கல்யாணப் பரிசு

– கிருஷ்ணன் நம்பி

திருமண அழைப்பிதழை பார்த்ததும் தம்பதிகளுக்கு என்ன பரிசு தரலாம் என்று யோசிப்பதுதான் வழக்கம். ஆனால் ஒருவர் தன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு, ‘என்ன பரிசு தரலாம்?’ என்று யோசித்தார்.

திருமண ஏற்பாடுகளும் அதைப் பற்றிய இனிய நினைவுகளுமே வருபவர்களுக்கு பரிசாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து திருமண ஏற்பாட்டில் நிறைய புதுமைகள் செய்திருந்தார்.

மிக நெருக்கமானவர்கள் தவிர பொதுவாக திருமணத்திற்கு வரும் அனைவரும் ஏதோ ஒரு அவசரத்தில்தான் வருகை தருகிறார்கள். அப்படி வருபவர்கள் விரைவாக சாப்பிட்டு விட்டு விரைவாக பரிசுகளை தந்துவிட்டு சென்று விடுவார்கள். ‘அப்பாடா அட்டெண்ட் பண்ணி யாச்சு’ என்று கிளம்புகிற எண்ணத்திற்கு பதில் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு போகலாம் என்று எண்ண வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில ஏற்பாடுகள் செய்திருந்தார்.

திருமணத்திற்கு வருபவர்கள் உள்ளே வரும் போதே உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் வர வேண்டும் என்பதற்காக, ‘செக் யுவர் லக்’ என்ற பெயரில் மண்டப நுழைவாயிலில் ஒரு அதிர்ஷ்டப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆங்கில எழுத்துக்கள் ஒரு டப்பாவில் வைக்கப்பட்டிருக்கும். திருமணத்திற்கு வருபவர்கள் அவர்கள் பெயரில் உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஓர் எழுத்தினை எடுத்தால் ஒரு பரிசு, முதல் எழுத்தினை சரியாக எடுத்தால் இரண்டு பரிசு.

எப்படியும் குடும்பத்தில் ஒருவருக்கு பரிசு கிடைத்துவிடும் என்பதால் எல்லோரும் குதுகலத்தோடு திருமண மண்டபத்திற்குள் வந்தார்கள்.

மண்டபத்திற்குள் அவர்கள் பெயர் சொல்லி மைக்கில் வரவேற்பு அறிவிக்கப்படும். எல்லோரும் ஆச்சரியத்தோடு மகிழ்ச்சியடைவார்கள்.

திருமண நாளன்று தம்பதிகளை வாழ்த்தவோ அல்லது அதிக நேரம் பேசவோ நேரமிருக்காது அப்படியே கிடைத்தாலும் போட்டோக்காரரும், வீடியோகிராபரும், சார் இங்க கவனிங்க என்று நம்மை கேமரா பக்கம் திருப்பி விடுவார்கள். பேச முடியாது என்பதால் திருமண அரங்கம் முழுவதும் சார்ட் ஒட்டி, ‘உங்களின் வருகையை வாழ்த்துக்களால் பதிவு செய்யுங்கள்’ என்ற பேனர் தொங்க விடப் பட்டிருந்தது.

திருமணத்திற்கு பலரையும் அழைப்பது அவசரம் அவசரமாக பரிசுகளை தந்துவிட்டு அவசர அவசரமாக செல்வதற்காக அல்ல. பரிசுகள் வெற்றிடத்தினை வேண்டுமானால் நிரப்பலாம். வாழ்த்துக்களே மனதினை நிரப்பும்.

இந்த ஏற்பாட்டால் எல்லோரும் தங்களின் வருகையும் வாழ்த்தையும் நிதானமாக பதிவு செய்தார்கள். (பிறகு தம்பதிகளாக அதைப் படிப்பதே சுவாரஸ்யமாக இருக்கும்.)

விழாவில் புதுமை ஏற்பாடுகளில் தேர்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்குச்சாவடி போல ஏற்படுத்தப்பட்டிருந்த இடத்தில் வரிசையில் நின்று எல்லோரும் வாக்களித்தார்கள். அதற்கு ஒப்புதல் சீட்டு வழங்கப்பட்டது.

உங்கள் மனங்கவர்ந்தது- …

வித்தியாசமான வரவேற்பு

அன்போடு பரிமாறப்பட்ட அறுசுவை உணவு

புத்துணர்ச்சி தந்த புதுமை ஏற்பாடுகள்

(வாக்களிப்பதற்கு பெறப்பட்ட முகவரிகளின் மூலம் அனைவருக்கும் நன்றிக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.)

தாம்பூலப் பையில் அனைவருக்கும், ‘ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி’ என்கிற கணவன் மனைவி உறவு பற்றிய புரிதலை ஏற்படுத்தும் புத்தகமும் பரிசளிக்கப்பட்டது.

இதையெல்லாம் படிக்கும்போது உங்களுக்கு ஆசை வந்தால் உங்கள் திருமணத்திலும் இது போன்று ஏதாவது செய்யுங்கள். நீங்கள் திருமணமானவர் என்றால் உங்கள் திருமண நாளை இப்படி கொண்டாடுங்கள். அதனால் மணநாளில் மகிழ்ச்சி மீண்டும் ஏற்படும்.

மகிழ்வான நாட்களை நினைத்திடும்போது திருமணநாள் முதலிடம் பெறவேண்டும் இல்லையா?

பரிசுகளால் அல்ல; வாழ்த்துக்களால் நிரம்பட்டும் உங்கள் இல்லம். வாழ்த்துக்களே திருமணத்திற்கான உண்மையான பரிசு.

(அது சரி. இவ்வளவு ஏற்பாடுகளையும் எப்படி நுணுக்கமாக கவனித்தேன் என்கிறீர்களா? அது ஒன்றும் இல்லை. அது என் மனைவியின் திருமணம்தான். )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *