நினைத்ததை முடிக்கலாம்

மலை ஏறும் வீர விளையாட்டில் முனைப் புடன் ஈடுபட்டவர் அவர். மலையேற்றத்தில் ஒருமுறை, ஒரு டன் எடை கொண்ட பாறை அவருடைய பாதத்தை பதம் பார்த்தது. தொடை வரைக்கும் கால்களைத் துண்டித்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை. கண் விழித்துப் பார்த்தபோது கால்களைக் காணோம்.

அந்த மலையேற்ற வீரரின் மகத்துவம் அறிந்த மருத்துவர், தோள்களைத் தட்டி தயக்கமாய்ச் சொன்னார். ‘ வாரன்! இனிமேல் உங்களால் நடக்க முடியாது.’

அவரால் நடக்கமுடியாது என்பதுதான் மருத்துவருக்குத் தெரியும். ஆனால் அந்த மனிதருக்கு செயற்கைக் கால்களுடன் சைக்கிள் ஓட்ட முடிந்தது. மீண்டும் மலையேற முடிந்தது. ஆப்பிரிக்காவின் அதியுயர சிகரமாகிய கிளிமாஞ்சரோ மலைமீது ஏற முடிந்தது. அமெரிக்காவின் உயரமான மலைமுகடாகிய எல் கேப்டன் மீது ஏறமுடிந்தது. கனடாவின் பிரம்மாண்டமான சுவராகிய வீப்பிங்வால் மீது ஏற முடிந்தது.

மலையினும் பெரிய மனஉறுதி காரணமாய், கால்களை இழந்தபின்னும் கனவுகளை எட்டியவர் வாரன் மேக்டொனால்ட்!!

நெருப்பின் தீவிரம் நெஞ்சில் இருந்தால்
நினைப்பதை எல்லாம் நிகழ்த்திக் காட்டலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *