– அத்வைத் சதானந்த்
கிருஷ்ணதேவராயர் அரண்மனை மாடத்தில் நின்றுகொண்டிருந்தார். அவருடன் இருந்த தேரோட்டி தயங்கித்தயங்கி கேட்டான், “தெனாலிராமனும் மற்ற மந்திரிகள் போலத் தானே அவருக்கு மட்டும் ஏன் அதிக முக்கியத் துவம் கொடுக்கிறீர்கள்?”
ராமன்மேல் பலரும் பொறாமை கொண்டிருந்தனர். அவர்களில் தேரோட்டியும் ஒருவன் என்பது தெரிந்ததால் கிருஷ்ணதேவராயர் எதுவும் பேசாமல் தனக்குள் சிரித்துக்கொண்டார். தூரத்தில் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டியை காண்பித்து, “அதில் என்ன கொண்டு செல்கிறார்கள் என்பதை விசாரித்து வா” என்று கட்டளையிட்டார்.
தேரோட்டி, அரண்மனை முதல் தளத்திலிருந்து இறங்கி, தெருவில் சென்று கொண்டிருந்த மாட்டுவண்டியை நிறுத்தி, என்ன கொண்டு செல்கிறீர்கள் என விசாரித்து தெரிந்து கொண்டு அரசரிடம் வந்தான். “அரசே! அவர்கள் நெல்மூட்டைகளை எடுத்துச்செல்கிறார்கள்” என்றார், மூச்சிரைக்க ஓடிவந்து.
“எத்தனை மூட்டைகள்?” என்றார் கிருஷ்ண தேவராயர். “இதோ! விசாரித்து வருகிறேன்” என்று ஓடினான் தேரோட்டி. விசாரித்துவிட்டு வந்து 100 மூட்டைகள் என்று பதில் சொன்னான். உடனே அரசர் கேட்டார்,“எங்கே கொண்டு செல்கிறார்கள்?” மறுபடியும் ஓடோடிப் போய் விசாரித்து வந்து சொன்னான்.
கிருஷ்ணதேவராயர் அடுத்த கேள்வியை தேரோட்டியிடம் கேட்கும்முன் அங்கே தெனாலி ராமன் வந்தார். அரசர் தெனாலிராமனை பார்த்து, “அந்த வண்டியில் என்ன கொண்டு செல்கிறார்கள் என்பதை விசாரித்து வாருங்கள்” என்றார்.
உடனே ராமன், “அரசே! நான் வரும்போதே வண்டி செல்வதை பார்த்ததால் விசாரித்துவிட்டு தான் வந்தேன். அதில் நூறு மூட்டை நெல் தேவாரம் எனும் ஊருக்கு எடுத்துச்செல்கிறார்கள். அதற்கான சாலை வரியை செலுத்தி யிருக்கிறார்கள்” என்றார்.
இதை கவனித்துக் கொண்டிருந்த தேரோட்டி எதற்காக தெனாலிராமனுக்கு முதல் மரியாதை கிடைக்கிறது என்று புரிந்து கொண்டான்.
கதையில் வருவதைப்போல மனிதர்களில் இரண்டுவித மனோபாவம் உடையவர்கள் உண்டு. ஒன்று வேலைக்கார மனோபாவம், மற்றொன்று உரிமையாளர் மனோபாவம். இதைப் படித்த உடன், வேலை செய்பவர்களுக்கெல்லாம் வேலைக்கார மனோபாவம், வேலை தரும் முதலாளிகளுக்கெல்லாம் உரிமையாளர் மனோபாவம் என்று புரிந்து கொள்ள வேண்டாம்.
சொல்வதை மட்டும் செய்யும், சொன்னால் மட்டும் செய்யும், சொல்லிக் கொண்டே இருந்தால் மட்டும்தான் செய்யும் மனோநிலை உங்களுக்கு இருந்தால் நீங்கள் வேலைக்கார மனோ பாவம் உடையவர் என்று அர்த்தம்.
சொல்லாமலே செய்யும், சொன்னதை விட மேலே செய்யும், மற்றவர் மேற் பார்வைக்கு அவசியமே இல்லாமல் செய்யும் மனோநிலை உங்களுக்கு இருந்தால் நீங்கள் உரிமையாளர் மனோபாவம் உடையவர் என்று அர்த்தம்.
ஒரு சிலர் இருக்கிறார்கள், வெற்றிலை பாக்கு வாங்கிவரச் சொன்னால் அவர்கள் வெற்றிலை பாக்கு மட்டும்தான் வாங்கி வருவார்கள். அப்படியிருந்தால் வேலைக்கார மனோபாவம் உடைய வர்கள். வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பும் சேர்த்து வாங்கி வந்தால் அவர்கள் உரிமையாளர் மனோபாவம் உடையவர்கள்.
இந்த மனோபாவம்தான் நீங்கள் வாழப் போவது பராமரிப்பு வாழ்க்கையா? அல்லது முன்னேற்ற வாழ்க்கையா? என்பதை தீர்மானிக்கிறது.
அதென்ன முன்னேற்ற வாழ்க்கை, பராமரிப்பு வாழ்க்கை என்கிறீர்களா?
குடிசை வீட்டில் வாழ்பவர் அந்தக்கூரையை பராமரித்து பராமரித்து அதிலேயே வாழ்ந்து வந்தால் அது பராமரிப்பு வாழ்க்கை.
அவரே அதை ஓட்டுவீடாக மாற்றி, சில ஆண்டுகள் கழித்து அதை மாடிவீடாக மாற்றினால் அது முன்னேற்ற வாழ்க்கை.
நிறுவனங்களில் சிலர் பெருமையாக சொல் வார்கள், நான் இங்கே 15 வருடமாக சேல்ஸ்மேனாக இருக்கிறேன். இதில் என்ன பெருமை இருக்கிறது? எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிற நிலையை அப்படியே பராமரித்து வாழ்கிறார்கள்.
அதே நிறுவனத்தில் பாருங்கள், இன்னும் சிலர் வேலைக்கு சேரும்போது விற்பனை உதவி யாளராக சேர்ந்திருப்பார்கள். சில ஆண்டுகள் கழித்து விற்பனையாளராக உயர்வார்கள். இன்னும் சில ஆண்டுகளில் கவுண்டர் இன்சார்ஜ் பிறகு சூப்பர்வைசர், பிறகு தள மேலாளர், பொது மேலாளர் என முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். இதுதான் முன்னேற்ற வாழ்க்கை.
நீங்கள் வேலைக்கார மனப்பான்மை உடையவராக இருந்தால் உங்களுக்கு பராமரிப்பு வாழ்க்கை அமையும். நீங்கள் உரிமையாளர் மனப் பான்மை உடையவராக இருந்தால் உங்களுக்கு முன்னேற்ற வாழ்க்கை அமையும். நீங்களும் ஒரு நாள் தலைவராவீர்கள்.
(தொடரும்)
Leave a Reply