்பு துறைகள் என்னென்ன நல்ல வேலைகள் பெற அடிப்படையில் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான திட்டமிடல் வேண்டும். மூன்றாவது வகையினர், அவர்கள் எல்லை தாண்டி சிந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். எவன் ஒருவன் தன் தன்னிறைவு என்பதே இல்லாமல் வேலை நேரத்தில் அடுத்த கட்டத்திற்கு உயர சில மணி நேரங்களாவது செலவிடுகிறானோ, அவனே வெற்றியாளன். தணியாத தாகம் மட்டுமே இளைஞர்களை மட்டும் அல்ல. அனைவரையும் மேலே உயர்த்தும் தாரக மந்திரம்.

நீங்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகள் குறித்து?

நான் ‘இளைஞர்கள் நேர்காணல்களை சந்திப்பது எப்படி’ என்பது பற்றியும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவ்வப்போது ஏற்றுமதி கொள்கை களை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதை இங்கு இருக்கக்கூடிய சிறிய ஏற்றுமதி யாளர்களுக்கு கற்றுத் தருகிறேன். என் பயிற்சி வகுப்புகள், சோஸியல் ஆடிட்டிங் (Social Auditing), இன்ஸ்பெக்ஷன் (Inspection), மெர்சண்டைசிங் (Merchandising), சப்ளை செயின் செக்யூரிட்டி (Supply Chain Security) போன்ற தலைப்புகளில் அமையும். தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரிகள் சிலவற்றிலும் வகுப்புகள் நடத்தினேன்.

மார்க்கெட்டிங் துறை சார்ந்த உங்கள் அனுபவங்கள் குறித்து?

நான் பணியாற்றிய துறை சில்லறை வணிகம். அங்கு ஆயிரக்கணக்கான துணி வகைகள் விற்பது ஒரு கணிப்பொறி விற்பதற்கு சமம். நாங்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். எனக்கு மார்க்கெட்டிங் துறையின் பிதாமகன் ”சாம் வால்டன்” அவர்கள்தான். அவர்கள் வாடிக்கையாளர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் என்னை மார்க்கெட்டிங் துறையில் சிறப்பாகச் செயல்பட உதவியது.

பெரியவர் சிறியவர் என்ற பேதமும் இல்லை. எப்படி இருப்பினும் வாடிக்கையாளர் வாடிக்கையாளர்தான். நல்ல தரமான சேவையிருந்தால் எந்த வாடிக்கையாளரும் நம்மைத் தேடி வருவது நிச்சயம் என்று அவர் சொன்ன கொள்கைகளையே இன்றளவும் கடைப்பிடித்து வருகிறேன்.

உங்கள் அயல்நாட்டுப் பயண அனுபவங்கள் பற்றி?

நான் கல்லூரி படிக்கையில் யானையை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டதை போல் விமானத்தை தொட்டுப் பார்க்க மட்டுமே ஆசையிருந்தது. ஆனால் கடின உழைப்பு, விடா முயற்சி, சில சாதுர்யமான புத்தி இவைகள்தான் மனிதனை மேம்படுத்துகின்றன. இன்று நான் ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஐரோப்பிய நாடுகள் என பல நாடுகள் சென்று வந்துள்ளேன்.

என் உணர்வு ஒன்றுதான். இந்தியாவில் இருக்கும் தரம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மூலப் பொருட்கள் எவையும் வேறு எந்த நாடுகளிலும் இல்லை என்று உற்சாகமாகப் பேசி முடித்தவருக்கு மிகவும் பிடித்த கொள்கை சாம் வால்டன் கூறிய, “Celebrate your success and find humour in your failure”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *