– கிருஷ்ண. வரதராஜன்
ஓர்
எச்சரிக்கை
ரிப்போர்ட்
பஞ்சாயத்துத் தலைவர் வேலை எனக்கு ஒன்றும் புதிது இல்லை. ஆனால் இந்த முறை நான் சற்று சங்கடமாகத்தான் உணர்ந்தேன். என்னைச் சுற்றி எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். அதனாலேயே எனக்கு நடுக்கமாக இருந்தது.
பஞ்சாயத்து இதுதான். செல்போனை வாங்கித்தரவில்லை என்ற கோபத்தில் அப்பாவின் செல்போனை எடுத்து, தூக்கி வீசி விட்டான். அது இரண்டாக தெறித்து விட்டது. இவனை என்ன செய்வது? – இது வாதியின் தரப்பு.
நான் கேட்டு இரண்டு மாதமாகிவிட்டது. ஆனால் இவர்கள் இருவரும் ஆளுக்கொரு புது செல் வாங்கிக்கொண்டு எனக்கு மட்டும் சாக்கு போக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் – இது பிரதிவாதியின் தரப்பு.
தனியாக அந்தக் குழந்தை சொன்னது, செல் வாங்கும்போது கடைக்காரர் கீழே விழுந்தாலும் உடையாது என்று சொன்ன தைரியத்தில்தான் தூக்கிப் போட்டேன்.
நான் கனைத்தபடி தீர்ப்பு சொல்ல முற்படுகையில் கணவன் மனைவி இருவருக்கும் போன் வர எக்ஸ்க்யூஸ்மீ என்றபடி அவரவர் போனோடு ஆளுக்கொரு திசையில் மறைந்து விட்டார்கள்.
நான் செல்போன் பற்றி யோசிக்கத் துவங்கினேன்.
மற்றவர்களிடம் பேசுவதற்காக கண்டறியப் பட்ட செல்போனில் ஏராளமான வசதிகள் இணைக்கப்பட்டு கொண்டே வருகிறது. பாட்டு கேட்கலாம். போட்டோ, வீடியோ எடுக்கலாம். குரலை பதிவு செய்து வைக்கலாம். இணையம் பார்க்கலாம். வசதிகள் சேர சேர தொல்லைகள் தான் அதிகமாகிறது.
செல்போன் என்பது மற்றவர்களை எளிதாக தொடர்பு கொள்வதற்கான சாதனம். ஆனால் அதனால்தான் இன்று மனிதர்களுக்கு இடையே தொடர்புகளே குறைந்து வருகிறது. முக்கியமாக குடும்பத்திற்குள்.
மனிதர்கள் யாரும் இப்போது மனிதர்க ளோடு பேசுவதில்லை. செல்போன்களோடு மட்டும்தான் பேசுகிறார்கள்.
சில நண்பர்களை நேரில் போய்ப் பார்ப்பதைவிட போனில் பேசிவிடுவது நல்லது. நேரில் போனால்கூட அவர்கள் நம்மையும் உட்கார வைத்துக்கொண்டு செல்போனில்தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.
என்னை உட்கார வைத்துக்கொண்டு போனில் இப்படி பிஸியாக இருந்த நண்பருக்கு நான் அங்கிருந்து போன் செய்தேன். என் நம்பரை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி, சார் உங்க போன் நம்பர் வருது என்றார். ஆமா நேர்லதான் பேச முடியல அதான் போன்ல பேசலாம்னு போன் செய்தேன் என்றேன்
முகத்திலிருந்து அதிர்ச்சி மூளைக்கு பரவுவதை என்னால் உணர முடிந்தது. அதாகப் பட்டது, அவர் சிந்திக்கத் துவங்கிவிட்டார்.
செல்போன் வைத்திருப்பது பேஷன் என்ற நிலை தாண்டி இரண்டு செல்போன் வைத்திருப்பது இன்றைய ஸ்டைல் என்றாகி விட்டது. மூன்று போன்கள் வைத்திருப்பவர் களையும் நான் சந்தித்திருக்கிறேன்.
அடுத்து என்ன மாடல் வந்திருக்கிறது என்று தெரிந்துகொள்வதிலும் அதை உடனடியாக வாங்க வேண்டும் என்பதிலும் உள்ள மனவேகம் இன்று எல்லோரிடமும் அதிகரித்துவருகிறது.
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம், உங்கள் நண்பர்களோடு பேசுங்கள். பேசுங்கள். பேசிக்கொண்டே இருங்கள் என்று அறிவித்து ஒரு அடிமையை வைத்து மற்றவர்களையும் செல்போன் அடிமையாக்கிவிடுகிறார்கள் கம்பெனிக்காரர்கள்.
சாலையில் சிலர் தனியாக பேசிக்கொண்டு போகிறார்கள். விசாரித்தபின்தான் தெரிகிறது காதில் ப்ளூ டூத் வைத்திருக்கிறார்கள் என்பது.
வீட்டில் ஹாலில்தான் எப்போதும் போன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் இப்போது இவர்கள் குளியலறையையும், கழிப்பறையையும்கூட விட்டு வைப்பதில்லை. அங்கேயும் போய் போன்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குளித்து விட்டு வந்தால் எந்த லட்சணத்தில் இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..
இதெல்லாம் பரவாயில்லை பலரும் இப்போது ரயில்வே டிராக்கையும், சாலைகளையும் கடக்கும் போதும் ஏன் வாகனம் ஒட்டும்போதும் கூட செல்போன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உயிர் போகிறஅவசரமாக இருக்கும்?
செல்போன் பேசிக்கொண்டே சாலையை கடப்பதால் அதிகரிக்கும் விபத்துக்கள் பற்றிய செய்திகளை படித்தவர்களும் கூட நாம் கவனமாக இருப்போம் என்ற குருட்டு தைரியத்தில் சாலையைக் கடந்து அடிபட்டு சாகிறார்கள்.
கார் ஒட்டும்போது போன் வந்தால் பேசாதீர்கள், அழைப்பது எமனாக கூட இருக்கலாம் என்று எழுதி வைத்திருப்பது இவர்கள் கண்ணில் படுவதேயில்லை, எப்போதும் போன் பேசிக்கொண்டிருப்பதால்.
ஏன் செல்போன் பேசுவது இவ்வளவு அதிகமாகி விட்டது? மனிதர்கள் உடனுக்குடன் பேசிக்கொள்ள வேண்டிய அவசரங்கள் அதிகமாகிவிட்டதா? நேருக்கு நேர் பேசும்போது ஏற்படும் சங்கடங்கள் தவிர்க்கப்படுகிறதா? முகம் பார்க்காமல் பேசுகிற சௌகரியமா? நேரில் பார்ப்பதற்குள் சொல்ல வேண்டிய அவசரங்கள் உறவுகளுக்குள் அதிகரித்துவிட்டதா ?
விடுமுறையில் சுற்றுலா சென்றால்கூட அங்கே குழந்தைகளோடு பேசாமல் செல் போனோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
வேலை பார்க்கிற இடங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டு அந்த நேரத்தில் போன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நிறுவனங்கள் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன.
பொது இடங்களில் அதிக சத்தமாக பேசுவது தன்னிடம் சொல்வதை ஸ்பீக்கர் போட்டு மற்றவர்களையும் கேட்கச்செய்து நம்பிக்கை மோசடி செய்வது என்று செல்போன் மனிதர்களிடம் இருக்க வேண்டிய அடிப்படை நாகரிகத்தை குறைத்துவிட்டது.
அமைதியாக இருக்க வேண்டிய இடங்கள் அதாவது ஹாஸ்பிடல் பிரார்த்தனை கூடங்களில் கூட செல்போன் மணி விடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது.
செல்போன் குற்றங்கள் என்று வகைப் படுத்துகிற அளவிற்கு செல்போனால் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
எப்போதும் செல்போனை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? சும்மா இருக்கும்போது எதுவும் செய்தி வந்திருக்கிறதா என்று அடிக்கடி பார்க்கிறீர்களா? யாருக்கு இப்போது பேசலாம் என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் செல்போன் பைத்தியமாகிவிட்டீர்கள் என்று அர்த்தம். ச்சே ச்சே அந்த அளவுக்கு போகவில்லை என்கிறீர்களா அப்படியெனில் வெகு சீக்கிரத்தில் நீங்கள் அப்படி ஆகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
பெரியவர்களை விட குழந்தைகளைத்தான் செல்போன் அதிகம் பாதிக்கிறது. அதுதான் என் கவலையே.
மற்ற சாதனங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி கடந்த பத்தாண்டுகளில் வேகமாக மாணவர்களிடம் பரவிவிட்டது இந்த செல்போன் மேனியா.
பள்ளிகளில் கல்லூரிகளில் வகுப்பில் பாடங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே அடுத்த வரிசை பையனுக்கோ பெண்ணிற்கோ எஸ்.எம்.எஸ். அனுப்பி ஆசிரியரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
டைப்ரைட்டிங்கில் ஹையர் முடித்தவர்கள் கூட இரண்டு கைகளையும் பயன்படுத்தி இவ்வளவு வேகமாக டைப் செய்ய முடியாது. ஆனால் நம் மாணவர்கள் ஒரே விரலில் மின்னல் வேகத்தில் டைப் செய்து மெசேஜ் அனுப்புகிறார்கள்.
டைப்ரைட்டிங் கிளாஸ் போன புதிதில் பலரும் தங்களை அறியாமல் விரல்களால் டைப் செய்வதை போல் பாவனை செய்து கொண்டே இருப்பார்கள். அது போல இன்று செல்போன் பயன்படுத்தி பயன்படுத்தி அவர்கள் தங்கள் விரல்களால் காற்றில் பட்டன்களை அழுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பகல் முழுவதும் பள்ளி டியூஷன் என்றிருக்கும் குழந்தைகள் இரவு 9.30க்கு மேல் செல்போனை எடுத்தால் 1 மணி வரை கூட கீழே வைப்பதில்லை. தூக்கம் கெடுவது மட்டுமல்ல. காது சூடாகி செவித்திறன் பாதிக்கப்படும் என்பது மட்டுமல்ல, மனநிலை கூட பாதிக்கப்படலாம்.
படுக்கையில்கூட பலருக்கு செல்போன்தான் தலையணை.
தூங்கும்போதுகூட செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்பதாக பல குழந்தைகள் என்னிடம் தெரிவிக்கிறார்கள். பலருக்கு பகலிலேயே செல்போன் ஒலிக்காமலேயே ஒலிப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. இதற்கு “ல்ட்ஹய்ற்ர்ம் ழ்ண்ய்ஞ்ண்ய்ஞ்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
குழந்தைகள் வீட்டிற்கு தெரியாமல் ஒரு சிம் கார்டு வைத்திருக்கிறார்கள் என்கிறது ஒரு பகீர் தகவல். தன்னுடைய பாய் அல்லது கேர்ள் ப்ரெண்டுக்கு மட்டுமே அந்த எண்ணை தருவார்கள்.
பெண்களுக்கு புதிய நம்பரில் இருந்து போன் வரும் அல்லது எஸ்.எம்.எஸ். வரும். யார் என விசாரித்து போன் செய்தால் அவர்கள் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறார்கள் என்று அர்த்தம்.
உங்கள் குழந்தைகளின் செல்போனை வாங்கி அவர்கள் அதில் எவ்வளவு நேரம் பேசியிருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் வாழ்நாளில் உங்களிடம் பேசியதை விட அதிகமாக செல்லில் பேசியிருப்பதைப் பார்த்து உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படக்கூடும்.
இதற்கே அதிர்ச்சி அடையாதீர்கள். இன்னும் இருக்கிறது.
நாள் முழுவதும் மூளையை மழுங்கடிக்கும் விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தவறான படங்கள் வாங்கி செல்போனில் சேமித்து வைத்துக் கொள்கிறார்கள். சொல்லிக்கொண்டே போகலாம். நீங்கள் தாங்க மாட்டீர்கள்.
தன் பெண்ணின் செல்லில் சக வகுப்பு மாணவனோடு கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிற காட்சியைப் படமாக பாதுகாத்து வைத்திருப்பதை பார்த்து விட்டு என்னிடம் கதறிக்கதறி அழுத அவள் தந்தையின் முகம் இன்னும் என் நினைவில் இருக்கிறது.
வினை விதைத்துவிட்டோம். இனி வேறு வழியில்லை . அதை அறுவடை செய்வோம்.
செல்போனால் உறவுகளை இழந்து விட்டோம். ஏன் சில உயிர்களைக் கூட இழந்து விட்டோம். சுருக்க எஸ்.எம்.எஸ் அனுப்பி வார்த்தைகளை இழந்துவிட்டோம். சொற்களின் அர்த்தங்களை இழந்து விட்டோம். வாழ்க்கையில் அர்த்தமே தொலைந்துவிட்ட பிறகு சொற்களின் அர்த்தம் பற்றியா கவலைப்பட முடியும் ?
செல்போன் எதனாலாவது பழுதடைந்து விட்டால் மாணவர்கள் பலர் தவியாய் தவிக்கிறார்கள். இது போதைப்பழக்கம் போல செல்போனுக்கும் அடிமையாகி விட்டார்கள் என்பதையே காட்டுகிறது .
2003 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜெர்ஸ் யூனிவர்சிட்டியில் ஓர் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. செல்போனுக்கு எந்த அளவிற்கு மாணவர்கள் அடிமையாகி யிருக்கிறார்கள் என்பதுதான் ஆய்வு.
220 மாணவர்கள் சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 72 மணி நேரத்திற்கு அவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட வேண்டும். அவர்களால் செல்லை ஆன் செய்யாமல் இருக்க முடிகிறதா என்பதுதான் சோதனை. ஆனால் மூன்று நாட்கள் கழித்து, 72 மணி நேரம் பொறுமையோடு இருந்தவர்கள் வெறும் மூன்றே பேர்தான்.
ஒரு நாளுக்குள் செல்போனை ஆன் செய்தவர்களிடம் காரணம் கேட்டார்கள். அவர்கள் சொன்னது, எங்களுக்கு பதட்டமாக இருந்தது. பாதுகாப்பு இல்லாதது போல உணர்ந்தோம். யாருமே இல்லாத ஓர் உணர்வு ஏற்பட்டது.
தனிமை உணர்வில் இருப்பவர்கள், மனதளவில் ஏற்கனவே ஏராளமான குழப்பங்களோடு இருப்பவர்கள்தான் செல் போனுக்கு சீக்கிரமே அடிமையாகி விடுகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.
அதிக செல்போன் பயன்பாட்டால் மனநல பாதிப்புகளும் அதிகரிக்கும் என எல்லா ஆய்வுகளுமே உறுதிப்படுத்துகின்றன.
எனது சந்தேகமெல்லாம் இதுதான். இனி முகம் பார்த்து மனிதர்கள் பேசவே மாட்டார்களோ ?
இப்போதே இப்படி இருக்கிறதே. இனி எதிர்காலம் எப்படி இருக்கும்?
பள்ளிகள் தொடங்கி எல்லா இடங்களிலும் உணவு இடைவேளை போல நாளை செல்போன் இடைவேளை கொடுக்க வேண்டி வரலாம்.
வரும் காலங்களில் ஆடைகள் அணியாத மனிதர்களைகூட பார்க்கலாம். செல்போன் இல்லாத மனிதர்களை பார்க்க முடியாது.
செல்போன்கள் நவீன சிகரெட் என்று சொல்லலாம். ஏனெனில் இனி ஸ்மோக்கிங் ஸோன் போல செல்போன் ஸோன் அமைக்கப் பட்டு பொது இடங்களில் போன் பேசக்கூடாது என்று வரலாம்.
பாக்கெட்டிற்கு பதில் காதுக்குள்ளேயே செல்போனை வைத்துக்கொள்கிற காலம் வரலாம்.
இந்தக் கட்டுரையை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஐந்தாண்டுகள் கழித்து நான் சொன்னது உங்களுக்கு இன்னும் சரியாகப் புரியும்.
போன் பேசிவிட்டு என் முன் அமர்ந்த பெற்றோர்களிடம் நான் சொன்னது இதுதான். செல்போனுக்கு அடிமையாகிவிடாதீர்கள். ஏனெனில் உங்களைப்போலவே உங்கள் குழந்தைகளும் அடிமையாகிவிடுகிறார்கள்.
ஒரு வாரம் செல்போன் இல்லாமல் வாழ்ந்து பாருங்கள். என்னதான் ஆகிவிடுகிறது என்று பார்ப்போம். குறைந்த பட்சம் வாரத்தில் ஒரு நாளாவது வாழ்ந்து பாருங்கள். கூட்டமாக இருக்கிற மால்களில் பாப்புலரான ரிங்டோனை ஒலிக்கச்செய்து வேடிக்கை பாருங்கள். பலரும் அவசர அவசரமாக தங்கள் செல்போனை எடுப்பார்கள். ஒரு சிலர் அப்போதுதான் எங்கேயோ செல்போனை மறந்து வைத்து விட்டோம் என்பதை அறிந்து தேடத் துவங்குவார்கள். திடீரென்று இன்னும் இரண்டு ரிங்டோன் கேட்க, வேடிக்கை பார்க்க நமக்கு சுவாரஸ்யமாக இருக்கும். செல்போன் பைத்தியங்கள் அதிகரித்துவருவதை நினைத்து வேதனையாகவும் இருக்கும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் போனில் பேசுவதற்கும் எஸ்.எம்.எஸ் படிப்பதற்கும் அனுப்புவதற்கும் செலவிடுகிறீர்கள் என குறித்து வையுங்கள்.
வீட்டில் செல்போனுக்கு என்ற ஒதுக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரத்தில் பயன் படுத்தாதீர்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் குழந்தைகளின் செல்போனை வாங்கி அணைத்து வைத்து விடுங்கள்.
தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு நான் சொன்ன தீர்ப்புக்களை மேலே தெளிவாக தந்திருக்கிறேன். இதை கடைப்பிடிக்காதவர்களை செல்போனை விட்டு இரண்டுமாதம் தள்ளி வைக்கிறேன். இவர்களோடு யாரும் செல்போனை பகிர்ந்து கொள்ளக்கூடாது. அப்படி மீறி செய்தால் அவர்களையும் தள்ளிவைக்கிறேன்.
vignesh
உங்களுக்கு ஒரு சல்யூட்
s rajagopalan
therintha pala theriya pala visayangalai intha katturayil purinthukolla mudinthathu manithanuku manathai kattupadu pakkuvam pathavillai en purinthukonden
three years back my pet name is sms srg now past one year back no sending sms to any bady
maximum attend only received calls only
call to any must calls only
now i also feel about the younger generation