– இயகோகா சுப்பிரமணியம்
இருளைத் தாண்ட உறவும் நட்பும் உதவும்
-தொடர்
தொழில், பணி, சேவை – இந்த மூன்றின் வெற்றிக்குமே அடிப்படையான ஒரு தேவை மனித உறவு. எல்லாரிடமும் நன்றாகப் பழக வேண்டும். இனிமையாகப் பேச வேண்டும் என்பது உறவு மேம்பாட்டுக்கான நல்வழி.
ஆனால் தேவையான சிலரிடம் மட்டும் நல்ல முகத்தையும், இனிமையையும், பணிவையும் காட்டி விட்டு, கோபம், வெறுப்பு, அலட்சியம் போன்ற முகமூடிகளை இன்னொரு சாராரிடம் காட்டி வெற்றிகரமாக நடித்து வெற்றி பெறுபவர்களும் உண்டு.
ஆனால் யாரிடமுமே உறவு, நட்பு, அனுசரணை இல்லாமல் வெற்றிகரமாகச் செயல்படுவது இயலாத காரியம்.
அனைவரிடமும் அன்பு பாராட்டிய தருமன், இறுதிவெற்றி அடைந்தபோது பாரதக்கதை முடிந்து அனைவர்க்கும் மகிழ்வளித்தது.
போரிலே தோற்றுப்போனாலும், கர்ணனைப் போன்ற நல்ல நண்பர்களைக் கொண்ட காரணத்தாலும், மற்ற தொண்ணூற்று ஒன்பது உடன்பிறந்த சகோதரர்களை நல்ல முறையில் உறவோடும் அன்போடும் வைத்து இருந்த காரணத்தாலும் தேவலோக மோட்சம் பெற்றது மட்டுமின்றி மரியாதைக்குரியவனாகவே மதிக்கப்படுகின்றான், துரியோதனன். ஆனால் கண்ணனின் மாமனாகிய கம்சன் எந்த உறவையும், நட்பையும் போற்றி வளர்க்காத காரணத்தால் மரணம் சம்பவித்தபோது யாருமற்ற மனிதனாகி மடிந்தான். மேற்கூறிய உதாரணம் நமது நாட்டு இதிகாசத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இன்றும் மனித உறவும், நட்பும் தொடர்ந்து நல்லதைச் செய்து கொண்டே இருக்கின்றன என்று கூறும் புராண, இதிகாசக் கதைகள் ஏராளம். தனி மனித வாழ்வில் உறவும் நட்பும் என்றும் நம்முடனேயே இருக்கின்றன. அதில் சில சமயங்களில் விரிசல் ஏற்படுவதும், பிளவு உண்டாவதும் சகஜம். சில ஒரேடியாக முறிந்து பகையாக மாறி, காலப் போக்கில் எந்தத் தொடர்பும் இன்றிப் போவதுமுண்டு. இடையே சேரும் சில உறவுகளும், நட்புகளும் இறுதிவரை துணையிருப்பதும் உண்டு.
தொழில் கூடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் ஏற்படுகின்ற நட்புகள், உறவுகள் தொழிலுக்கும், தனிமனித முன்னேற்றத்துக்கும் வெற்றிக்கும் நிறையவே உதவுகின்றன. தனி ஒரு மனிதனின் எண்ணங்களும், கனவுகளும் மற்றவர் களது உதவியில்லாமல் வெற்றி வெளிச்சத்திற்கு வரவே முடியாது.
நண்பர் ஒருவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே, ஏதாவது ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்ற துடிப்பிலேயே இருப்பார். கல்லூரி முடிந்து மூன்று ஆண்டுகள் இரண்டு நிறுவனங்களில் பணியாற்றிய பின்னர், சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கினார். முதலீட்டின் தேவை கருதியும், தொழில் நுட்ப முக்கியத்துவம் கருதியும் தன்னுடன் படித்த இன்னொரு நண்பரையும் உடன் இணைத்துக் கொண்டார். இணைந்த நண்பரின் உறவு மிகவும் வசதி வாய்ந்ததோடு, நிறைய தொழிலதிபர்களிடம் தொடர்பு கொண்டவர்களாகவும் இருந்தனர். எனவே நிறுவனம் தொடங்கவும் அது சில ஆண்டு களில் வெற்றிகரமாக வளரவும் இந்தப் பங்கு தாரர்களின் தொழில் முனைப்பும், உறவும் நட்பும் காரணமாக அமைந்தன.
இரண்டு பங்குதாரர்களுக்கும் திருமணம் நடைபெற்றுக் குடும்பங்கள் அமைந்தன. நிறுவனம் நன்றாக இயங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்தன. மனைவிமார் களின் கௌரவப் பிரச்னை, ‘உன்னால்தான், என்னால்தான்’ என்று தேவையற்ற வாதங்கள். ‘யார் பெரியவன்’ என்று அலுவலகத்தில் ‘குழு’ சேர்ப்பது என ஆரம்பித்து கடைசியில் வேறுவழியே இல்லாமல் பிரிய வேண்டிய சூழ்நிலை. பிரிந்தே விட்டனர்.
தனித்தனியாக இருவரையும் சந்தித்துப் பேசியபோது, தங்களது ஆரம்பகால நட்பையும், உழைப்பின் மகத்துவத்தைப் பற்றியும் உயர்வாகப் பேசியவர்கள், தற்சமயம் நண்பன் பேராசை பிடித்தவனாகவும், சுயநலமானவனாகவும் மாறி விட்டான் என்று ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு, தான் அந்த நிறுவன வளர்ச்சிக் காக செய்த தியாகங்களையும், பட்ட துன்பங் களையும் மிகைப்படுத்திக் கூற ஆரம்பித்தனர்.
எந்தத் துன்பங்கள் நட்பாக இருந்தபோது எந்தக் கஷ்டத்தையும் ஆழமாகக் கொடுக்க வில்லையோ, அது, நட்பு முறிந்தபோது பெரிய தியாகங்களாக உருவெடுத்து விட்டன. இது நாள் தோறும், உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏதாவது ஒருவிதத்தில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. உறவுகளும், நட்புகளும்கூட ஒரு வகையான சுயநல அடிப்படையில்தான் தொடர் கின்றன. சுயநல அடிப்படை என்பது இல்லா விட்டால் அது பற்றற்ற பின்னர் பயனற்ற நிலையாக மாறிவிடும். சாதாரண வாழ்க்கையில் ஒரு சிலர் அப்படிப்பட்ட தியாகிகளாக மாறிவிடலாம். ஆனால் தொழில் சார்ந்த அமைப்புகளில் சுயநலம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவும், தியாகங்கள் குறிப்பிட்ட அளவும் இருந்தால்தான் தொழிலுக்கும் அதை நம்பி இருப்பவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கின்ற ஓர் அதிகாரியின் நண்பர். அந்த நிறுவனத்திற்கு மூலப் பொருட்களோ அல்லது இயந்திரங்கள், உதிரி பாகங்கள் விற்பவராக உருவெடுக்கலாம். தவறில்லை. நல்ல நண்பர்களாக இவர்கள் இருந்தாலும், விற்பனை செய்கின்ற நபர் வியாபாரத் தொடர்பு, விற்பனை என்ற சுயநலத்தின் அடிப் படையோடு சேர்ந்துதான் நட்பைத் தொடர்ந்து வருகின்றார்.
ஏதாவது ஒரு சமயத்தில், நண்பரை விடவும் வேறொருவரிடம் குறைந்த விலைக்கோ அல்லது அதே விலையில் தரம் உயர்ந்த பொருளையோ கொடுக்க ஆரம்பித்தால், போகப் போக இவர்களுக்குள்ள நட்பில் இடைவெளி உருவாக ஆரம்பிக்கும். விதி விலக்குகள் ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் நட்பு வெறும் புன்சிரிப்போடு குசலம் விசாரிப்பதில் முடியலாம். இது தவிர்க்க இயலாதது. இதில் தவறும் கிடையாது. சார்ந்து வாழும் அடிப்படையுள்ள ஒரு சமுதாயத்தில் ஒவ்வொருவரும் ஏதாவது ஓர் எதிர்பார்ப்போடு தான் பழகுகின்றோம். ஓர் எல்லையைத் தாண்டாதவரை இடையூறு ஏதும் இல்லை.
முழுக்க முழுக்க சுயநலமே அடிப்படை என்று இல்லா விட்டாலும் ஒருவரது பொருளாதாரம் அல்லது அது சார்ந்த செயல் களில் தொய்வு ஏற்படும்போது, உறவோ – நட்போ அது உடன்பிறந்த சகோதரனாக இருந்தாலும் விட்டுப்போவது தவிர்க்கவே முடியாது. மீண்டும் அவர்கள் இணைவதற்கு வாய்ப்பே இல்லாமல் போனாலும், அவரவர் பாதையில், அவரவர் பயணம் தொடரும் என்ற கசப்பான உண்மையை உணர்ந்து செயலாற்றுவதே நல்லது.
தொழில் முனைவோராக இருந்தாலும் சரி, மிகப்பெரிய தொழில் பாரம்பரியத்தில் வந்தவர் களாக இருந்தாலும் சரி உறவையும் நட்பையும் தொழிலகத்தில் பணிக்கு அமர்த்தாமல் இருக்கவே முடியாது. நிறுவனத்தின் அளவைப் பொறுத்து, கொள்முதல், வியாபாரத்தைப் பொறுத்து உயர் பதவி முதல் இடைநிலை ஊழியர் வரை உறவினர், நண்பர் அல்லது அவர்களது சிபாரிசில் என்று பணிக்கு அமர்த்தித்தான் ஆக வேண்டும்.
“அய்யோ! நான் எந்த உறவினருக்கும் என் நிறுவனத்தில் வேலை கொடுப்பதில்லை. வீட்டோடு மட்டுமே உறவு. கொடுத்தால் நாளைக்கு உறவும் கெட்டு, வீணான பழிச்சொல்லுக்கும் ஆளாக வேண்டியிருக்கும்” என்று சொல்பவர்கள் உண்டு. நிச்சயம் அவர்களுடைய அனுபவம் பேசுகின்றது.
“உறவுக்காரர்களுக்கு வேலை கொடுப்பது தவிர்க்க முடியாது. ஆனால் அத்தோடு சரி. பின்னர் அவர்கள் மற்றவர்களைப் போலத்தான். வேலை செய் பவர்கள் யாராயினும் வீட்டுக்குள் உறவு கொண்டாடி வரக்கூடாது.” இப்படித் தெளிவாகச் சிலர்.
“நமது உறவு, நட்புக்கு வேலை கொடுத்தால், நமது பெயரைப் பயன்படுத்தி மற்றவர்களை மிரட்டுவதோடு, வேறு பல வகைகளிலும் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுத்தி விடுவார்கள். எனவே எதற்கு வம்பு? வேறு ஏதாவது வகையில் உதவி செய்வேனே தவிர, வேலையெல்லாம் கொடுக்க மாட்டேன்” இது ஒரு சிறப்பான அணுகுமுறை.
ஆயினும் பாரத சமுதாய அமைப்பில் அதுவும் குடும்பம் சார்ந்த அமைப்புகளில் ஏதாவது ஒரு வகையில் உறவுக்கும், நட்புக்கும் மரியாதை கொடுத்துத்தான் ஆக வேண்டும். அதுவும் மனைவி வழி உறவுகளை கௌரவத்துக்காகவாவது உதவி செய்து தக்க வைத்துக்கொள்வது என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு வழக்கம். மைத்துனர்கள் தன் சகோதரிக்காக உயிரையே கொடுப்பார்கள் என்பது பாசமலர் உண்மையாக இருந்தபோதிலும், வெற்றி கரமான பங்களிப்புகள் காலப்போக்கில் கசந்து போய்ப் பிரிந்த கதைகள் மிக அதிகம். ஒரே காரணம் சுயநலம்.
ஒன்று, “நாம்தானே தொழில் முனை வோர்கள், கொடுப்பது போதும் என்ற நமது மனம். நாம் எவ்வளவு பாடுபடுகிறோமே, இன்னும் கொஞ்சம் கொடுத்தால் என்ன என்கின்ற அவர்களது மனம்.” இது முடிவே இல்லா எதிர்பார்ப்பிலும் ஏமாற்றத்திலும் தினம்தினம் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றது.
இதில் வெற்றி பெற்று நிம்மதியாகத் தொழில் செய்யும் சாத்தியமே இல்லையா? என்று கேட்கலாம். உண்டு. மார்க்கமுண்டு.
பங்குதாரர்களாக உறவையோ, நட்பையோ தேர்ந்தெடுக்க வேண்டு மென்றால் கல்வித் தகுதி, தேவை – இவற்றைக் கணித்து, பணிக்கு அமர்த்தும்போதே – அவரிடம் நாம் எதிர்பார்ப்பது என்ன, சம்பளம் மற்றும் வசதிகள் எப்படித் தரப் படும், ஊதிய உயர்வுகள் எப்படி என்பதையும் எல்லாம் தெளிவுபடுத்தி விடுவது சிறந்த அணுகு முறை.
உறவின் பலத்தை நிறுவனத்தின் வளர்ச்சிக் காக மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர சுயநலம் சார்ந்து செய்தால் அன்றே பணி, உறவு இரண்டும் துண்டிக்கப்படும் என்ற கடுமையான எச்சரிக்கையும், அதை நிறைவேற்றக்கூடிய மன உறுதியும் தேவை.
அப்படி வெளியே அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தயங்காமல் வெளியே அனுப்பிவிட வேண்டும்.
இதனால் சில கசப்புகளும் சில இடங்களில் தருமசங்கடமான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் தாங்கிக்கொள்ளும் தெளிவு இருக்க வேண்டும்.
ஒரு நடுத்தர நிறுவனத்தின் தொழிலதிபர் வீட்டிற்கு, தொழில் தொடர்புடைய நண்பர் ஒருவர் வந்தார். மதிய உணவு வேளை. தொழில் அதிபரோடு அவரது தம்பியும் இன்னும் இருவரும் உணவு உண்டுகொண்டிருந்தனர். வந்திருந்த நண்பருக்கு தொழிலதிபர், தன் தம்பியையும், மற்ற இருவரையும் தன் தாய்மாமனின் புதல்வர்கள் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
வந்திருந்த நண்பருக்கு இருவரில் ஒருவரை எங்கே பார்த்தமாதிரி இருக்கிறதே என்று வினவினார். அதற்கு அந்தத் தொழிலதிபர் பதில் சொன்னார், “இவர், நமது ஆலையில் வாட்ச் மேனாகப் பணியாற்றுகிறார்.” அதே நேரத்தில் மற்றவரைக் காட்டி, “இவர் அவருடைய தம்பி. நமது நிறுவனத்தில் ஸ்டோர்ஸ் மேனேஜராக இருக்கின்றார்” என்று கூறினார். வந்திருந்த நண்பருக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. கொஞ்சம் வியப்பு. தொழிலதிபர் இதை உணர்ந்து கொண்டே சொன்னார்.
“நண்பரே! நான் முதல் தலைமுறைத் தொழிலதிபர். சாதாரணப் பின்னணியில் இருந்து இந்த நிலையை அடைந்திருக்கின்றேன். தொழில் அமைந்தபோதும் சரி, அதற்கு முன்னரும் உறவினரும், நண்பர்களும் பல வகையில் நான் வாழ உதவியிருக்கின்றார்கள். இன்று நல்ல நிலையில் இருக்கும்போது இயன்ற அளவுக்கு அவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா? அதில் ஒன்று அவரவர் தகுதிக்கு தகுந்த பணி. எனவே இயன்ற வரை அப்படிச் செய்து வருகின்றேன். இதில் நான் அவர்களுக்கு வேலை வாய்ப்பளித்தேன் என்பதைக் காட்டிலும் எனது நிறுவனத்தில் பணிபுரிவது அவர்களது கௌரவத்துக்கு குறைவு என்று எண்ணாமல் வந்து வேலை செய்கிறார்களே! அதல்லவா பெரிய விஷயம்” என்றார்.
தொடர்ந்து, “நிறுவனத்தில் இருக்கும்போது தான் நான் எம்.டி., இவர் மேனேஜர், இவர் வாட்ச்மேன். வீட்டிற்கு வந்துவிட்டால் நான் இவர்களுக்கு அத்தை மகன் தான்.”
நண்பரிடம் இன்னும் விரிவாகச் சொன்னவர், “இப்படிப் பல நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.
ஆனால் இப்படிப்பட்ட செயல்கள் விரிவாக வெளியே செய்திகளாக சொல்லப்படுவதில்லை. அதே சமயம், இப்படி நான் வேலை கொடுத்த சில உறவினர்கள் பல காரணங்களால் வேலையை விட்டுவிட்டுச் சென்றதோடு எனது நிர்வாகத்தை கேவலமாகக்கூட விமர்சித்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை, நல்லதை மட்டுமே நினைத்து செய்வதைச் செய்வோம். மற்றபடி நடப்பது அதனதன் போக்குப் படியே” என்றார்.
வெற்றி வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்னால் உள்ள இருளைத்தாண்ட உறவும் நட்பும் துணைகளாவதும் உண்டு. துயரமாவதும் உண்டு. ஆனால் தெளிவும், உறுதியும் இருந்தால் சரியாக அவற்றைப் பயன்படுத்திப் பயணத்தைத் தொடரலாம்.
கட்டுரையில் குறிப்பிட்ட அந்தத் தொழிலதிபரின் நிறுவனம், நான் நிர்வாக இயக்குநராகப் பணிபுரியும் எங்கள் நிறுவனந்தான்.
Leave a Reply