பயன்மிக்க பாதுகாப்பு டிப்ஸ்
– பிரதாபன்
அயல்நாட்டில் படிப்பு என்னும் அற்புத மான வாய்ப்பு உங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கப் போகிறதா? வாழ்த்துக்கள்.
பல இலட்சங்கள் செலவுசெய்து புதிய இடத்தில் படிக்கப்போகும் பிள்ளைகள் அதீத உற்சாகத்தில் வம்பை வரவழைத்துக் கொள்ளாமல் இருப்பதும் முக்கியமில்லையா? சர்வதேச கல்வியியல் நிபுணர்கள், புதிய சூழலில் மாணவ மாணவியர் பின்பற்றவேண்டிய சில பாதுகாப்பு அம்சங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
1. சென்று சேர்கிற தேசத்தில் இந்தியத் தூதரகம் எங்கிருக்கிறது என்று தெரிந்து வைத்துக் கொள்வதுடன், கையோடு அவர்களுக்கொரு மின்னஞ்சலையும் தட்டி விடலாம். மாணவர் பெயர், படிக்கும் கல்வி நிறுவனத்தின் பெயர், பாஸ் போர்ட் எண், தங்கியிருக்கும் இடம், தொடர்புத் தொலைபேசி எண் போன்ற விபரங்களை ‘வந்துட்டோம்ல’ என்பதுபோல் அனுப்பி வைப்பது நல்லது.
2. போன இடத்தில் தாய்நாட்டுப் பாசம் பீறிட்டு, இந்திய முறையிலான உடைப் பழக்கங்களை ஓவராகப் பின்பற்ற வேண்டாம். அங்கே இளைஞர்கள் என்ன மாதிரியான உடைகளை அணிகிறார்களோ, அதே மாதிரியான உடைகளை அணிய வேண்டும்.
3. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. முடிந்தவரை புதிய இடங்களுக்கு தனியாகப் போகாமல் நண்பர்களுடனேயே நடமாடுவது நல்லது. குறிப்பாக உள்ளொடுங்கிய பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர்ந்தவர்கள் இதை மறக்காமல் பின்பற்ற வேண்டும். சிங்கம் மட்டுமில்லை. சிக்கலும் சிங்கிளாக வரக்கூடும்.
4. கொஞ்சம் ஆபத்தான பகுதிகளாக அடையாளம் காட்டப்பட்டுள்ள இடங்கள் எவை யென்று சர்வதேச மாணவர்கள் அலுவலகத்தில் கேட்டால் சொல்வார்கள். அந்த இடங்களைத் தவிர்த்து விடுவது நல்லது.
5. கல்லூரி வளாகத்துக்குள் விடுதி டூ வகுப்பறை. வகுப்பறை டூ கேண்டீன் என்று நேரா வா நேரா போ பாலிஸியில் இருப்பது நல்லது. இப்படிப் போய் அப்படித் திரும்பினா என்ன என்பது போன்ற வாஸ்கோடாகாமா வேலைகள் அந்தி நேரங்களிலோ இரவு நேரங்களிலோ வேண்டாம்.
6. இந்திய மாணவர்களும் மாணவிகளும் தங்கம் மற்றும் வைர நகைகளை அணிவதில் ஆர்வம் காட்டுவதாக அயல்நாடுகளில் ஓர் எண்ணம் உண்டு. முடிந்தவரை விலையுயர்ந்த நகைகளைத் தவிர்ப்பது நல்லது. நாம் போவது கல்விக்காக பாஸ்… கல்யாணத்துக்கில்ல!!
7. அறையை விட்டோ காரைவிட்டோ போகும்போது, கதவுகளும் ஜன்னல்களும் பூட்டப் பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கையில் அளவுக்கதிகமான பணம் வைத்திருப்பதும் அவசியமில்லை. சுத்தமாக பணமே இல்லாமலும் போக வேண்டாம்.
8. சில இடங்களில் அனுமதி அட்டையை ஸ்வைப் செய்தால்தான் ”திறந்திடு சீசேம்” என்று கதவுகள் திறக்கும். அப்போது சந்தடி சாக்கில், சைக்கிள் கேப்பில் உங்களுடன் யாராவது சேர்ந்து நுழைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
9. பல சர்வதேச நிபுணர்கள், சாயங்காலம் ஆகியும் நூலகம் அல்லது பரிசோதனைக் கூடங்களில் படித்துக் கொண்டிருக்கும் சமர்த்துப் பிள்ளைகளுக்காக பிரத்யேக பாதுகாப்பு அலுவலர்களை சலுகைக்கட்டணத்தில் அனுப்பு வார்கள். தேவை ஏற்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
10. அந்நியர்கள் வழியில் லிஃப்ட் கேட்டால், முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் பெருமையை நிலைநாட்ட நினைத்து காரை நிறுத்த வேண்டாம். உதவலாம் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே காரை நிறுத்துங்கள்.
11. முரடர்கள் வழிமறித்து பணம் கேட்டால், இருப்பதைக் கொடுத்துவிட்டு நகர்ந்து விடுங்கள். ”நான் அடிச்சா தாங்க மாட்டே. நாலு நாளு தூங்க மாட்டே” என்று பாட வேண்டாம். பட வேண்டாம்.
12. எந்தச் சூழலிலும் சொந்தப் பாதுகாப்புக்கு முதலிடம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, படிப்பில் பட்டையைக் கிளப்புங்கள்.
Leave a Reply