– சாதனா
மூளை எனும் ஹார்ட்வேருக்கு நீங்களே சாப்ட்வேர் எழுதுங்கள்
உங்கள் மூளைகூட கம்ப்யூட்டர் மாதிரி தான். அதனால் எல்லாம் செய்ய முடியும். ஆனால் அது என்ன செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு ஏற்றவாறு நாம் புரோகிராம் செய்ய வேண்டும். அதாவது சாப்ட்வேர் எழுத வேண்டும்.
கம்ப்யூட்டருக்கென புரோகிராமிங் லாங்குவேஜ் இருப்பதுபோல மூளைக்கும் புரோகிராமிங் லாங்குவேஜ் இருக்கிறது.
உங்கள் மூளைக்கு தெரிந்த மொழி தமிழோ ஆங்கிலமோ இல்லை. படங்கள்தான். ஆப்பிள் என்றவுடன் உங்கள் மூளையில் ஆப்பிள் என்ற தமிழ் அல்லது ஆங்கில வார்த்தை நினைவில் வருகிறதா? இல்லை. ஆப்பிளே ஞாபகம் வருகிறது இல்லையா?
அதனால்தான் சொல்கிறேன். மூளையின் மொழி காட்சிகள்தான். எனவே, உங்கள் மூளைக்கு நீங்கள் காட்சி மொழியில்தான் புரோகிராம் எழுத வேண்டும்.
எனவே, நான் டாக்டராக வேண்டும் என்பதற்கு பதில் உங்களை ஒரு டாக்டராக கற்பனை செய்து பாருங்கள். இதுதான் உங்கள் மூளைக்கு புரிந்த மொழி.
மூளைக்கு உண்மையில் நடப்பதற்கும், கற்பனைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. நன்கு பழுத்த வாசனையான எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி, உங்கள் நாக்கில் பிழியுங்கள். இதை படிக்கும்போதே உங்களுக்கு உமிழ்நீர் கூடுதலாக சுரக்கிறதல்லவா?
இதுதான் நம் மனதை இயங்க வைக்கும் முறை. எலுமிச்சை பழச்சாறை சுவைத்தால்தான் என்றில்லை. சுவைப்பது போல கற்பனை செய்தாலே நமக்கு உமிழ்நீர் சுரக்கிறது, பாருங்கள்.
ஆக, நாளை நடக்க வேண்டியதை எல்லாம், இப்போதே நடப்பது போல கற்பனை செய்தாலே போதும். நீங்கள் நினைத்தது போலவே நாளை எல்லாம் நடக்கும்.
முதன் முதலாக சைக்கிள் ஓட்டும்போது கவனித்திருக்கிறீர்களா? எதிரில் வரும் வயதான வரைப்பார்த்து, ‘ஐயோ! மோதப்போகிறோம்’ என்று நினைப்போம். அதுபோலவே மோதி விடுவோம். காரணம், மனம் முதலில் மோதி விட்டது. உடல் அதனைப் பின்பற்றுகிறது.
டிஸ்னிலேண்ட் கட்டி முடிக்கப்பட்ட போது திறப்புவிழாவிற்கு வந்திருந்தவர்களில் ஒருவர் சொன்னார், ‘இவ்வளவு சிறப்பாக கட்டப்பட்ட டிஸ்னிலேண்ட்டை காண வால்ட்டிஸ்னிக்கு கொடுத்து வைக்கவில்லை’. டிஸ்னிலேண்டை கட்டி முடிப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் வால்ட்டிஸ்னி இறந்து விட்டார் என்பதால் அப்படி சொன்னார்.
அங்கே துப்புரவு பணியில் இருந்த டிஸ்னிலேன்ட் ஊழியர் சொன்னார், ‘யார் சொன்னது. வால்ட் டிஸ்னி இதைப் பார்த்ததால் தான் இங்கே இது உருவானது.’
ஆம். வால்ட் டிஸ்னி தன் மனதில் முதலில் கட்டினார். அதன் பிறகுதான் நிலத்தில் அது கட்டப்பட்டது.
சரி. நாளை நடக்கப்போகும் வெற்றிகளுக்கு நம் மூளையை புரோகிராம் செய்வது எப்படி?
