பேசித் தீர்க்கணுமா? எழுதிப் பார்க்கணும்!

– வினயா

பல தடவை உட்கார்ந்து பேசினாலும் பிரச்சினை தீரவில்லை என்று சில விஷயங்கள் குறித்து நீங்கள் சொல்லக்கூடும். என்ன காரணம் தெரியுமா? பிறரிடம் உட்கார்ந்து பேசும் முன்னால் நீங்கள் உங்களுடன் உட்கார்ந்து பேசாததுதான்!!

ஒருவர் மேடையில் தனியாகப் பேசுகிற போது பெரும்பாலும் யாரும் குறுக்கிடப் போவதில்லை. ஆனால் குறுக்கிடாத பேச்சுக்கே அவர் குறிப்புகளுடன்தான் போகிறார். ஆனால் எதிர்வாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் இருக்கக் கூடிய சந்திப்புகளுக்கு உங்கள் கருத்துக்களை முன்னரே எழுதிப் பார்த்துக் கொள்வது முக்கியம்.

தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர் ஒருவரிடம் அந்தப் பழக்கமுண்டு. அடுத்தநாள் அவரை சந்திக்க முன்னனுமதி பெற்றவர்களின் பட்டியல், முதல் நாளே அவரிடம் இருக்கும்.

ஒவ்வொருவராக வரும்போது, அந்தத் தலைவரின் உதவியாளர் அவரிடம் ஒரு துண்டுச் சீட்டைத் தருவார். அந்த சீட்டில், வந்திருக்கும் மனிதரிடம் பேசவேண்டிய விஷயங்கள் குறிக்கப் பட்டிருக்கும். தன்னைக் காண வருபவர்களிடம் பேசவேண்டியவை பற்றி முதல்நாளே அந்தத் தலைவர் சிந்தித்திருக்கிறார் என்பதற்கு இது அடையாளம்.

ஒவ்வொரு சந்திப்பைப் பற்றியும் சின்னச் சின்னக் குறிப்புகளை முன்கூட்டியே எழுதுங்கள். உதாரணமாக,

1. “இந்த வாடிக்கையாளர் விலையைக் குறைக்கச் சொல்லி உறுதி காட்டுகிறார். இயலாமைக்கான காரணங்களை அவர் ஏற்கும் விதமாக சொல்ல வேண்டும்”.

இது முதல் குறிப்பு. என்னென்ன காரணங் களை சொல்லலாம் என்கிற பட்டியலையும் அடுத்து தயார் செய்யுங்கள்.

“தரத்திற்கு முக்கியத்துவம் தருகிற தயாரிப்பு. மற்ற தயாரிப்புகளை விட கூடுதல் உத்திரவாதம் இருப்பதால் விலையைக் குறைக்க முடியாது”. இது ஒரு காரணமாக சொல்லப்படலாம்.

ஆனால், இத்தகைய காரணங்களை சொல்வதாக அவர் சற்றே இறங்கி வரக்கூடுமே தவிர உடனடியாய் ஒப்புக்கொள்ள மாட்டார். அடுத்த கட்டமாக, உபரிப் பொருட்களிலோ, அடுத்த ஓராண்டுக்கான பராமரிப்புக் கட்டணத் திலோ கணிசமான தள்ளுபடி தருவதாகச் சொல்லலாம்.

இத்தகைய குறிப்புகள், ஓர் உரையாடல் எந்த விதமாக நடக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப திட்டமிடத் துணை புரியும்.

ஓர் ஒப்பந்தத்தையோ பிரச்சினையையோ பேசித்தீர்க்க, முன் யோசனையும் முன்னேற் பாடுகளும் முக்கியம் என்றாலும், அதைப் போலவே சமயோசிதமும் சாமர்த்தியமும் மிகமிக முக்கியம்.

நீயா, நானா என்ற தொனியில் ஓர் உரையாடல் தொடங்கினாலும் கூட, இறுதியில் நீயும் நானும் என்ற முடிவை எட்டுவதே புத்திசாலித்தனம்.

யார் முதலில் விட்டுக் கொடுப்பது என்கிற கௌரவப் பிரச்சனைதான் பெரும்பாலும் பேச்சு வார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையாய் இருக்கும். விட்டுக் கொடுப்பதில் முந்திக் கொள்பவர்களுக்கு முன்னேற்றம் காத்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *