ஈஷியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா

இந்த உலகம் ஆசிரியர்களால் ஆனது. இந்த உலகத்தில் உள்ள சாதனையாளர்கள் அனைவரும் ஓர் ஆசிரியரால் உருவாக்கப்பட்டவர்கள்தான். அப்துல் கலாம்கூட தனது இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று ஆசிரியரைத்தான் குறிப்பிடுகிறார்.

இதை நான் ஒரு நிகழ்ச்சியில் சொன்ன போது, ஒரு மாணவன்

கேட்டான், “சார்! எனக்கு ஒரு சந்தேகம். ஆசிரியர்தான் ஒரு மாணவனை உருவாக்குகிறார் என்றால் அவரிடம் படித்த எல்லோரும் அல்லவா வாழ்வில் உயர்ந்திருக்க வேண்டும்? அப்துல்கலாம் அவர்களோடு படித்தவர்களில் அவர் மட்டும்தானே இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார். அப்படியிருக்கையில் எப்படி ஆசிரியரை சொல்ல முடியும்.”

அவனுக்கு நான் கொடுத்த விளக்கம் இது தான் – துரோணாச்சரியரிடம் பாண்டவர்கள் கௌரவர்கள் மட்டுமல்ல, அவரது புதல்வன் அஸ்வத்தாமனும் வில் வித்தை பயின்றார். என்ன தான் குரு பொதுவானவர் என்றாலும் தன் மகனுக்கு நிச்சயம் கூடுதல் பயிற்சி கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் வில் வித்தையில் அஸ்வத்தாமனைவிட சிறந்து விளங்கியது அர்ஜுனன்.

அர்ஜுனானவது குருவுடன் இருந்து நேரடியாக கற்றுக்கொண்டான். ஏகலைவனோ குருவை மனதில் வரித்து கற்றுக்கொண்டவன். அவன் அர்ஜுனனைவிட வில் சிறந்தவனாய் விளங்கினான். ஆக, கற்றுக்கொடுப்பவர் கையில் இல்லை. ஆர்வத்தோடு கற்றுக்கொள்பவர்கள் கையில்தான் வெற்றி இருக்கிறது.

சிறந்த மாணவன்

நன்கு படித்தால்தான் என்றில்லை. நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் ஆர்வத்தோடும் வகுப்பில் பங்கெடுத்தாலே, அவர்கள் என்ன மதிப்பெண் எடுத்தாலும் ஆசிரியரின் பார்வையில் சிறந்த மாணவன்தான்.

பிடித்தமானவரா?

உங்கள் ஆசிரியருக்கு வகுப்பிலேயே மிகவும் பிடித்த மாணவர் யார்? வகுப்பிலேயே நன்கு படித்த மாணவர் யார் என்று நான் கேட்கவில்லை. பிடித்த மாணவர் யார்? குறும்புகள் செய்யாமல் அமைதியாக இருக்கும் மாணவர்கள்தான் ஆசிரியர்களுக்கு பிடித்தமாணவர்களாக இருப்பார்கள்.

பிடித்த மாணவராக..

ஆசிரியர்களை கிண்டல் செய்வது, பட்டப்பெயர் சூட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடாதீர்கள்.

வகுப்பு நடக்கும்போது சக மாணவர்களோடு பேசாதீர்கள். பிறகு இது உங்களுக்கு பழக்கமாகி விடும்.

விளையாடுவதற்கான இடம் கிரவுண்ட். வகுப்பறையில் விளையாட்டான மனநிலைக்கோ செயல்களுக்கோ இடம் கொடுக்காதீர்கள். கற்றல் மனநிலை வேறு. விளையாட்டான மனநிலை வேறு.

கற்பதைவிட கவனிப்பதை வைத்துத்தான் ஆசிரியர்கள் மாணவர்களை மதிப்பிடுவார்கள். பாடம் புரிகிறதோ, இல்லையோ வகுப்பில் அலட்சியமாக இல்லாமல் ஆர்வமாக கவனியுங்கள்.

பிடித்த மாணவராக மாறிவிட்டால், உங்களுக்கு பாடங்களை புரியவைக்கிற முயற்சியை ஆசிரியர்களே செய்வார்கள்.

ஆசிரியர்கள் பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள் என்பதால் உங்கள் பெற்றோர் களுக்கு உங்கள் மேல் உள்ள உரிமை உங்கள் ஆசிரியருக்கும் உண்டு.

நன்றாகப் படிக்கும் மாணவனோடு உங்களை ஒப்பிட்டுப் பேசினால் உங்களுக்கு ஒரு உதாரணத்தை தந்து உங்களை உற்சாகப்படுத்து வதாக எடுத்துக்கொள்ளுங்கள்.

திட்டினால் என்னைப் பிடிக்கவில்லை என்றல்ல அர்த்தம். என் செயல் பிடிக்கவில்லை என்றே அர்த்தம் என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஆசிரியர் தினம்

மாணவன் வெற்றி பெறும் தினம்தான், அந்த ஆசிரியருக்கான தினம். எனவே, ஆசிரியர் தினம் கொண்டாடுவதன் மூலமாக அல்ல. உங்கள் கற்றலை மேம்படுத்திக்கொள்வதன் மூலமாக உங்கள் ஆசிரியருக்கு மரியாதை செலுத்துங்கள்.

நீங்கள் ஹீரோவா? காமெடியனா?

சினிமாவில் ஆசிரியர்கள், காமெடிக் காக மட்டுமே காட்டப்படுகிறார்கள். சினிமாவில் ஹீரோவின் வேலையே ஆசிரியர்களைக் கிண்டல் அடிப்பது தான். ஆனால் நிஜத்தில் ஆசிரியர்களை கிண்டல் அடிப்பவர்கள்தான் தங்கள் வாழ்வில் காமெடியன்களாகிவிடுகிறார்கள் என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருங்கள்.

சிறந்த மாணவர்கள்

வகுப்பறையில் பாடம் நடத்துபவர் தான் என்றில்லை. வாழ்க்கையில் உங்களுக்கு எந்த ஒரு சின்ன விஷயத்தை, ஒருவர் கற்றுக்கொடுத்தாலும் அவரையும் மதியுங்கள். அவரும் ஆசிரியர்தான். கற்றுக் கொடுப்பவரை மதித்தால்தான் கற்றலையும் கற்றுக் கொண்டதையும் மதிப்பீர்கள்.

உங்கள் பெயர் பள்ளியில் இருக்கிறதா?

சில மாணவர்கள் தங்கள் பெயரை பெஞ்சில் கிறுக்கி வைப்பார்கள். இன்னும் சிலர் பாத்ரூமில். சிலர் பள்ளி டாப்பர்ஸ் லிஸ்டில்.

எல்லா மாணவர்களின் பெயரும் வருகைப் பதிவேட்டில் இருக்கும் என்றாலும் சிலர் மட்டும்தான் ஆசிரியர்கள் மனதில் தங்கள் பெயரை பதிய வைப்பார்கள்.

உங்கள் பெயர் பள்ளியில் இருக்கிறதா? எங்கே? என்று யோசித்துப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *