ஒன்றுபடுங்கள் வென்றுவிடுங்கள்


தே. சௌந்தர்ராஜன்

வீரதீர செயல்களை செய்ய விருப்பப் படுவோர், அதிகமாக தேர்ந்தெடுக்கும் களம் மலையேற்றம். முன்னே பின்னே தெரியாத இந்த மலைப்பாதையில் உயிருக்கு ஆபத்து என்பது சர்வ சாதாரணம். பூஜ்யம் டிகிரிக்கு கீழே உள்ள சீதோஷ்ண நிலையில், வெள்ளிப்பனி மலைகளில் நடந்து செல்வது என்பது மிகப்பெரிய சவால்.

மயிர்கூச்செறியச் செய்யும் இந்தப் பயணங் களில், செல்வோர் தனியாகச் செல்வதில்லை. ஒரு குழுவாகச் செல்வார்கள். இவர்கள் இந்தப் பயணங்களின்போது தங்களை ஒருவருக்கொருவர் நீளமான கயிற்றால் கட்டி இணைத்திருப்பார்கள். ஏன் இப்படி?

அந்தப் பனிமலையில் ஆங்காங்கே மிகப் பெரிய ஆழ்குழிகள் இருக்கும். ஆனால், அவை நம் கண்ணுக்குப் புலப்படாது. எத்தனை கவனமாகச் சென்றாலும், இந்தக் குழிகளில் இருந்து தப்ப முடியாது. ஏனெனில் இந்தக் குழிகள் பனிப் பொழிவுகளால் நிறைந்திருக்கும்.

நீரில் விழுந்தால் நீந்தி வெளிவரமுடியும். ஆழமான சேற்றிலும், இந்தப் பனிமூடிய பள்ளங்களிலும் விழுந்து விட்டால் யாராலும் தப்ப முடியாது. வீழ்ந்துவிட்ட அந்த மனிதனின் முயற்சிகள் அங்கே செல்லுபடியாகாது. அவர் தன்னை மற்றவர்களுடன் இணைத்திருப்பதால் அந்த நண்பர்கள், இவரை தூக்கிக் காப்பாற்ற முடியும்.

தொழில் என்பதும் ஒரு சவால்தான். நூறு சதவிகிதம் பாதுகாப்பு யாருக்குமே இல்லை. எத்தனை விழிப்போடு செயல்பட்டாலும் சில வேளைகளில் சில தடுமாற்றங்கள், சில சறுக்கல்கள் வருவதுண்டு. அந்த நேரத்தில் அவர் தன்னைத் தானே நிலைநிறுத்திக்கொள்வது, மீட்டெடுப்பது சிரமமான காரியம். இதுபோன்ற நேரங்களில் ஒரு வெளிஉதவி தேவைப்படுகிறது. கோரமான பற்களையும், பலம் வாய்ந்த கால்களையும் கொண்ட கம்பீரமான சிங்கம்கூட வலைக்குள் மாட்டிக் கொண்டால் அங்கு ஒரு சுண்டெலியின் உதவி தேவைப்படுகிறது.

அநேக தொழில் முனைவோர் தனிமரமாக நிற்கிறார்கள். தன்னை ஒத்த தொழில் முனைவோருடன் கலந்து வாழாமல் தனித்தீவாக வாழ்கிறார்கள். உயரமான தனிமரத்தின்மீதுதான் இடி தாக்கும் என்ற விதியை அவர்கள் உணராது இருக்கிறார்கள்.
சில காரணங்களுக்காக இவர்கள் தனித்தன்மையை போற்றுகிறார்கள்.

1. தான் மட்டும் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். மற்றவர்கள் யாரும் தன் உயரத்திற்கு வளர்ந்து விடக்கூடாது என்ற கெட்ட எண்ணம்.

2. தன் வளர்ச்சி கண்டு அதன் மேல் பொறாமை கொண்டு, அதன் காரணமாக தனது வளர்ச்சிக்கு விரோதமாக குழி தோண்டுவார்கள்.

3. தனது தொழில் ரகசியங்களை தெரிந்து கொண்டு தங்களுக்குப் போட்டியை உருவாக்குவார்கள்.

4. கடன் கேட்டு தொல்லை செய்வார்கள்.

5. இன்னும் சிலர் தொழிலில் நொடிந்து விட்டோம். இது வெளியே தெரிந்தால் தன் மதிப்பு பாதிக்கும் என்ற தாழ்வு மனப்பான்மையால் ஒதுங்குவார்கள்.

இன்னும் சிலர், தங்களுக்கு உறவு வட்டாரங்கள், நட்பு வட்டாரங்கள் இருக்கும். ஆனால் அவர்களிடம் ஆயிரம் கதை பேசுவார்கள். தொழில் பற்றி மட்டும் வாய் திறக்க மாட்டார்கள். அதை ஒரு பெரிய பாதுகாப்பு உணர்வு என்று போற்றுகிறார்கள். ஆனால், ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இவையாவும் தவறான அபிப்பிராயங்கள் என்பது புரிய வரும்.

இன்று பரம ரகசியம் என்று எதுவுமே இல்லை. எல்லாமே திறந்த வெளிப்பல்கலைக் கழகங்கள். இன்று எந்த தொழில்நுட்ப அறிவும், மேலாண்மைத்திறனும் யாவருக்கும் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. ஒவ்வொருவரின் தனித்திறனும் (மய்ண்வ்ன்ங்) தொழில் ஈடுபாடுமே அவர்களை நிலை நிறுத்துகிறது. உயர்த்துகிறது!

தொழில் முனைவோர், வணிகர்கள் இணக்கமாக ஓர் அமைப்பின் மூலம் இணைந்திருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய பலமாகவும், ஒரு பாலமாகவும் அமையும்.

ஒரு தொழில் முனைவோரின் பிரச்சனை அதே தொழிலில் உள்ள மற்றொருவருக்குத்தான் புரியும். தன் உறவுக்காரர்களான ஆசிரியர் களிடமோ, மருத்துவர்களிடமோ தங்கள் தொழில் சம்பந்தமான பிரச்சனையை பகிர்ந்துகொள்ள முடியாது.

1. தங்கள் சிக்கல்களை பகிர்ந்துகொள்வதன் மூலம் மனஅழுத்தம் (நற்ழ்ங்ள்ள்) குறைகிறது. மனப்புழுக்கம் குறைகிறது.

2. பல சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கிறது.

3. நல்ல கருத்துக்களை, புதிய உத்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள முடிகிறது.

4. அரசின் புதிய திட்டங்களின் மூலம் தங்களுக்கு ……….பாதிப்பு இருந்தால், அதை பலமாக வெளிப் படுத்த, எதிர்க்க முடிகிறது.

ஓர் அன்பருக்கு தொழிலில் சறுக்கல்கள் வரும்போது மற்றவர்கள் நல்ல வழிகாட்டுதல் மூலம், தங்கள் செல்வாக்கு மூலம், பண உதவி மூலம், தார்மீக ஆதரவு மூலமும் உதவ முடிகிறது. மனம் தளர்ந்துபோய் இருப்போர் அந்த நேரத்தில் தெளிவான முடிவு எடுக்க முடியாது. அந்த வேளையில் தனக்கு பக்கபலமாக பலர் இருக்கிறார்கள் என்ற உணர்வு பல கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காது.

ஆகவே, தொழில் முனைவோர், வணிகர்கள் தங்கள் நலவிரும்பிகளோடு (ரங்ப்ப் ரண்ள்ட்ங்ழ்) ஒரு கூட்டமைப்பு வைத்துக்கொண்டு ஒருவருக் கொருவர் ஒத்தாசையுடன் வாழும்போது தொழிலில் ஜெயிக்கலாம். சறுக்கலில் (விழாமல்) தப்பிக்கலாம். மகிழ்வோடு வாழலாம்.

சுயநல மூட்டைகளாக முடங்கிவிடாதீர்கள். உங்கள் பணமூட்டைகள் எப்போதும் உங்களை காப்பாற்றாது.

இணைந்து செயல்படுங்கள்!
உயர்ந்து வாழுங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *