– பிரதாபன்
இந்தியாவின் பெருநகரமொன்றில், தொழில் செய்து வரும் அந்த மனிதர் பல துறைகளில் வெற்றிக்கொடி நாட்டியவர். தென் மாவட்டமொன்றில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் கொண்ட தோப்பு அவருக்கு சொந்தமானது. தன் தொழில்சார்ந்த நண்பர்களை ஒருமுறை தன்னுடைய தோப்புக்கு அழைத்துப் போனார் அவர்.
தென்னை வளர்ப்பில் அவர் கடைப்பிடிக்கும் தொழில் நுட்பட்த்தையும், தோப்பில் துலங்கும் தூய்மை யையும் நெடிது வளர்ந்திருக்கும் தென்னைகளின் ஆரோக்கியத்தையும், நண்பர்கள் வாயாரப் புகழ்ந்தார்கள்.
முற்பகல் நேரம்.உடனிருந்த ஏழெட்டு நண்பர்களையும் பார்த்து, “என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்டார் அந்தத் தொழிலதிபர். “தென்னந் தோப்புக்கு வந்துட்டு வேறென்ன சாப்பிடுவோம்? நல்ல இளநீர் கொடுக்க சொல்லுங்க” என்றனர் நண்பர்கள். தோப்பிலிருந்த வேலையாளை அழைத்தார் அந்தத் தொழிலதிபர்.
“நல்ல இளநீரா வேணும். எத்தனை பேர் இருக்காங்கன்னு எண்ணிக்க. தெருமுனையில நம்ம தங்கராசு இளநீர் வித்துகிட்டிருக்கான். அவன்கிட்டே போய், நான் சொன்னேன்னு சொல்லி, என் கணக்கில இளநீர் வாங்கிகிட்டு வா” என்று அனுப்பினார்.
அத்தனை நண்பர்களும் அதிர்ந்து போய் நின்றார்கள். அவர்கள் அதிர்ச்சியைப் பார்த்த தொழிலதிபர், சிரித்துக்கொண்டே சொன்னார், “இப்போதுதான் இந்தத் தோப்பு எவ்வளவு தூய்மையாய் இருக்கிறது என்று சொன்னீர்கள். அதற்கு இதுதான் காரணம். நான் உங்களுடன் நம்முடைய நகரில் இருக்கிறேன். எப்போதாவதுதான் இங்கே வருகிறேன். நான் என்னுடைய தேவைக்கு இங்கே இளநீர் வெட்டச் சொன்னால், இங்கே இருப்பவர்கள் தங்கள் தேவைக்காக இளநீர் வெட்டிக் கொண்டே இருப்பார்கள். எனக்காகக் கூட இளநீர் வெட்டக்கூடாது என்று சொல்லிவிட்டால் பிரச்சினையே இல்லை.”
விற்பனைக்கென்று முடிவு செய்தபின் வளர்ப்பவர்களுக்குக்கூட தென்னை சொந்தமில்லை என்கிற விதியை ஏற்படுத்தி விட்டால் விரயங்களும் நஷ்டங்களும் தவிர்க்கப்படும் என்பது அவருடைய கணக்கு!!
Leave a Reply