வாங்க டீ சாப்பிடலாம்

காலை பத்தரை மணியிருக்கும். முன்னும் பின்னும் இருவர் முகம் நிறைய சிரிப்புடன் அழைத்துவர, பேண்ட் சட்டை போட்ட பலியாடு போல் அந்த பேக்கரிக்குள் அவர் அழைத்து வரப்பட்டார்.

“மூணு முட்டை பப்ஸ் மூணு டீ” என்று ஆர்டர் செய்த கையோடு, “சொல்லுங்ணா” என்று தொடங்கினார், முதலில் வந்த இளைஞர். “பழனிவேல் சொன்னாப்லீங் கண்ணா! நீங்க இன்வெஸ்ட் பண்ண ரெடி, நல்ல ப்ராஜக்ட் தேடறீங்கன்னு!”

“ஆமாம்! ப்ராஜக்டும் பார்ட்னர்ஷிப்பும் சரியா அமைஞ்சா பண்ணலாம்னுதான்” என்றதை காதில் போட்டுக் கொள்ளாமல், “பிரமாதமான புராஜக்ட் எல்லாம் இருக்குங்க!

ஆபீசுக்கெல்லாம் ஸ்டேஷனரி சப்ளை பண்ணலாம். நம்ம சகலைதான் ஹோல்சேல் டீலர்! உங்க பட்ஜெட் எவ்வளவு சார்” என்று தொடர்ந்தார் அவர்.

“பட்ஜெட் என்னங்க! ஏழு லட்சம் இதுக்குன்னு ஒதுக்கியிருக்கேன். நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு போடலாம்னு இருக்கீங்க?” நேராக விஷயத்துக்கு வந்ததும் பழனிவேல் முகத்தில் ஈயாடவில்லை. “அதெல்லாம் பேசிக்கலாம் ராஜு! நம்ம ரமேஷ் நிறைய புராஜக்ட் சொல்வாப்ல” என்றதும் விஷயம் புரிபடத் தொடங்கியது பலியாட்டுக்கு.
அதற்குள் சுதாரித்துக்கொண்ட ரமேஷ், “பண்றதுக்கு எவ்வளவோ புராஜக்ட் இருக்குங்கண்ணா! மொதல்ல ஆபீசொண்ணு போட்டுடுங்க! ஆபீசில ஒக்காந்து யோசிச்சா நெறய ஐடியா வரும்.

ஸ்டேஷனரி சப்ளை பண்ணலாம், பிரிண்டிங் ஆர்டர் எடுக்கலாம். கம்பெனிகளுக்கு தெனம் பிளவர் வாஸ் சப்ளை பண்ணலாம்.

ஐடியா தானுங்க முக்கியம். ஒரு நல்ல பிசினஸ் ஐடியாவே பத்து லட்சம் இன்வெஸ்ட் பண்ணினதுக்கு சமம்” என்றொரு பிட்டைப் போட்டார்.

“அதெல்லாம் ரைட்டுங்க! நமக்குன்னு இடமே இருக்கு! ஆபீஸ் போடறதெல்லாம் சிக்கலில்லை. சேர்ந்து பிஸினஸ் பண்ணலாம். நான் ஏழு ரூபாய் போடறேன். நீங்க ஆளுக்கு ஒண்ணரை போட்டாக்கூட போதும். மொத்தம் பத்து ரூபாய் இன்வெஸ்ட்மென்ட்லே தொடங்கீடலாம்.

இதை ஃபைனலைஸ் பண்ணீட்டா நீங்க சொல்ற மாதிரி புராஜக்ட் கூட அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்” என்று ஒரே போடாகப் போட்டார் ராஜு.

முட்டை பப்ஸை விழுங்க முடியாமல் ரமேஷும் பழனிவேலும் விழி பிதுங்க, பக்கத்து மேசையில் டீயை உறிஞ்சிக் கொண்டிருந்த நமக்கும் விஷயம் விளங்கியது.

ரமேஷும் பழனிவேலும் வெறுங் கையில் முழம்போடும் வெட்டி ஆபீசர்கள். ராஜுவை தொடங்க வைத்து ஐடியா பார்ட்னர்கள் ஆக அடிபோடுகிறார்கள். ஒரு பைசா முதலீடு இல்லாமல் ஒப்பேற்றலாம் என்று.

பார்த்தால் ராஜு மசிவதாய் இல்லை.

“யோசனை பண்ணி பழனிவேல்கிட்டே சொல்லி அனுப்பறேண்ணா” பம்மிக் கொண்டே ரமேஷ் எழ, செயற்கைச் சிரிப்புடன் கைகொடுத்து வழியனுப்பினார் ராஜு.

சொல்லி வைத்தாற்போல பேக்கரியில் பாடல் ஒலித்தது. “திண்ணைப்பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *