வேர் தேடும் வார்த்தைகள்

– வினயா

உலக மயமாகிவிட்ட சில ஆங்கிலச் சொற்களின் உண்மையான மூலம் வேறு மொழிகளில் வேர் கொண்டிருக்கும். அந்த வேர் தேடிப் பயணம் போனால் புதிய புதிய தகவல்கள் கிடைக்கின்றன!

ரோமானியர்களின் தெய்வம் ஜீனோ மானடா. பல அபாயங்களை முன்கூட்டியே அறிவித்து அவர்களைக் காத்த கடவுளாகிய மானடாவின் பெயர், Moneo என்ற இலத்தீன வார்த்தையிலிருந்து வந்தது. பணத்துக்கு Moneo என்ற பெண் தெய்வத்தின் பெயர்தான் Money என்று ஆனது. Moneo அவங்க ஊர் தனலட்சுமி!!

பணம் என்றதுமே பட்ஜெட் என்ற சொல் ஞாபகத்துக்கு வரும். பட்ஜெட் என்பது, பகெட் என்ற பிரெஞ்சு சொல் மூலம் வந்தது. பகெட் என்றால் சிறிய தோல்பை என்று அர்த்தமாம்.

200 ஆண்டுகளுக்கு முன் சின்னக் கூழாங்கற்களை எண்ணிக்கை அறியப் பயன் படுத்தினர். அந்தக் கூழாற்கற்களுக்கு Calculi என்று பெயர். கேல்குலேட்டர் வந்தது இப்படித்தான்.

வீட்டம்மாவை நிதி மந்திரி என்று பலர் சொல்வார்கள். வீட்டைப் பார்த்துக் கொள்வது என்பதற்காக கிரேக்க வார்த்தை Oikonomia இதிலிருந்துதான் economy என்ற சொல்லே பிறந்தது. பொருளாதாரத்தின் பிறப்பிடமே வீட்டு நிர்வாகம் தான்!!

உற்பத்திக்கு மனித சக்தியைப் பயன்படுத்தாமல் எந்திரங்கள் வந்துவிட்டன என்று வருத்தப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. மனு, பாக்சுர என்ற இரு இலத்தீன் சொற்களில் இருந்துதான் manufacture என்ற சொல்லே வந்தது. அதற்கு அர்த்தமே கைகளால் செய்யப்படுவது என்பது தானாம்!!

”இவங்களையெல்லாம் கட்டி மேய்ப்பதற்கு பேசாம கழுதையோ குதிரையோ மேய்க்கலாம்” என்று எந்த மேனேஜராவது அலுத்துக் கொண்டால் வருத்தப்படாதீர்கள். maneggiare என்ற இத்தாலியச் சொல்லில் இருந்துதான் manager என்ற ஆங்கிலச் சொல்லே வந்தது.

maneggiare என்றால் குதிரை மேய்ப்பவர் என்று அர்த்தம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *