என் குரல் எல்லோருக்கும் கேட்பதில்லை

– ரிஷபாருடன்

மிஸ்டர் மனசாட்சியுடன் பரபரப்பு நேர்காணல்

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற குழப்பத்திற்கு அடுத்தபடியான குபீர் குழப்பம், மனசாட்சி என்று ஒன்று உண்டா இல்லையா என்பதுதான்.

இருபத்தோராம் நூற்றாண்டின் அதிரடி தலைமுறைக்கு அறிமுகமாக வேண்டிய சுவாஸ்ரயமான மனிதர், மிஸ்டர் மனசாட்சி.

பெரும்பாலும் தலைமறைவாய் இருப்பதையே விரும்புகின்ற இவர், வெற்றியாளர்களுக்கு வழிகாட்டி என்பது மட்டும் நிச்சயம்.

எத்தனையோ வெற்றியாளர்களை நேர்காணல் கண்ட நமது நம்பிக்கை ஆசிரியர் குழு, இந்த முறை மிஸ்டர் மனசாட்சியையே பேட்டி எடுப்பது என்று புறப்பட்டது.

வணக்கம் மிஸ்டர் மனசாட்சி! நீங்கள் இருக்கிறீர்களா? இல்லையா?

நிச்சயமாக இருக்கிறேன். உங்கள் இதழ் ஆசிரியரின் கவிதைக் குருநாதர் கவியரசர் கண்ண தாசனை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். அவரே சொல்லியிருக்கிறார்!

”நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி! ஒன்று தெய்வத்தின் சாட்சி யம்மா!” என்று. இந்த இரண்டு சாட்சிகளுமே பகிரங்கமாக வருவதில்லை என்பதால்தான் இருக்கிறார்களா இல்லையா என்கிற கேள்வி எழுகிறது.

கண்ணதாசன் பேரைச் சொன்னதால் இந்தக்கேள்வி. தமிழ் சினிமாவில், கதாநாயகர்களுக்குள் இருந்து அவருடைய உருவமே வெளிவந்து பாட்டு பாடுமே! அதுதான் நீங்களா??

ஆமாம். ”மயக்கமா கலக்கமா” பாட்டில், சிரித்தபடி பாடுகிற நான்தான் மனசாட்சி. ”தைரிய மாகச் சொல்! நீ மனிதன் தானா” என்று எம்.ஜி.ஆர் படத்திலும், ”சக்கை போடு போடு ராஜா” என்று சிவாஜி படத்திலும் வந்திருக்கிறேன்.

அதற்கு அப்புறம் சினிமாவில்கூட என்னைக் கூப்பிடுவதில்லை.

இதுதான் உங்கள் பிரச்சனை! அடிக்கடி தலை மறைவாகிறீர்களே, இது தவறில்லையா?

தவறுதான். ஆனால் என் தவறில்லை. தனி மனிதர்களின் தவறு. தங்கள் ஆசைகளை, அதிலும் பேராசைகளை பெரிய பெரிய மூட்டைகளாக என்மேல் போட்டு ஏறி உட்கார்ந்து விடுகிறார்கள். எனவே என் ஞானக்குரல் பல நேரங்களில் தீனக் குரலாக ஒலிக்கிறது. இதில் வேடிக்கை என்ன வென்றால், தங்கள் திட்டங்களில் தவறு நேர்ந்தால், ”உள்ளே என்னவோ நெருடுச்சு” என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்போதுகூட என் பெயர் வெளி வராமல் இருக்கும்படி செய்கிறார்கள்.

அப்படியானால்,”உள்ளே பட்சி சொல்லுது” என்று சொல்கிறார்களே, அதுவும் உங்களைத்தானா?
ஆமாம். அதுவும் நானேதான். ஆனால், பல்லி சொல்லும் பலனுக்குத் தருகிற மரியாதையைக்கூட இந்த பட்சி சொல்வதற்கு பெரும்பாலானவர்கள் தருவதில்லை. ஏதேனும் ஒரு வகையில் என்குரலை எல்லோரும் எப்போதும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். வாழ்க்கையில் குறுக்குவழியில் முன்னேற நினைப்பவர்களின் உள்ளம் என்கிற ரிமோட், என்னை மியூட் செய்து விடுகிறது.
உங்கள் வயது என்ன?

குழந்தை பேசத் தெரிந்த வயதுதான் என் வயது. பெரும்பாலான வீடுகளில் நான் குழந்தைகள் மூலமாகவே பேசுகிறேன். தொல்லை தருகிற நண்பரின் தொலைபேசி அழைப்புக்கு, ”அப்பா வீட்டிலே இல்லேன்னு சொல்லிடு” என்று சொல்லித் தரும்போது குழந்தைகளின் கண்களில் அதிர்ச்சியாக வெளிப் படுகிறேன். ”அப்பா வீட்டிலே இல்லைன்னு சொல்லச் சொன்னாங்க” என்று சொல்லி விடுகிற குழந்தையின் முதுகில் விழுகிற அடி என்மீதும் விழுகிறது. குழந்தை அழுதுகொண்டே தூங்கிய பிறகும் என் விசும்பல் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. எனவே, குழந்தைகள் வயதுதான் என் வயது.
குழந்தையாய் இருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம்தானே?

எனக்கு சந்தோஷமான விஷயமோ இல்லையோ, மனிதர்களுக்கு மிகவும் சவுகரியமான விஷயம்!! நினைத்தபோது அதட்டி அடக்கி விடலாம். மசியாவிட்டால் மிரட்டலாம். ரொம்ப முடியாவிட்டால் முதுகில் தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்துவிடலாம். குழந்தைகளின் குரலை குழல் இனிது யாழினிது என்று ரைமிங் சொல்லும்போது கொண்டாடுகிற பெற்றோர்கள், சுயமாகப் பேசும் போது, ”அதிகப் பிரசங்கித்தனமா பேசாதே” என்று அடக்கு வார்களில்லையா? அப்படித்தான் என்னுடைய குரலையும் எழ விடாமல் செய்து விடுகிறார்கள்.
இளைஞர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு எப்படி?

இளைஞர்களிடம் நான் மிகவும் தீவிரமாக இயங்குகிறேன் என்பது ஒரு பக்க உண்மை. வேறு வகை இளைஞர்களின் சிகரெட்டின் மிச்சமாய் கால்களில் மிதிபடுகிறேன் என்பதும் மறுபக்க உண்மை.
தங்கள் தகுதிக்கேற்ற வாய்ப்புகள் மறுக்கப் படும்போதும், காதலில் தோற்கும்போதும் இளைஞர்கள் என்னுடன் விரிவாகப் பேசுகிறார்கள். என்னிடம் விடை கேட்கிறார்கள்.

தங்களுக்குள் தீவிரத்தை உணர்கிற போதெல்லாம் என்னை உணர்கிறார்கள். சிலர் என்னிடம் உறவை நன்றாக வளர்க்கிறார்கள். அவர்களிடம் சிலரோ முதல் சம்பளக்கவருடன் என்னை மறந்து விடுகிறார்கள்.
நடுத்தர வயதுக்காரர்கள் பற்றி…?

நான் அதிகமாக அழுத்தப்படுவதே அவர்களிடம்தான். என்னை மீறியும் வாழ முடியும் என்கிற வேகம் பலருக்கும் இந்த வயதில்தான் ஏற்படுகிறது.

சமரசம், சபலம், சரிக்கட்டுதல் போன்ற சரிவுகளை சாமர்த்தியம் என்று அவர்கள் கருதுகிற போதெல்லாம் நான் மறைக்கப் படுகிறேன்.

ஆனால், சின்ன வயதில் விழுமங்களுடனும் கொள்கைகளுடனும் வளர்க்கப்படுபவர்கள் நடுத்தர வயதிலும் என் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களை எளிதாக நீங்கள் அடையாளம் காணலாம். அவர்கள் வீட்டிலும் சமூகத்திலும், ”பிழைக்கத் தெரியாத மனிதன்” என்று அழைக்கப்படுவார்கள்.
மிஸ்டர் மனசாட்சி! உங்களுக்கு முக்கியத்துவம் தருபவர்கள் எல்லாம் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வதை நீங்கள் ஏற்கிறீர்களா?

அவர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாக இருக்கலாம். ஆனால் வாழத் தெரிந்தவர்கள். வாழ்க்கையைத் தெரிந்தவர்கள். முற்பகல் செய்வது பிற்பகல் விளையும் என்கிற சூத்திரத்தைக் கற்றுக் கொண்டவர்கள், காலம் தாழ்ந்தாவது வெற்றி பெறுவார்கள். உழைப்பால் உயர்ந்த அத்தனை வெற்றியாளர்களும் என்னுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்களே!

மிஸ்டர் மனசாட்சி! அரசியல் உலகில் உங்களுக்கு டெபாசிட்டே கிடைக்காது என்கிறார்களே… அப்படித்தானா?

அங்கேதான் தவறு செய்கிறீர்கள். அரசியல் வாதிகளின் காதுகளுக்குள் என்குரல் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. என்னுடன் தடையாய் இருக்க பயந்துதான் அவர்கள் கும்பலை சேர்த்துக் கொண்டு அலைகிறார்கள். என்குரல் கேட்டுவிடக்கூடாதே என்றுதான் ஒலி பெருக்கியில் சத்தமாகப் பேசுகிறார்கள்.

என்னை மதுவில் மூழ்கடிக்க முயல்கிறார்கள். ஆனால் நானோ, மதுவில் அவர்கள் தள்ளாடும்போது உறுதியாய் நிற்கிறேன். உரக்கப் பேசுகிறேன்.

என்னைத் தாங்க முடியாமல், ஆள் வைத்துத் தூக்க முடியாமல், தூக்க மாத்திரைகளின் துணையுடன் தூங்கப்போகிறார்கள்.

முதியவர்களுடன் உங்கள் உறவு பற்றி?

அவர்களுக்கிருக்கும் ஒரே துணை நான் தான். எப்போதும் அவர்களுடன் பேசுறேன். அவர்கள் கடந்த காலங்களில் வாழ்பவர்கள். எனவே கடந்த காலங்களில் எப்போதெல்லாம் என் கைப் பிடித்து நடந்தார்கள், எப்போதெல்லாம் என்னைக் கைவிட்டு நடந்தார்கள் என்கிற விபரங்களைத் தேதிவாரியாக அவர்களுக்குத் தெரிவிக்கிறேன். அவர்கள் சிலநேரம், தங்கள் வாழ்வு குறித்துப் பெருமை கொள்கிறார்கள். சிலநேரம் கடந்த காலத் தவறுகளைக் கண்ணீரால் கழுவுகிறார்கள்.

உங்களைப் பற்றி நீங்கள் சொல்ல விரும்புவது?

காலத்தின் குரல் நான். கடவுளின் எதிரொலி நான். ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் இருப்பதால் அடையாளமே நான்தான். என் குரல் எச்சரிக்கைக்குரலாக வருகிறது. எச்சரிக்கையைக் கேட்பவர்களுக்கோ, பூட்டிய கதவுகளைத் திறக்க சாவிகள் தருகிறேன். எச்சரிக்கையைக் கேளாத வர்கள் முண்டியடித்துப் போய் முட்டிமோதி மூக்குடைபடும்போது மௌன சாட்சியாகவும் இருக்கிறேன்.

ஒவ்வொருவர்மீதும் வாழ்க்கை தனது தீர்ப்புகளை வாசிக்கும்போது அந்தக் குரலும் என்னுடைய குரல்தான் என்பதை, உற்றுக் கேட்பவர்கள் உணர்வார்கள். ஆனால் அதற்குள் அவர்களுக்கான தீர்ப்பு வாசிக்கப்பட்டிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *