– வினயா
உங்கள் சட்டையை நீங்களே பிடித்து உலுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறதா? அப்படி யானால் உங்களுக்குள் உண்மையின் குரல் ஒலிக்கத் தொடங்கி விட்டதாக அர்த்தம்.
ஆயிரம் ஆயிரம் கனவுகளை ஆழ்மனம் அடைகாத்தது. உங்கள் இளமைப்பருவம் தொட்டு அந்தக் கனவுகள், முட்டைக்குள் இருக்கும் உயிர் போல முட்டி மோதிக் கொண்டிருந்தன.
அந்தக் கனவுகளை எட்டுவதற்கான பாதை கடினமானதென்று கருதத் தொடங்கியதும், உங்கள் செயல் திட்டங்களைத் தள்ளிப் போட்டதும் ஆழ்மனதுக்குத் தெரியாது.
காலம் நகர நகர, காரியம் வளர வளர, உங்கள் கணக்குகள் மாறத் தொடங்கின. கருதிய கனவுகளே சிறகுகள் என்பதை மறந்து, அவற்றையே சுமைகளாய் நினைத்து தள்ளி வைத்த கனவுகளைத் தவிர்க்க முற்பட்டிருக்கலாம்.
”ஆசையெல்லாம் சரிதான்” நடைமுறைக்கு ஒத்து வரணுமே” என்று நீங்களே சமாதானப் படுத்திக்கொண்டு, சமரசம் செய்து கொண்டதையும் உங்கள் ஆழ்மனம் அறியாது.
முட்டைக்குள் முதிர்ந்த கரு முட்டி மோதத் தொடங்குவதுபோல உங்கள் கனவுகள் உங்களுக்குள் ஆர்ப்பரிக்கத் தொடங்குகின்றன.
முட்டையின் ஓடு போல இருந்த உங்கள் மனமோ, இரும்புக்கோட்டை போல் இறுகி கனவுகளை எட்டிப் பார்க்கவும் அனுமதிக்காத போது உங்களுக்குள் இருக்கும் இலட்சிய வாதிக்கும் சமரசவாதிக்கும் நடுவே சண்டை தொடங்குகிறது.
இந்த நேரத்தில்தான் உங்கள் சட்டையைப் பிடித்து நீங்களே உலுக்கவேண்டும். கனவுகளைத் துறப்பதற்குப் பெயர்தான் பொறுப்புடன் இருப்பதா? உங்களை நீங்களே கேட்க வேண்டும்.
நீங்கள் சமரசம் செய்து எட்டியிருக்கும் உயரத்தைவிடவும் பல மடங்குகள் கூடுதல் உயரத்தை, உங்கள் கனவுகளை எட்டுவதின்மூலம் எட்டலாம் என்பதை திடமாக நம்புங்கள்.
பூட்டிவைத்த கனவுகளை விடுவியுங்கள். உறங்குகிற உத்வேகத்தை புதுப்பித்திடுங்கள். கனவுகளை எட்டுவதே பொறுப்புக்கு அடையாளம் என்பதை உணர்ந்திடுங்கள்.
உங்கள் கனவுகளுக்காக இந்த உலகம் காத்திருக்கிறது. இந்த உலகில், எந்த முன்னடை யாளங்களும் இல்லாமல், தங்கள் கனவுகளை இறுகப் பற்றியதன் மூலமே சாதனையாளர்களாய் உயர்ந்த சாமானியர்கள் ஏராளம். அவர்களின் வரிசையில் வைரமாய் ஒளிவீசும் வாய்ப்பு உங்களுக்கும் உண்டு.
இந்த உலகம் உங்களுக்கு என்னென்ன உரிமைகளைத் தந்திருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
1.உங்கள் விருப்பத்துக்கேற்ப வாழ்வை வடிவமைத்துக் கொள்ளும் உரிமை
2.உங்கள் விருப்பத்துக்கேற்ப செல்வம் பெருக்குகிற உரிமை
3.உங்கள் விருப்பத்துக்கேற்ப செல்வாக்கை வளர்த்துக்கொள்ளும் உரிமை
4.உங்கள் விருப்பத்துக்கேற்ப எட்ட வேண்டிய இலக்கை பெருக்கும் உரிமை
5.ஆக்கபூர்வமாய் ஆற்றலை வெளிப் படுத்தி அசகாய வெற்றிகளை எட்டுகிற உரிமை
இவை உங்கள் உரிமைகள் மட்டுமல்ல! ஒரு வகையில் பார்த்தால் உங்கள் கடமையும்கூட!
என்னால் முடியாது என்கிற எண்ணத்தை எப்போதும் வரவிடாதீர்கள்! உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்!
Leave a Reply