அதற்கான சில வழிகள் இதோ :
1. தாஜ்மஹால் எங்கே இருக்கிறது? ஆக்ராவில். அதற்கு முன்னால் அது எங்கே இருந்தது தெரியுமா? ஷாஜஹான் மனதில். எனவே நாளை அடையப்போகும் நிலை இப்போதே உங்கள் மனதில் தெளிவாக இருக்க வேண்டும். காட்சிகளாக இருக்க வேண்டும். எனவே வெற்றிக் காட்சிகளை எப்போதும் மனதில் கண்டு கொண்டே இருங்கள்.
2. இந்த காட்சிப்படுத்துதல் முறையில் காட்சிகளை தெளிவாகக் காண வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் இன்னோவா கார் வாங்க வேண்டும் என்றால் காரில் போவதுபோல கற்பனை செய்தால் பின்னால் யாருடைய இன்னோவா காரிலாவது நீங்கள் போவது வரைதான் நடக்கும். எனவே காரில் செல்லும் காட்சியை கற்பனை செய்யும்போது உரிமையாளர் போல காட்சிப்படுத்தவேண்டும்.இல்லை யென்றால் கார் ஓட்டுவது போல வெறுமனே காட்சி செய்தால் டிரைவராகத்தான் ஆவீர்கள். அல்லது ஒருநாள் மட்டும்கூட ஓட்டிப் பார்ப்பீர்கள். எனவே, எச்சரிக்கை ப்ளீஸ்.
3. எவ்வளவுதான் நன்றாக படித்திருந்தாலும் தேர்வறையில் பதட்டத்தாலேயே எல்லாம் மறந்து விடுகிறது. இல்லையா? இதைத்தவிர்க்க தினமும் தேர்வு நாள் நடக்கும் காட்சிகளை கற்பனையில் ஒரு படம் போல பாருங்கள். தேர்வு நாளன்று உற்சாகத்தோடு எழுந்திருக்கிறீர்கள். நன்றாக பாடங்களை படித்திருப்பதால் பதட்டமின்றி தேர்வறைக்குச் செல்கிறீர்கள். கேள்வித்தாள் தருகிறார்கள். நம்பிக்கையோடு வாங்கி அதை நிதானமாகப் படிக்கிறீர்கள். எல்லாம் உங்களுக்கு தெரிந்த கேள்விகள் என்பதால் மகிழ்ச்சியோடு தேர்வெழுதுகிறீர்கள். இந்தக் காட்சிகளை விரிவாக தினமும் கற்பனை செய்யுங்கள். இதனால் தேர்வெழுதுகிற நாளில் அந்தச்சூழல் உங்களுக்கு புதிதாக இருக்காது.
சில சமயங் களில் அதிக பதட்டத்தின் காரணமாக தேர்வறையில் பாடங்கள் மறந்து போய்விடுகிறது இல்லையா? அந்த பதில்களை நினைவில் கொண்டு வரவும் இந்த காட்சிப்படுத்தும் முறையை பயன் படுத்தலாம். எந்தக்கேள்விக்கு விடை தெரியவில்லையோ, அதைப் படித்த சூழலுக்கு மனதைக் கொண்டு செல்லுங்கள். வீட்டில் எந்த இடத்தில் உட்கார்ந்து படித்தீர்களோ, அந்த இடத்தில் உட்கார்ந்து புத்தகத்தைத் திறந்து அந்தக் கேள்விக்கான பதிலை படிப்பது போல கற்பனை செய்யுங்கள். இப்பொழுது கடகடவென எல்லா வரிகளும் உங்களுக்கு நினைவில் வந்துவிடும்.
இந்த வெற்றிக்காட்சிகளை நம் மூளையில் பதிய வைக்க இன்னொரு முறையும் இருக்கிறது. இந்த வெற்றிக்காட்சியை கற்பனை செய்து கடைசியில் அதை ஒரு போட்டோ போல மாற்றுங்கள். அப்போது உங்கள் கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் யோக முத்திரை போல அழுத்துங்கள். இப்போது நீங்கள் கண்ட வெற்றிக்காட்சி ஒரு போட்டோ போல உங்கள் மனதில் பதிந்து விடும். பிறகு எப்போதெல்லாம் உற்சாகம் தேவையோ அப்போதெல்லாம் உங்கள் கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் அழுத்தினால் போதும் உற்சாகம் பெறுவீர்கள்.
Leave a Reply