கல்யாணப் பரிசு

– கிருஷ்ண வரதராஜன்

ஒரு திருமண நாளில் எங்கள் திருமணத்திற்கு வந்த பரிசுகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தோம்.

நண்பரொருவர் தந்த ஒரே மாடலில் அமைந்த டைட்டன் வாட்சுகள்தான் பட்டியலில் முதலில் இருந்தது. “இவர்கள் கணவன் மனைவி என்று எல்லோருக்கும் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஒரே மாடலில் வாங்கிக் கொடுத்தீர்களா?’ என்றேன்.

“லேடீஸ் வாட்ச் அளவில் சிறியது. ஜென்ட்ஸ் வாட்ச் அளவில் சற்று பெரியது. ஆனால் மாடல் பார்ப்பதற்கு ஒன்றாகத்தான் இருக்கிறது. அது செய்யும் வேலையும்கூட ஒன்று தான்.

எனவே நம்மிடம் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் நாம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை பரிசாக தேர்ந்தெடுத்தேன்” என்றார் நண்பர்.

எல்லோரும் இப்படி ஏதேனும் ஒரு அர்த்தத்தோடுதான் பரிசு கொடுத்தார்களா? என்று தெரியவில்லை.

கடமைக்காக தரப்படுகிற பரிசுகளும்கூட உண்டு. எஸ்.எம்.எஸ்ஸை ஃபார்வேர்டு செய்வது போல சிலர் பரிசுகளை அப்படியே ஃபார்வேர்டு செய்வதுண்டு. ஒருமுறை பரிசின் கீழ் ஒருவர் பெயரும் பின்பக்கத்தில் ஒருவர் பெயரும் இருந்தது. பிறகுதான் அது எனக்கு கைமாற்றப்பட்ட பரிசு என புரிந்தது.

பரிசு பெறுவதில் இன்பமா? கொடுப்பதில் இன்பமா? என்று பரிசுகளை பட்டியலிட்டபடியே கேட்டார் என் மனைவி.

=அது, யாரிடமிருந்து பெறுகிறோம் அல்லது யாருக்கு கொடுக்கிறோம் என்பதை பொறுத்தது+ என்றேன்.

ஓரளவு எழுதி முடித்ததும் பட்டியலை காட்டி, என் மனைவி, =எல்லாவற்றறையும் எழுதியாகிவிட்டதா?+ என்றாள். ஆமாம். உன்னைத் தவிர என்றேன். அவர் சிரித்த சிரிப்பு எனக்கு இன்னொரு பரிசு.

உண்மையில் நம் திருமணத்தன்று நமக்கு கிடைத்த சிறந்த பரிசு நாம்தானே என்றேன். என் மனைவியின் கண்களில் அர்த்தமான சிரிப்பு.

இதயம் நிறைய இனிய நினைவுகள் இருந்தால் திருமணமே கூட பரிசுதான்.
திருமண நாளை, இன்று என்ன நாள் என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று ஞாபகம் ஊட்டியும் நினைவுபடுத்திக்கொள்ள முடியாத மக்கு கணவர்கள்கூட இருக்கிறார்கள். இதற்காக சண்டை போடும் மனைவிகளும் இருக்கிறார்கள். நாட்களை கொண்டாட வேண்டியதில்லை அந்த நாளில் கிடைத்த மனிதர்களைத்தான் கொண்டாடுகிறோம் என்பதை ஏனோ மறந்து போய்விடுகிறோம்.

என் வீட்டில் இந்தப் பிரச்சனை இல்லை. என் மனைவி, தன் பிறந்த நாளாகட்டும், இல்லை எங்கள் திருமண நாளாகட்டும், அதை எனக்கு நினைவூட்டி கொண்டாடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தயாராகிவிடுவாள். பரிசும் தருவார். அது பொருள் மதிப்பாய் இருக்காது. அது தரும் நினைவே மதிப்பாய் இருக்கும்.

எல்லா பெண்களும் தன் கணவருக்கு பரிசாக தர நினைப்பது தன்னைப் பற்றிய நினைவுகளைத் தான். பெண்கள்தான் என்றில்லை. எல்லோருமே தங்களைப்பற்றிய நினைவுகளை ஏற்படுத்தத்தான் பரிசுகள் தருகிறார்கள்.

ஒரு முறை என் மருமகள் வரைந்து கொடுத்த ஓவியம் என் பரிசுகளின் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது. அந்த வெகுளி முகம். அவளது கண்களில் தெரிந்த பரவசம் என ஓவியத்தினை தாண்டிய பரிசுகளை அவள் எனக்கு தந்திருக்கிறாள். பரிசு கொடுப்பதை விடவும் பரிசை கொடுக்கும் விதம்தான் முக்கியம். பிறந்த நாள் பரிசை அதற்கு அடுத்தநாள் கொடுத்தால் பரிசாக கொடுத்தது வைர மோதிரமே என்றாலும் அதன் மதிப்பு பாதியாக குறைந்து விடுகிறது.

ஆனால் பிறந்தநாள் பரிசை அடுத்த நாளில் தருவதானால் பொருளுக்கு பதிலாக உங்கள் நேரத்தை கொடுங்கள். கூடுதல் மகிழ்ச்சியைத் தரும்.

ஏனென்றால் பரிசுப் பொருள், அது கொடுக்கப்படும் நேரம், கொடுக்கப்படும் விதம் என பல காரணங்களால் மதிப்பை பெறுகிறது.

என்ன சொல்கி றோம் என்பதை விட எப்படி சொல்கிறோம் என்பது தான் முக்கியம்.
ஆசையே இல்லாமல் மனைவியிடம் ஐ லவ் யூ என்று சொன்னால் யாருக்காக இருந்தாலும் வெறுப்புதானே வரும். பரிசு கொடுக்க காரணங்கள் தேவையில்லை என்பது என் கருத்து.

நாம் கொடுக்கும் எல்லா வற்றையும்கூட பரிசாக மாற்றித்தரமுடியும்.
என் குழந்தையின் பிறந்த நாளுக்கு என் மனைவிக்கு பரிசு கொடுத்தேன். எதற்கு என்றால்.. நீ தந்த பரிசுக்கு பதில் என்றேன்.

வாழ்க்கை அழகானது. அது பரிசுகளால் மேலும் அழகாகிறது. உங்கள் திருமண வாழ்க்கையும் அழகாகட்டும்.

  1. k.ramesh

    dear sir,

    this storey is very nice sir. realy i like it.
    same think storey every month you will give sir.

    thank you somuch by
    k.ramesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *