நம்பிக்கை தான் என் பலம்

நேர்காணல்: கனகலட்சுமி

டாக்டர். அம்பேத்கார் சட்டக் கல்லூரியின் முதல் திரு. ராமமூர்த்தி அவர்களுடனான நேர்காணல்

உங்களைப் பற்றி…

நாங்கள் நான்கு தலைமுறைகளாகவே பெங்களூரில் வசித்து வருகிறோம். என் தகப்பனார் பென்னி ஆலையில் வேலை பார்த்து வந்தார். என் கல்லூரி படிப்பு முடிந்ததும் அதே ஆலையில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆலையிலே பணிபுரிந்தவாறே டிப்ளமோ படிப்பு ஒன்று முடித்தேன். இருப்பினும் நான் செய்து வந்த பணியில் கல்விக்கும், தகுதிக்கும் முக்கியத்துவம் இருப்பது போல தெரியவில்லை.

என் கல்வி சார்ந்த அறிவு முடக்கப்படுவது போல் உணர்ந்ததால் அந்த வேலையை துறந்தேன். அப்போது எத்தனை வகையான அரசுத்தேர்வு நடைபெற்றதோ அனைத்திலும் பங்கேற்றிருக்கிறேன், வங்கி தேர்வு, சிபிஐ தேர்வு என அனைத்தையும் எழுதினேன். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஏதோ ஒரு அரசுத் தேர்வில் தேர்ச்சி பெற தட்டச்சு தேர்வு நடத்தினார்கள். நன்றாக பயிற்சி எடுத்திருந்த போதும் தேர்வு நாள் அன்று ஒரு பெரிய அறையில் தேர்வு துவங்குவதாக அறிவிக்கப்பட்டதும் என்னைச் சுற்றி அமர்ந்திருந்த மற்ற மாணவர்கள் வேகமாக தட்டச்சு செய்வது கண்டு பதட்டமாகி போனது. என்னால் கொடுக்கப்பட்ட நேரத்தில் முழுவதுமாக தட்டச்சு செய்ய இயலவில்லை.

நேரம் முடியப் போவதால், இந்தத் தேர்வுத்தாளை யார் முழுவதுமாக படிக்க போகிறார்கள் என்று எண்ணி இடையே இரண்டு வரிகளை விட்டுவிட்டு சட்டென்று பத்தியின் இறுதி வரிகளை தட்டச்சு செய்து தேர்வை முடித்தேன். அப்போது ஒரு மாணவ மனநிலையில் நான் செய்த தவறு அது.

வெளியே வந்ததும் ஏற்கெனவே தேர்வாகியிருந்த மாணவர்கள் நான் செய்தது தவறு என்று சுட்டியபோது மிக வருந்தினேன். எதிர்பார்த்ததை போல அந்தத் தேர்வில் வெற்றி பெறவில்லை. அதேபோல் சிபிஐ தேர்வில் மிக நன்றாக எழுதி மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தேன். 80 மதிப்பெண் இருந்தால் தேர்வு பெறலாம் என்ற நிலையில் நான் வாங்கியிருந்த மதிப்பெண் 78. எத்தனை தோல்விகள் வந்தாலும் ஒருமுறைகூட நம்பிக்கையை தவறவிட்டது இல்லை. அன்று அனைத்து தேர்வுகளுக்காகவும் படித்த அறிவு இன்றைய வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.

வக்கீல் தொழிலை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள். அது உங்களுக்கு சுலபமாக இருந்ததா?

வேலைக்காக எத்தனையோ நபர்களுடன் தினம் தினம் போட்டி போட வேண்டிய கட்டாயம் இருந்தது. நான் என் நண்பர்கள் மூன்று பேர். ஒன்றாகவே இருப்போம். அடுத்தடுத்து வேலை கிடைக்கவும் ஒவ்வொருவராக சென்ற பின் நாம் ஏன் சுயமாக தொழில் துவங்க கூடாது? என்ற எண்ணம் வந்தது. ஆனால் முதலீடு இல்லாத தொழிலாகவும் இருக்க வேண்டும். எனவே வக்கீலுக்குப் படிக்கலாம் என்று முடிவு செய்தேன்.

அந்த வாழ்க்கையும் மிகச்சுலபமாக இருந்து விடவில்லை. நான் படித்த அனைத்தையும் விட்டு விட்டு வக்கீலுக்கு படிக்கத் துவங்கியபோது பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தேன். அவர்களைப் பொறுத்தவரை பொருளாதார ரீதியாக நான் மிகவும் சிரமப்படுவேன் என்று நினைத்தார்கள். ஆனால் நான் அப்போதே வீக்கோ நிறுவனத்தின் பொருள்களை ஏஜென்சி போல் எடுத்து விற்பனை செய்வேன். அதற்கு எனக்கு தேவையாய் இருந்தது 3 அல்லது 4 மணி நேரம் தான். அதற்குள் கொடுக்கப்பட்ட இலக்கை முடித்து விடுவேன்.

விற்பனையின் தந்திரமே க்ளையண்டு களுக்கு நம்மீது நம்பிக்கை வரும் வண்ணம் பேசி அவர்களை ஒப்புக் கொள்ள வைப்பதுதான். இந்த வேலையை செய்ய பெட்ரோல் அலவன்ஸ் என்று அப்போது 10 ரூபாய் கொடுப்பார்கள். அதில் 5 ரூபாய் பெட்ரோல் போட்டது போக மீதி 5 ரூபாயில் என் செலவுகளை பார்த்துக் கொள்வேன். என் சேமிப்பிற்கும் செலவிற்கும் அந்த 5 ரூபாய் மிகவும் உந்துதலாக இருந்தது. அத்தோடு நான் வழக்கறிஞராக பெங்களூர் நீதிமன்றத்தில் பயிற்சி செய்தபோது எனக்குத் தெரிந்த கல்லூரி ஒன்றில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றினேன். எனக்கு கிடைத்த மூத்த வழக்கறிஞர்களும் நான் அவர்களுக்கு உதவியாக இருந்ததால் அவர்களுக்கு கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை எனக்குக் கொடுத்தனர்.

ஒரு சாதாரண வழக்கறிஞராக பணியைத் துவங்கிய நீங்கள் இன்று பல சாதனையாளர் களுடனும், அரசியல் தலைவர்களுடனும் மிக நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

அன்றைய காலகட்டத்தில் பெங்களூரில் சிட்டி மார்க்கெட்டில், தெருவோரமாக கடைகள் வைத்திருந்தவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும், பிரச்சனைகளையும் கையில் எடுத்து அவர்களுக்கான தீர்வை இலவசமாக செய்து கொடுத்தேன். இது அப்போதைய பத்திரிகைகளில் வெளியாகி எனக்கு ஒரு பரிச்சயத்தை ஏற்படுத்தியது. அப்போது கர்நாடகாவில் அரசியல் கட்சி ஒன்று உருவானது. காலப்போக்கில் அக்கட்சிக்கு தலைவராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதுதவிர தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகளின் போதும், முக்கிய திருப்பங்களின் போதும் இரண்டு மாநில முதல்வர்களிடையேயும் தூதுவராக குழுவில் இடம் பெற்றிருந்தேன்.
இவர்கள் அனைவரிடமும் நெருக்கமாக இருக்க ஒரே காரணம் அணுகு முறைதான். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகும் பண்புதான்.

இந்தத் தொழிலில் நீங்கள் சந்திந்த சவால்கள் என்னென்ன? அதை எப்படி எதிர் கொண்டீர்கள்?

எனக்கு பலமுறை பல்வேறு விதமான அச்சுறுத்தல்கள் வந்ததுண்டு. மக்கள் பிரச்சனையில் இருந்து ஒதுங்கினால் பணம் தருகிறோம் என்றுகூட சொல்லக் கேட்டிருக்கிறேன். இங்கு ஒரு சிறையில் தவறு செய்யாமல் அடைக்கப்பட்டிருந்த 127 பேரை பற்றிய வழக்கை நான் மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அது குறித்த தகவல்களை வெளியிட்டேன். பலரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதபோது ஏசியன் ஏஜ் என்ற பத்திரிகை அது குறித்து செய்தி வெளியிட்டது. அவர்களுக்கு விடுதலை வாங்கித்தர உதவியது. இப்படி பல சவால்கள் இருந்தபோதும் என் நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழந்ததில்லை. அதுதான் எல்லாவற்றையும் எதிர்கொள்ள துணையாக இருந்தது.

வெற்றிகரமாக வழக்கறிஞர் தொழில் செய்து வந்த நீங்கள் ஏன் கல்லூரி ஆரம்பிக்க விரும்பினீர்கள்?

நான் வழக்கறிஞராக இருந்திருந்தால் 4 வக்கீல்களைத்தான் உருவாக்கியிருக்க முடியும். ஆசிரியராக இருப்பதால் இப்போது வருடத்திற்கு 100 மாணவர்கள் வீதம் பலரையும் உருவாக்கி கொண்டேயிருக்க முடியும் என்ற எண்ணம்தான்.
உங்கள் கல்லூரி உருவான விதம் குறித்து…

நான் கல்லூரி ஆரம்பிக்க முடிவு செய்தபோது என்னிடம் இருந்தது வெறும் 250 ரூபாய். அதில், பல்கலைக்கழகத்தில் ஒரு புதிய கல்லூரி துவங்குவதற் கான விண்ணப்பப் படிவம் வாங்க மட்டுமே முடிந்தது. அத்தோடு ஒரு லட்சம் ரூபாய்க்கு டிடி எடுக்க வேண்டும் மற்றும் கல்லூரி துவங்க இடம் வேண்டும். ஆனால் ஆழ்மனதில் ஒரு வேகம் இருந்தது, எப்படியும் சாதித்து விட முடியும் என்று. 48 மணிநேரத்திற்குள் எனக்கு தெரிந்த நண்பர்களிடம் எல்லாம் சிறு தொகையாக கேட்டேன்.

நான் பணத்தை கேட்க மிகவும் கூச்சப் பட்ட போதும், நான் என்றோ அவர்களுக்கு செய்த உதவிகளாலும் நல்ல உறவுகளாலும் யாரும் மறுக்கவில்லை. கிடைத்த பணத்தை கொண்டு டிடி எடுத்துக் கொண்டேன். சட்ட புத்தகங்களை கல்லூரிக்காக எனக்கு தெரிந்த இடத்தில் இருந்த மாதக்கடனுக்கு வாங்கினேன். 5 அறைகள் கொண்ட ஒரு இடத்தை தேர்வு செய்தேன். அப்போது எனக்கு தெரிந்த ஒருவர் எனக்கு 6 லட்சம் கொடுத்து உதவ முன்வந்தார். ஆனால் கொடுத்த சில ஆண்டுகளில் எல்லாம் அதை இரண்டு மடங்காக வட்டியுடன் திரும்பக் கேட்டார். அவர் கேட்ட தொகை 18 லட்சம். சிறு தொகை கொடுத்துதவ நண்பர்கள் இருந்தாலும், இது பெரும் தொகையாக இருந்தது. அப்போது வங்கியில் பணிபுரியும் என் நண்பர் நினைவுக்கு வந்தார். அவர் மூலமாக என்னிடம் இருந்த சில நிலப் பத்திரங்களை வைத்து அவர் கடனை அடைத்தேன்.

இந்தக் கடனை அடைக்க நான் எடுத்துக்கொண்ட 5 நாட்களுக்குள் நான் பல வன்முறைகளை, அச்சுறுத்தங்களை சந்தித்தேன். அத்தனையையும் கடந்து வர எனக்கு உறுதுணையாக இருந்தது விடாமுயற்சிதான்.

அந்தக் காலகட்டத்தில் உங்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கு நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன?

கல்லூரி துவங்கியபோது சிறு பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்தேன். அதைத் தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகள், விசாரணைகளுக்கு நானே பதிலளித்தேன். இங்கு படிக்கும், பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு தரமான கல்வி மற்றும் அனைத்து வசதிகளும் தரமான முறையில் செய்து கொடுப்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டேன். நான் வகுப்பில் சந்திக்கும் ஒவ்வொரு மாணவர்களிடமும் என்னையே காண விரும்புகிறேன். கல்லூரியை வெற்றிகரமாக நடந்த பல சிரமங்களை சந்திக்கிறபோதும் சில சமயங்களில் சோர்வடைவதுண்டு. அப்போ தெல்லாம் இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் கல்லூரியின் துணை முதல்வர் ஜோதி. இத்தனை சிரமங்களிடையே என்னை வேதனைக்குள்ளாக்கிய விஷயம் எத்தனை நல்லவர்களாக நாம் சமூகத்தில் நடந்து கொண்டாலும், சில நேரம் வாழ்க்கை நம்மை மோசமாக நடத்துகிறது. இருப்பினும் அந்த தடைக்கற்கள்தான் இன்று எங்கள் வளர்ச்சியின் அடித்தளம்.

சூழ்நிலை கைதிகளாய் இன்றும் அடிமட்டத்தில் இருக்கும் இளைஞர்கள் மேலும் உயர நீங்கள் கூறுவது?

இது இயலாத என்ற எண்ணம் மட்டும் ஆகாது. நம்பிக்கை 99 சதவீதமும் 1 சதவீதம் முதலீடும் இருந்தால் போதும் என்பது என் அனுபவம். யாராக இருந்தாலும் எந்தத் தொழிலையும் செய்ய இயலும் என்ற உத்வேகம் வேண்டும். கல்வி அடிப்படை இல்லாத எந்த வேலையையும் நான் இப்போதும் செய்ய தயாராக இருக்கிறேன். இப்போதும் என்னால் என் கழுத்தில் இருக்கும் டையுடன் ரோட்டில் தெருவோர கடைகள் போட்டு வியாபாரம் செய்யமுடியும். இந்த முனைப்புத்தான் அடிமட்டத்தில் இருந்து நம்மை உயர்த்தும் உக்தி.

முன்பொரு கேள்வியில் கல்வித் தகுதிக்கு அறிவுக்கும் முக்கியத்துவம் இல்லாததால் ஓர் ஆலை வேலையை துறந்ததாக கூறினீர்களே?

ஆம். அடிப்படையில் நான் அந்த வேலையை நிராகரிக்கவில்லை. அதிலிருந்து உயர வேண்டும் என்ற தேடுதலும், இந்த வளர்ச்சி போதாது என்ற வேட்கையும்தான் என்னை அடுத்தநிலைக்கு கொண்டு சென்றது. இருக்கும் நிலையிலிருந்து மேலும் உயர வேண்டுமென்ற தேடலும், வேட்கையும் இன்றைய இளைஞர்களுக்கு நிச்சயம் தேவை.

பல மாணவர்களை உருவாக்குகிறீர்கள். இன்றைய தலைமுறையோடு தொடர்ந்து தொடர்ப்பில் இருக்கும் நீங்கள் அவர்களுக்கு சொல்ல நினைப்பது?

நான் எப்போதும் என் மாணவர்களுக்கு சொல்வது, என்னை பெரிதும் ஈர்த்தவர் தமன்ன செட்டியாரின் கருத்துக்களைத்தான். அவர் எழுதிய நூல்களும், நம்பிக்கை விதைக்கும் கருத்துகளும்தான் என் வெற்றிக்கு துணை நிற்பவை. ஒரு முறை அவர் நூலை படித்து கொண்டிருந்தபோது அவரிடம் பேச ஆவலாக இருந்தது. அந்தப் புத்தகத்தில் கொடுக்கப் பட்டிருந்த எண்ணை அழைத்த போது அவரே தொலைபேசியை எடுத்தார்.

நம்முள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மனிதர் சட்டென்று பேசியதில் என்னால் பேச முடியவில்லை. தபால் மூலம் தொடர்பு கொண்டேன். எனக்கு அவர்க்கும் நடந்த கடிதப் பரிமாற்றங்கள் அவை ஊட்டிய நம்பிக்கையைத்தான் இளைஞர் களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எங்கள் வழக்கறிஞர் தொழிலின் மிகுந்த புகழ்பெற்றவர் ராம்ஜெத்மலானி. என்னால் ஒரு ராம்ஜெத்மலானியாக உயர முடியாவிட்டாலும் அவருக்கு நண்பர் ஆகும் அளவுக்கு உயர முடிந்துள்ளது. நம்பிக்கைதான் நாம் போகும் பாதையின் கைவிளக்கு. இதைத்தான் என் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன் என்று பேட்டியை முடித்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *