– அத்வைத் சதானந்த்
எந்திரன் பட பாடங்கள்
‘ எந்திரன்’ பார்த்துவிட்டீர்களா? நிச்சயம் உங்களைப் பார்க்க வைத்திருப்பார்கள்.
எந்திரன் படம் பார்க்கும்போதுதான் நாமெல்லாம் எவ்வளவுதூரம் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பது பளிச்சென்று புரிகிறது.
நம்மைச்சுற்றி எல்லாமே இயந்திரமயமாகி விட்டது.
ஷு பாலிஷ் போட மெஷின் வந்துவிட்டது. ஷுவோடு காலை நீட்டினால் போதும். அது சுத்தமாக்கிவிடும். எலெக்ட்ரானிக் ப்ரஷ் இருக்கிறது. அதை வாயில் வைத்தால் அதுவே உங்களுக்கு பல் தேய்த்துவிடும். இவ்வளவு ஏன் டாய்லெட்டில்கூட நீங்கள் தண்ணீர் எடுத்து உங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. தண்ணீரே உங்களை சுத்தம் செய்யும்.
இனி ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எடுக்க ஹாஸ்பிடலுக்கெல்லாம் போக வேண்டியதில்லை. நீங்கள் டாய்லெட் போகிற நேரத்திலேயே இத்தனை டெஸ்டும் நடந்து உங்கள் டாய்லெட்டில் இணைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் மூலமாக டாக்டருக்கு ரிப்போர்ட் போய்விடும்.
கார் ஓட்டும்போது இனி ஆக்ஸிலேட்டரை அழுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை. ஹைவேஸில் போகிறீர்கள் என்றால் நீண்ட நேரம் ஆக்ஸிலேட்டரை மிதித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஆக்ஸிலேட்டரின் கன்ட்ரோல் முழுக்க ஸ்டியரிங்கிற்கு வந்துவிட்டது. ஸ்டியரிங்கில் உள்ள ப்ளஸ் பட்டனை அழுத்தினால் வண்டி வேகமெடுக்கும். மைனஸ் பட்டனை அழுத்தினால் வேகம் குறையும்.
நம் உடலுக்கு எல்லா அசைவுகளும் குறைந்து விட்டதால் நிச்சயம் நாமெல்லாம் ரோபோ மாதிரி நடக்க ஆரம்பித்துவிடுவோம்.
இனிமேல் டிராபிக்கான நேரங்களில் நீங்கள் நடந்து போகவேண்டாம். பறந்து போகலாம். எல்லாமே சாத்தியம்தான்.
பிஸியாக இருப்பவர்களை, ‘கால்ல ரெக்கைய கட்டிக்கிட்டு பறக்கிறான்’ என்று சொல்வார்கள். அது நிஜமாகப்போகிறது. இனி மேல் நிஜமாகவே மனிதன் பறவை போல பறக்கப் போகிறான்.
ஹீலியம் நிரப்பப்பட்ட சிலிண்டர்களை முதுகில் மாட்டிக்கொண்டு வேண்டிய இடங்களுக்கு இனி நீங்கள் பறந்தே போகலாம். ஆராய்ச்சி அளவில் இது வெற்றிகரமாக முடிந்து விட்டது. மார்க்கெட்டிற்கு வரவேண்டியதுதான் பாக்கி.
என்ன, விஞ்ஞானம் வளர வளர நாம் இன்னும் எந்திரன்களாக மாறியிருப்போம்.
அடுத்த கட்டமாக அன்பு, நம்பிக்கை ஆகியவற்றிற்கெல்லாம் மாத்திரை வந்துவிடும். எந்த வைட்டமின் குறைகிறதோ, அதற்கு மாத்திரை சாப்பிடுவது போல, எந்த உணர்ச்சி குறைகிறதோ அதற்கு மாத்திரை போட்டுக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும். அல்லது இப்பொழுது ஆக்ஸிஜன் சென்டர்கள் போல எனர்ஜி சென்டர்கள் அதாவது, நம் மனங்களுக்கு நம்பிக்கை ஏற்றும் இடங்கள்கூட வரலாம்.
எந்திரன் பாடங்கள்
எந்திரன் பார்க்கப் பார்க்க எனக்குத் தோன்றியது. ரஜினி அதில் எப்படி ரோபோ தயாரிக்கிறாரோ, அப்படித்தான் நாம் இன்று குழந்தைகளைத் தயாரிக்கிறோம்.
உண்மைதான். இன்று நாம் பொருட்களை வளர்க்கிறோம். குழந்தைகளைத் தயாரிக்கிறோம்.
முதன் முதலில் வந்த செல்போனையும் இன்று உள்ள லேட்டஸ்ட் செல்போனையும் ஒப்பிட்டுப் பாருங்கள். எந்த அளவிற்கு நாம் செல் போனை வளர்த்தெடுத்திருக்கிறோம் என்பது உங்களுக்கே புரியும்.
சக மனிதர்களையே வேட்டையாடிய ஆதி காலத்து மனிதனையும் இன்றைய மனிதனையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பெரிதாக எந்த ஒரு வேறுபாடும் இல்லை.
நாளை அந்த ரோபோ என்ன செய்யும் என்பது தெரியாமல் அதைத்தயாரித்த ரஜினி மாதிரிதான் நம்மில் பலர் குழந்தைகளையும் தயாரிக்கிறோம்.
இயந்திரங்கள் ஆட்சி செய்யப்போகும் அடுத்த தலைமுறை காலத்திலாவது நம் வாழ்க்கை கொண்டாட்டமாக அமையவேண்டுமென்றால் உடனடியாக நாமெல்லாம் செய்ய வேண்டியது ஒன்றிருக்கிறது.
வசீகரன் தயாரித்த ரோபோவிற்குள் இருப்பது போல் உங்களுக்குள் இருப்பது ரெட் சிப்பா? க்ரீன் சிப்பா என உங்களுக்குள் இருக்கும் விஞ்ஞானியை விட்டு ஓர் ஆய்வு செய்யுங்கள்.
இரண்டுமே இருக்கிறது என்றால், ரெட் சிப்பில் உள்ளவற்றை எல்லாம் டெலிட் செய்ய வழி கண்டுபிடியுங்கள்.
இனி இயந்திரங்களுக்குக்கூட உணர்ச்சி கொடுக்கும் காலம். அதில் கோபம், வெறுப்பு, பொறாமை ஆகிய எதிர்மறை உணர்ச்சிகள் இயந்திரங்களிடம் மட்டுமல்ல. மனிதர்களிடமும் இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.
Leave a Reply