வாழ நினைத்தால் வாழலாம்

மனநல நிபுணர் ருத்ரன் பதில்கள்

ரமண மகரிஷி, புத்தர் போன்றவர்கள் ஞானமடைதல் பற்றிக்கூறுவதை புத்தகம் மூலமாக மட்டுமே தெரிந்து கொள்கிறோம். இதில் அறிவியலின் பங்கு என்ன?
ராஜ்குமார், கோவை.

இராமகிருஷ்ணர் மற்றும் ரமண மகரிஷியின் புத்தகங்களின் மூலமாகத்தான் அவர்களை அறிந்து கொள்கிறோம். இது ஒருபடி தான். காரல் மார்க்ஸினுடைய டாஸ் கேப்பிடலை படித்து முடித்து விட்டால் மார்க்சிசம் தெரியும். கம்யூனிசம் தெரியும் என்று அர்த்தம் கிடையாது. களத்தில் போய், பணியாற்றி, பகிர்ந்து கொள்ளும் போதுதான் அதனை கற்றுக் கொள்ள முடியும். புத்தகங்கள் படிப்பது ஓர் அறிமுகம்தான்.

அதைப் பற்றிய ஒரு ஐடியா கிடைக்கும். புத்தகங்கள் படித்து அறிவியல் அனுபவம், ஆன்மிக அனுபவம் வரும் என்பதெல்லாம் சும்மா. அனுபவம் என்பது வேறு விஷயம். ஞானமடைதல் புத்தகம் படித்து வராது.

சில நாட்கள் மனதும் உடலும் உற்சாகமாக இருக்கிறது. சில நாட்கள் மனதும் உடலும் மந்தத் தன்மையாக இருக்கிறது. இதை எப்படி உற்சாகமாக மாற்றுவது? ஏதேனும் டெக்னிக் இருந்தால் கூறுங்கள்.

கனகராஜன், கோவை

இயல்பாகவே நமது மனநிலை மாறும். மாறினால்தான் அது மனநிலை. ஒரே மாதிரி இருந்தால் நீங்கள் இயந்திரமாகத்தான் இருக்க வேண்டும். இன்றைக்கு ஏதேனும் ஒன்று நிகழ்ந்து அதனால் மகிழ்ச்சி வந்தால் அதற்கேற்றாற் போல் செயல்படுவதுதான் மனம். வலியை நம்மால் குறைக்க முடியும். மகிழ்ச்சியை அதிகரிக்க முடியாது.

வலியைக் குறைப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. மருந்து மாத்திரைகளை விட்டு விடுங்கள். ஆனால் இசை வலியைக் குறைக்கும். இசை தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. வார்த்தைகளில்லாமல் இசை உள்ளே வரும்போது அந்த நாதம் அந்த நேரத்தில் எந்த டென்ஷனாக இருந்தாலும் அதைக் குறைக்கும். இசை ஒன்றுதான் என்னுடைய அனுபவத்தில் சிறந்த வழி.

மறுபிறவி பற்றி அறிவியல் சொல்வதென்ன? பேய், பிசாசு பற்றியும் அறிவியல் சொல்வதென்ன?

மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை கிடை யாது. மறுபடியும் பிறப்பது, பழைய ஜென்மத்தின் கதை சொல்வது இதெல்லாம் விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. பேய், பிசாசு பற்றி நம் ஊரில் சொல்வதற்கு பல்வேறு சுவையான காரணங்கள் உள்ளன. மின்சாரம் இல்லாத காலத்தில் இரவுகளில் வெளியில் போனால் தடுக்கி விழுந்து, பாம்பு மற்றும் பூச்சிகள் கடிக்கும். அதனால் இருட்டில் போகாதே. பேய் இருக்கிறது. உன்னை பிடித்துக் கொள்ளும் என்று மிரட்டினது போக இன்றும் அப்படியே சொல்லிவருகிறோம். பேய், பிசாசு பிடித்திருக்கிறது என்று சொல்வ தெல்லாம் உண்மையில்லை.

அது மனநோய் என்பதற்கான அடிப்படை அறிகுறிகள் இருக்கின்றன. எனவேதான் அதை குணமாக்கலாம் என்று சொல்கிறோம். மறுபிறவி என்பது என்னைப் பொறுத்தவரை இப்போது நாம் தப்பிக்க சொல்லிக்கொள்கிற சௌகர்யமான ஒரு சாக்கு. இப்போது இந்தப் பிறவியில் முழு கெட்டவனாக வாழ்கிறேன். அடுத்த பிறவியில் இந்த பாவத்திற்கெல்லாம் பரிகாரம் செய்து கழித்துக் கொள்கிறேன் என்று சொல்லாமா? இல்லை. போனபிறவியில் புண்ணியம் செய்து விட்டேன். இந்தப் பிறவியில் சோம்பேறியாக இருக்கலாமா? இப்படி நாம் இதைப் பயன்படுத்தா விட்டால் இது சுவாரசியமானதாக இருக்கும்.

கலாச்சாரத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

முதலில் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். பகிர்ந்து கொள்ளவேண்டும். அதைப்பற்றி நாம் பேச வேண்டும். எதெல்லாம் நம் பண்பாடு? எதெல்லாம் நம் கலாச்சாரம்?

எதெல்லாம் நமது பாரம்பரியம்? எதெல்லாம் நமக்கு பெருமை தரக் கூடிய விஷயங்கள், அதை நம் தலைமுறையோடு நின்றுவிடாமல் நம்முடைய அடுத்த தலை முறைக்கும் சொல்லித்தரவேண்டும். கலாச் சாரத்தில் அவர்களுக்கு ஆர்வத்தை வரவைக்க வேண்டும். இதைச் செய்தால்தான் கலாச்சாரம் பாதுகாக்கப்படும்.

இல்லையென்றால், ஒரு கால கட்டத்தில் உலகம் முழுவதும் ஒரே உடை, ஒரே பேச்சு என்று வரும்போது இந்தியக் குழந்தை களுக்கு தங்களுடைய கலாசாரத்தின் சிறப்பு எது வென்று தெரியாமல் போய் விடுவதற்கான வாய்ப் பிருக்கிறது. நம்முடைய வேலை, நம் இளைய தலை முறைக்கு, நம் கலை சம்பந்தப்பட்ட பாரம் பரியத்தை நாம் சொல்லித் தர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *