– சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
அன்று இரவு முழுவதும் நான் கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருந்தேன். எனது கண்கள் தூக்கத்தை விவாக ரத்து செய்து விட்டது. மனதிற்குள் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது விழிகளை மூடி எப்படி உறங்க முடியும்?
எங்கள் வீடு, ஊருக்கு வடக்கில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. தென்னங் கீற்றுகளால் வேயப்பட்டது. அதற்கு நான் பின்னாளில், ”இலக்கியக்குடில்” என்று பெயரிட்டேன்.
விடியும்வரை நான் தூங்கவு மில்லை. எனது மனதில் சிந்தனையின் ஓட்டம் ஓயவுமில்லை. ”பேசிவிட்டாய். இனி என்ன செய்யப்போகிறாய்? ஏதாவது செய்ய வேண்டியதுதான்? ஏதாவது என்றால் என்ன? எனக்கே தெரியாது. முதலில் ஒழுங்காகப் படி. பிறகு மற்றதைப் பார்க்கலாம். படிப்பு மட்டும் போதுமா? போதாது. முதலில் படிப்பில் கவனம் செலுத்து. அத்துடன், கல்லூரியில் நடக்கும் எல்லாவிதமான போட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு திறமையைக் காட்டு” என்று எனக்கு நானே கேள்வி யாகவும் பதிலாகவும் மாறிமாறி மனதுக்குள் பேசிக் கொண்டே இருந்தேன்.
தொடர்ந்து படுக்கையில் படுக்க முடியாமல், வெளியே எழுந்து வருவது, வாசலில் நடப்பது, பிறகு போய் படுப்பது என்று நான் செய்து கொண்டிருந்ததை எனது அய்யா (தந்தையை அப்படித்தான் நாங்கள் அழைப்போம்) ”என்ன முருகையா (எனது இயற்பெயர் முருகேசன்) தூங்காம ஏன் இப்படி குட்டிபோட்ட பூனையா அலைகிறாய்” என்று கேட்டார். ”ஒண்ணுமில்லைங்க. தூக்கம் வரலீங்க. அதனால்தான்” என்றேன். ”சரிசரி! எதுவும் நல்லதுக்காக இருந்தால் போதும்” என்று சொன்னார் எனது அப்பா.
அவர் எப்பொழுதுமே அப்படித்தான். எதையும் பெருந்தன்மையோடு அணுகுவார். அவர் அதிகமாகப் படிக்கவில்லை என்றாலும் கேள்வி ஞானம் உடையவர். நான் நன்றாகப் படித்து முன்னுக்கு வருவேன் என்று எல்லோரிடமும் சொல்வார். நான் பணத்தை வீணாக செலவு செய்ய மாட்டேன் என்றும், அனாவசியமாக பையன்களுடன் சேர மாட்டேன் என்றும் வீட்டிற்கு வருவோரிடம் எல்லாம் சொல்லி பெருமைப்படுவார்.
பலமுறை இதுபோன்று எங்கள் வீட்டிற்கு வருவோரிடமெல்லாம் அவர் பேசுவதை என் காதுபடவே கேட்டு இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்கு சந்தோசமாக இருக்கும். அத்தோடு எந்தச் சூழ்நிலையிலும் அவர் நம்பிக்கையை பொய்ப்பித்து விடக்கூடாது. எப்பாடு பட்டாவது அவர் நம்பிக்கையைக் காப்பாற்றி விடவேண்டும் என்று எனக்கு நானே சங்கல்பம் செய்துகொண்டேன்.
இப்பொழுதும் அவருடைய நம்பிக்கையை காப்பாற்றி வருகிறேன். ஆனால், அவர்தான் என்னுடன் இல்லை. என்றாலும் அவர் என்னுள் இருக்கிறார். ஆம்! இருபது ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகி விட்டார்.
குழந்தைகள்மீது பெற்றோர்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நிச்சயம் பயன் கிடைக்கும். எனது குழந்தைகள் நன்றாக வருவார்கள் என்று பெற்றோர்கள் எண்ணுவதால் தோன்றுகின்ற எண்ண அதிர்வுகள் குழந்தைகளை சென்ற டைந்து அவர்களை நல்வழிப்படுத்தும்.
ஆம்! ஒருவரை நல்லவர் என்று நினைக்கும்போது அவர் நம்மிடம் நல்ல வராகவே இருக்க முயல்கின்றார். ஒருவரைத் திறமையானவர் என்று நினைக்கும்போது, அவர் தனது திறமையை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிக்காட்டி பாராட்டுப் பெறவே முயல்வார் என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுவார்கள். எனது வாழ்க்கையைப் பொறுத்தவரை, அந்தக் கணிப்பு உண்மையாகி இருக்கிறது என்று உறுதியாகச் சொல்வேன்.
தூங்காமலேயே நான் அந்த இரவு முழுவதையும் கண்ணீரிலும் சிந்தனையிலும் கரைத்து விட்டேன். எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த எரிமலை அன்று விழித்து விட்டது என்றுதான் நினைக்கிறேன்.
அன்று காலை முதல் வேலையாக எனக்கு நானே மூன்று கட்டளைகளை ஏற்படுத்திக் கொண்டேன்.
1. இனிமேல், நன்கு படிப்பது, நல்ல மதிப்பெண்களை பெறுவது.
2. எந்தப் போட்டியானாலும் அதில் கலந்து கொள்வது. வெற்றியோ தோல்வியோ அது குறித்து கவலைப்படுவதில்லை.
3. நேரத்தை வீணடிக்காமல் ஏதாவது உருப் படியான காரியங்கள் செய்வது.
பின்னர் ஒவ்வொரு நாளும் இம்மூன்று தீர்மானங்களைக் குறித்து அடிக்கடி சிந்தித்துக் கொண்டே இருப்பேன்.
அப்பொழுதெல்லாம் அரசுப்பேருந்துகளில் பல்வேறு நல்ல வாசகங்களை எழுதி வைத்தி ருப்பார்கள். நான் க.க.சாவடியில் இருந்து தினசரி கல்லூரிக்கு நகரப்பேருந்தில் வருவேன். அந்தப்பேருந்தில் எழுதி வைத்திருந்த வாசகம், ”கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவுமில்லை. (பட்ங்ழ்ங் ண்ள் ய்ர் ள்ன்க்ஷள்ற்ண்ற்ன்ற்ங் ச்ர்ழ் ஏஹழ்க் ஜ்ர்ழ்ந்) இந்த வாசகத்தை எனது நோட்டுப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதி வைத்திருந்தேன். அந்த வாசகமே எனது தீர்மானங்களில் ஒன்றாகி நின்றது.
கடினமாக உழைத்தால் யாராலும் சாதிக்க முடியும் என்பதை நான் முழுமையாக நம்பினேன். பள்ளியில் படிக்கும்போது ஏதோ படித்தேன். ஆனால் கடுமையாக உழைக்கவில்லை. அவ்வாறு உழைத்திருந்தால் இன்னும் சிறப்பாக சாதனை படைத்திருக்கலாமே என்று நான் சில நேரங்களில் எண்ணி இப்போதுகூட வருத்தப் படுவதுண்டு என்றாலும் அவ்வாறு வருத்தப்படும்போதெல்லாம் எனக்கு நானே சமாதானம் செய்து கொள்வேன். ”எந்தெந்த சூழ்நிலையில் எதுயெது நடந்ததோ, அதைப் பற்றி இப்பொழுது கவலைப்பட்டு என்ன இலாபம்? இனி செய்ய வேண்டியதைக் கவனிப்போம்” என்று.
கடந்த காலத்தை நினைத்து நினைத்து நிகழ்காலத்தை இறந்த காலமாக்குவதில் சிலர் மூழ்கி விடுவார்கள். அது சரியல்ல. கடந்த காலத்தில் நடந்ததை மறந்துவிட வேண்டும். ஆனால், அந்நிகழ்வுகள் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடத்தை மறக்கக் கூடாது. கடந்த காலம்தான் நமது வளர்ச்சியின் வேர்களைத் தாங்கி நிற்கிறது. நிகழ் காலத்தில் நிறைவாக வாழ்ந்தால் சுகமான கடந்த காலமும் சிறகு முளைக்கும் எதிர்காலமும் உருவாகும் என்பதை இப்பொழுது புரிந்து கொண்டேன்.
இதைத்தான் சுவாமி சச்சிதானந்தா மகராஜ் அவர்கள், ”பொன்னான நிகழ் காலம்” (எர்ப்க்ங்ய் டழ்ங்ள்ங்ய்ற்) என்றார். நிகழ் காலமே நிஜம் என்பதை நானும்,
”நேற்று என்பது உடைந்த பானை
நாளை என்பது மதில்மேல் பூனை
இன்று என்பது கையிலுள்ள வீணை”
என்று எழுதினேன். ஆம். ”இன்று” என்கிற வீணையை மீட்டி உழைப்பு வீதிகளில் உலா போகும்போது முன்னேற்றத்தின் பூபாளத்தில் மூழ்கிப் போகிறோம்.
அடுத்த நாள், நான் கல்லூரிக்கு வந்தபோது ஒரு துக்க அதிர்ச்சி காத்திருந்தது!?
Leave a Reply