உருகவைக்கும் உண்மை நிலை
சில ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வரக்கூடியது தசைச்சிதைவு நோய். விருப்பமுடன் விளையாடும் போது விழுகிற குழந்தை அடிக்கடி விழுவதும், எழுவதற்கு சிரமப்படுவதும் ஆரம்ப அறிகுறிகள். உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாய் செயலிழந்து போக, கை கால்கள் மடங்கிக் கொள்ள, முடங்கிப் போகிற இந்த மலர்கள் சக்கர நாற்காலியில் காத்திருக்கின்றன… நிரந்தரமாய் குணமாக்கும் மருந்தொன்றை உலகின் எந்த மூலையிலாவது, யாராவது கண்டுபிடியுங்கள் என்கிற நம்பிக்கையில்!!
ஆனால், பெரும்பாலான மலர்கள் பதின் பருவம் கடக்கும்முன்னே உதிர்ந்து விடுகின்றன. இந்த நோயின் தீவிரத்தன்மை அப்படி. இதை நினைத்து அழுது கொண்டே இருந்தால் எப்படி?
இத்தகைய குழந்தைகளைப் பராமரிக்கவும், சிகிச்சை தரவும், முடிந்தவரை அவர்களின் சிரமம் குறைக்கவும், கோவை அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஒரு மையத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் டாக்டர் லக்ஷ்மி.
நிரந்தரத் தீர்வு கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஒவ்வோர் உறுப்பாக செயலிழக்கும் போது சிகிச்சைகள் தருவதும், சோர்ந்துவிழும் பெற்றோர்களுக்கு ஊக்கம் தருவதும், நோயின் கடுமையால் குழந்தைகள் சிறிதுநேரமாவது மறந்திருக்கும் விதமாய் அவர்களுக்குப் பொழுது போக்குகள், விளையாட்டுகள் ஏற்படுத்தித் தருவதும் இந்த மையம் செய்துவரும் மகத்தான பணிகள்.
அதன் அங்கமாக, சமீபத்தில் கோவை பிளாக் தண்டர் ரிஸார்ட்ஸில் பிப்ரவரி முதல் வார இறுதியில் குழந்தைகளும் பெற்றோர்களும் கூடினர். கோவை அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தின் மாணவியர், ஒரு குழந்தைக்கு ஒருவர் என்ற முறையில் பொறுப்பேற்று உடன்பிறந்த சகோதரிகள் போல் பரிவு காட்டிப் பார்த்துக் கொண்டார்கள். பெற்றோர்களுக்கான வழி காட்டுதல்கள், உளவியல் நிபுணர்களின் உரைகள், குழந்தைகளுக்கு படகுப்பயணம், முகத்தில் வண்ணம் தீட்டுதல், மேஜிக் ஷோ போன்ற பற்பல நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் உமாநாத் பங்கேற்றார்.
நமது நம்பிக்கை இதழின் ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் பேசினார். ”எந்த நேரமும் இதற்கொரு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கையும் பிரார்த்தனையும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும்” என்றார் அவர். எவ்வளவு கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டாலும் என்ன நடக்குமோ என்ற மனஅழுத்தத்தில் இருக்கும் பெற்றோரையும், நோய் வாய்ப்பட்ட குழந்தைகளையும் ஒரு சேரக் கையாளும் பணியை மிகப் பொறுமையாகவும் பொறுப்புணர்வோடும் செய்துவரும் டாக்டர் லக்ஷ்மி அவர்களும் அவர்தம் குழுவினரும் செய்து கொண்டிருக்கும் சேவை, மகத்தானது.
இந்த சின்னச்சுடர்கள் அணையாமல் காக்கும் அபூர்வ மருந்தை காலம் இவர்களின் கைகளில் தரட்டும். அதற்கு முன்னால், அடிப்படை சிகிச்சைகளுக்கும் பிற வசதிகளுக்கும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யலாமே!
அடிப்படை பரிசோதனைக்கும் ஒவ்வொரு சிகிச்சைக்கும் ஆகிற செலவை ஈடுகட்ட பெற்றோர்கள் பலருக்கும் வசதியில்லை. ஒவ்வோர் உறுப்பையும் உயிர்ப்பிக்கப் போராடும் இந்தக் குழந்தைகள் நம் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியவர்கள். குறைந்தபட்ச பரிசோதனைக்கே ரூ.1000 வரை செலவாகிறது. இந்தப் பிஞ்சுகளுக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புகிறவர்கள், “பட்ங் தங்ஞ்ண்ள்ற்ழ்ஹழ், அஈமர’’ என்ற பெயரில், கோவையில் செலுத்தத்தக்க காசோலைகள்/ கேட்புக்காசோலைகளை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.
Dr.Lakshmi
Molecular Diagnostics,
Counseling care of Research Centre,
Avinashilingam University for Women,
Mettupalayam Road, Coimbatore – 641043
Ph: 0422 – 2451282
நமது நம்பிக்கை மாத இதழ் நிர்வாகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்தக் குழந்தை களுக்கான பிரத்யேகமான யோகா மற்றும் மூச்சுப் பயிற்சியினை வடிவமைத்து வழங்க ஈஷா யோக மையம் இசைவு தெரிவித்துள்ளது என்பது ஆறுதல் தரும் செய்தி!
உயிர்களுக்கு விலையில்லை! உதவி செய்ய வாருங்கள்!!
Leave a Reply