வேலைக்கு ஆட்கள் தேவை இல்லை

-கிருஷ்ணன் நம்பி

சிறந்த பணியாளர்களை உருவாக்குவதற்கும் நிர்வகிப்பதற்குமான சிறப்பான யோசனைகள்:

திரும்பிய திசையெங்கும் வேலைக்கு ஆட்கள் தேவை என்கிற விளம்பரம். வேலைக்கு ஆட்கள் தேவை என்கிற போர்டு எழுதுகிற ஆர்டிஸ்ட் கூட அவர் இடத்தில் அதே போர்டை மாட்டி வைத்திருக்கிறார், அவருக்கும் ஆள் தேவைப் படுவதால்.

ஆள் என்று குறிப்பிடப்படுகிற பணிகளுக்கே இவ்வளவு தேவை இருக்கிறதென்றால் நிறுவனத்தை நிர்வகிக்கிற பணிகளுக்கு எவ்வளவு தேவை இருக்கும்.

சரியான பணியாளர்களை தேர்ந்தெடுப்பது அல்லது அவர்களை தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வழிநடத்துவது என எல்லாவற்றிற்கும் இந்தக் கட்டுரையில் விவாதிப்போம்.

அது மட்டுமல்லாமல் ஏற்கனவே வேலை பார்த்துக்கொண்டிருக்கிற பணியாளர்களையும் சிறப்பாக வேலை செய்ய வைக்க சிறந்த வழிகளை இந்தக் கட்டுரைத்தொடரில் காண்போம்.

இன்றைய பணியாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் ?

கூரை மேல சோத்தை வைச்சா ஆயிரம் காக்கா. காச விட்டெறிஞ்சா நூறு பேர் வருவாங்க என்றெல்லாம் ஒரு காலத்தில் பேசினார்கள் என்று நினைத்துப்பார்க்கவே இன்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு நிறுவனம் ஒரு பணியாளரை வேலையை விட்டு நிறுத்தினால் அவருக்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் வேலை கிடைத்துவிடும். ஆனால் அந்த பணியிடத்தை நிரப்ப அந்த நிறுவனத்திற்கு குறைந்த பட்சம் ஒரு வாரம் ஆகும். இந்த சூழலை நிறுவனங்கள் மட்டுமல்ல பணியாளர்களும் உணர்ந்தே வைத்திருக்கிறார்கள்.

நிறுவனத்திற்கு வேலைக்கு வருபவர்கள் நேர்முகத் தேர்வில் எனக்கு என்ன விதமான வேலைகள் வழங்கப்படும். நான் அதை எப்படி எல்லாம் சிறப்பாக செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்பதில்லை. முதல் கேள்வியே, “என்ன சம்பளம்?” என்பதுதான்.

புதிதாக ஒருவரை எடுத்து பயிற்சி கொடுத்து உருவாக்க நீண்ட காலம் ஆகும் என்பதால் அனுபவம் உள்ளவர்களுக்கு அதிக சம்பளம் எனும் காந்தம் காட்டி ஈர்க்கின்றன நிறுவனங்கள்.

இதனால் இப்போது இருக்கும் வேலையிலிருந்து மாறினாலே கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்ற நிலை எல்லா பணியாளர் களுக்கும் தெரிந்திருக்கிறது.

வேலை போய்விடுமே என்ற பயம் இல்லாததால் பணியிலும் நடத்தையிலும் அலட்சியம் என்பது இன்று சர்வசாதாரணமாகி விட்டது. வேலையிலிருந்து போய்விடுவார்களோ என்ற பயம்தான் இருக்கிறது. இது தலைமைப் பண்பில் உறுதியின்மையை மேலாளர்களிடம் ஏற்படுத்தி விடுகிறது.

பணியாளர் பற்றாக்குறையை காரணமாகக் காட்டி இருக்கிறவர்களை அனுசரித்து செல்லவே நிறுவனங்கள் மேலாளர்களுக்கு வலியுறுத்துகிறது. இதை உணர்ந்து கொள்ளும் பணியாளர்கள் இன்னும் மோசமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

இந்த பற்றாக்குறை தீராதா? நல்ல பணியாளர்கள் என்பது இனி பகல் கனவுதானா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் நம்பிக்கை பதில்களை இந்த கட்டுரைத் தொடரில் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *