மன ஒருமைபாடு

– சாதனா

ஈஷியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

மனதை ஒருமுகப்படுத்தி ஒரு செயலை செய்வதை ‘கான்சென்ட்ரேஷன்’ என்கிறார்கள்.

பெரும்பாலும் எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் பற்றிக் குறைபட்டுக்கொள்வது இந்த விஷயத்தில்தான். சில மாணவர்களேகூட கேட்பதுண்டு, ”படிக்கும்போது ஏன் கான்சென்ட் ரேஷன் டைவர்ட் ஆகிறது?”

நான் மாணவர்களிடம் சிரித்துக்கொண்டே கேட்பேன். ”என்றாவது டிவி பார்க்கும்போது கான்சென்ட்ரேஷன் டைவர்ட் ஆகியிருக்கிறதா? இல்லை, விளையாடும்போதுதான் கான்சென்ட் ரேஷன் டைவர்ட் ஆகியிருக்கிறதா ?”

படிக்கும்போது மட்டும் கவனம் சிதறுவதற்கு காரணம், ஆர்வம் குறைவதுதான். ஒரு விஷயத்தில் உங்களுக்கு எந்த அளவிற்கு ஆர்வம் இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் கவனமும் இருக்கும்.

”மீண்டும் ஒருமுறை பிறந்து, உலகத்தில் உள்ளவற்றை எல்லாம் கற்கும் வாய்ப்பு கிடைத்தால், ‘மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி?’ என்பதைத்தான் முதலில் கற்றுக் கொள்வேன். அதன் பிறகு, எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டுமோ, அதையெல்லாம் சுலபமாக கற்றுக்கொள்வேன்” என்றார் விவேகானந்தர்.

எதையும் கவனச்சிதறலோடு செய்வது நமக்கு பழக்கமாகி விட்டது. பாட்டுக் கேட்டுக் கொண்டே படிக்கிறோம், டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுகிறோம். செல்ஃபோனில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுகிறோம். இனி மேல் எதையும் முழுக்கவனத்தோடு செய்வதை நாம் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

நம் மூளைக்கு, ‘மல்டி டாஸ்கிங்’ எனப்படும், பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் திறன் உண்டென்றாலும், கற்பதை பொறுத்தவரை, நம் கவனத்தை முழுமையாக வைத்தால்தான் நம்மால் வெற்றி பெறமுடியும்.

கான்சென்ட்ரேஷனை வளர்த்துக் கொள்ள சில எளிய வழிகள் :

தடை உத்தரவு

படித்துக்கொண்டே பாட்டுக் கேட்பது, டிவி பார்ப்பது, செல்ஃபோனில் மெசேஜ் பார்ப்பது போன்ற பழக்கங்களுக்கு முதலில் உங்களுக்கு நீங்களே தடை போட்டுக் கொள்ளுங்கள்.

நடத்தல் தியானம்

படித்தல் என்று இல்லை, எந்த செயல் செய்தாலும், அதில் முழுக்கவனத்தையும் வையுங்கள். உதாரணத்திற்கு காலை எழுந்தவுடன் பல் தேய்க்கிறீர்கள் என்றால், அப்போது வேறு எதைப் பற்றியும் யோசிக்காதீர்கள். உங்கள் முழுக் கவனமும் பல்லைத்தூய்மையாக்குவது பற்றியே இருக்கட்டும். உங்கள் ப்ரஷ்ஷின் அசைவின் மீதே முழுக்கவனத்தையும் வையுங்கள்.

சில பேர் குளிக்கும்போதுதான், அன்று செய்யவேண்டிய வேலைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பிப்பார்கள். இதனால் சோப்பு போடக்கூட மறந்துவிட்டு, குளித்துவிட்டு வந்துவிடுவார்கள். எனவே குளிக்கச்சென்றால் உங்கள் கவனம் முழுவதும் நீரின் குளுமை பற்றியும், உங்கள் உடல் தூய்மை பற்றியுமே இருக்க வேண்டும். எனவே இன்று முதல், எந்த செயல் செய்கிறீர்களோ அதிலேயே உங்கள் முழுக் கவனத்தையும் வையுங்கள். ஒரு மாதத்திற்கு பிறகு பாருங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதிலேயே உங்கள் முழுக்கவனமும் இருக்கும். கவனம் உங்களுக்கு பழக்கமாகிவிடும்.

அணை கட்டுங்கள்

மழை வெள்ளம் எப்படி ஆற்றில் கலந்து பிறகு கடலில் கலந்து வீணாகிறதோ, அதே போல மனதில் தோன்றும் எண்ணங்கள்கூட வெள்ளமாகி வீணாகிறது. இதைத்தடுக்க அணை கட்டுங்கள். கரை புரண்டு ஓடாதவாறு கரை கட்டுங்கள்.

அதாவது, படிக்கும்போது ஏதோ ஒரு எண்ணம் குறுக்கிட்டால் அதை பேப்பரில் எழுதி வையுங்கள். படித்து முடித்தவுடன் இதைப்பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் புத்தகம் கையில் இருக்கும் நீங்கள் எதைப்பற்றியாவது யோசித்துக் கொண்டிருப்பீர்கள். படித்துக் கொண்டே இருக்கிறோம் என்பதே மறந்துவிடும்.

முதல் நாளே படியுங்கள்

நாளை நடத்தப்போகும் பாடங்களை இன்றே படித்துவிட்டு செல்லுங்கள். இதனால் பாடம் நடத்தும்போது சுலபமாகப் புரியும். இதன் மூலம் ஆர்வமும் கவனிக்கும் திறனும் அதிகமாகும்.

கேள்விகளை படியுங்கள்.

புதிய பாடங்களை படிக்கும்போது முதலில் கேள்விகளை படித்துவிடுங்கள். இப்போது உங்கள் மனதில் கேள்விகள் எழுந்திருக்கும். இந்த சந்தேக கேள்விகளோடு பதில் பகுதியை படிக்கும்போது தெளிவும் கிடைக்கும். கவனமும் அதிகமாகும்.

இதையெல்லாம் கடைப்பிடித்து உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தி கல்வியில் மேம்பட வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *