உங்கள் குழந்தை பில்கேட்ஸ் ஆகவேண்டுமா?
-அத்வைத் சதானந்த்
பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு பத்திரிகையில் படித்த செய்தி இன்றும் எனக்கு பளிச்சென்று நினைவில் இருக்கிறது.
அவர் உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர். அவர் பணத்தை எப்படி செலவிடுவது? என்று சில யோசனைகளை அதில் சொல்லி இருந்தார்கள்.
அவரிடம் இருக்கும் பணத்தை கொண்டு 80 நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தியை வாங்க முடியும். அதையெல்லாம் வாங்கி என்ன செய்வது என்று அவர் நினைத்தால், இருக்கும் பணத்தை பிரித்து கொடுத்துவிடலாம். அப்படி பிரித்து கொடுத்தால் உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 414 ரூபாய் கிடைக்கும்.
ஏன் உலகம் முழுவதும் பிரித்து கொடுக்க வேண்டும்? இந்தியா வளரும் நாடு இந்தியர்களுக்கு மட்டும் பிரித்து கொடுக்கலாம் என்று நினைத்தால் ஒவ்வொரு இந்தியருக்கும் 2012 ரூபாய் கிடைக்கும். அவர் யார் என்று உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
அவர் உலக இளைஞர்களின் கனவு நாயகன் பில்கேட்ஸ்.
பணம் சம்பாதிப்பது பாவம் என்றோ அல்லது பெரிய ரிஸ்க் என்றோ நினைத்துதான் நம்மில் பலர் குழந்தைகளை தொழில் ஈடுபடுத்த விரும்புவதில்லை. மாதாமாதம் சம்பளம் வரும் சோம்பேறி வாழ்க்கைக்கே பழக்கிவிடுகிறோம்.
அவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்கிறீர்களா? பில்கேட்ஸ் போலவே உதவி செய்யுங்கள். மனித குல வரலாற்றில் அதிகம் நன்கொடை கொடுத்தவர் என்பதற்காக கின்னஸ் ரெக்கார்டு செய்திருக்கிறார் கேட்ஸ்.
சரி என் குழந்தையை நான் தொழிலதிப ராக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். இப்போது என்ன செய்ய வேண்டும்? என்கிறீர் களா? பில்கேட்ஸிடமிருந்தே நம் பாடத்தை தொடங்குவோம்.
கம்ப்யூட்டர் கிடைத்தால் கேம் விளையாடுகிற 13 வயதில் பில்கேட்ஸ் கம்ப்யூட்டரில் ஒரு கேமையே வடிவமைத்தார். நம் ஊர் சிறுவர்கள் விளையாடும் நாடுபிடித்தல் போன்ற விளையாட்டு அது.
இந்த உலகத்தின் தலைவனாவது எப்படி? என்ற அந்த கேமிற்கு பில்கேட்ஸ் வைத்த பெயர் ரிஸ்க். விளையாட்டில்கூட, ‘உலகத்திற்கு தலைவ னாவது எப்படி?’ என்று சிந்தித்ததுதான் அவரை நிஜ வாழ்க்கையிலும் உலகத்தின் தலைவனாகவே வைத்திருக்கிறது.
இந்தச்செய்தியிலிருந்து நாம் கற்க வேண்டியது இதுதான். கல்லூரி நாட்களில்தான் பில்கேட்ஸ் பிசினஸ்மேனாக மாறினார். அதுவரை அவர் கம்ப்யூட்டரின் காதலராக மட்டுமே இருந்தார். எனவே உங்கள் குழந்தைகளின் எந்த ஆர்வத்திற்கும் ஆரம்பத்திலிருந்தே தடை போடாதீர்கள்.
சிறு வயதில் ரோட்டை கிராஸ் செய்வது, வண்டி ஓட்டுவது என்று எந்த ஒரு வாய்ப்பையும் உங்கள் பயத்தின் காரணமான தடை செய்து கொண்டே இருக்காதீர்கள். ரிஸ்க் இல்லாமல் வாழ்க்கை இல்லை.
ஓடாதே, விழுந்துவிடுவாய் என்று சொல்வதற்கு பதில் கவனமாக ஓடு, உறுதியாக ஓடு என்று சொல்லுங்கள். உங்கள் வார்த்தைகளில் இருந்து பெறும் நம்பிக்கை அவர்கள் வாழ்க்கையை மாற்றட்டும்.
உலகத்தின் நம்பர் 1 நாற்காலியில் தொடர்ந்து இருக்கிறார் பில்கேட்ஸ். உங்கள் குழந்தைகளையும் அந்த உயரத்தில் வைத்து பார்க்க தயாராவோம், வாருங்கள்.
adsl
good