– கிருஷ்ண வரதராஜன்
வெற்றிக்காக என்னால் காத்திருக்க முடியாது
விளம்பரத்திற்காக அதிகம் செலவிடும் என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லும் வாசகம்,ó ”வெற்றிக்காக என்னால் காத்திருக்க முடியாது.”
”இப்போது நான் செய்யும் பிஸினஸை இப்படி செய்து கொண்டிருந்தாலே போதும். ஐந்து வருடத்தில் முதலிடத்திற்கு வந்துவிடுவேன். ஆனால் அதுவரை என்னால் காத்திருக்க முடியாது. எனக்கு வெற்றி வேண்டும். அதுவும் விரைவில் மிக விரைவில் வேண்டும்” என்பார்.
உண்மைதான், விளம்பரங்களால் மட்டும் எதுவும் விற்பனையாவதில்லை என்றாலும் விளம்பரம் இல்லை என்றால் எந்த ஒரு பொருளையும் யாரும் இன்று சீண்டுவதில்லை.
விளம்பரம் என்பது மதிப்பு கூட்டும் வேலையை செய்கிறது. ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் செல்கிறீர்கள். ஏராளமான குளியல் சோப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
அங்கிருப்பவர் இதுவரை நீங்கள் கேள்விப் பட்டிராத, பார்த்திராத ஒரு சோப்பை காண்பித்து அதை வாங்கச் சொன்னால் வாங்குவீர்களா? நிச்சயம் மாட்டீர்கள். ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயமான சோப்பைத்தான் வாங்குவீர்கள். காரணம், விளம்பரம்.
விளம்பரத்தால் ஒரு முறைதான் ஒரு பொருளை வாங்க வைக்க முடியும். தரம்தான் அதை தொடர்ந்து வாங்க வைக்கும். எனவே ஒரு பொருளை முதன்முறை வாங்க வைக்க விளம்பரமும் வேண்டும். தொடர்ந்து வாங்க வைக்க தரமும் வேண்டும். மனிதர்களின் திறமை விற்பனையாவதற்கும் இதுதான் விதிமுறை.
உணவுக்கு சுவைதான் உண்மையான விளம்பரம். அதை விடுத்து எவ்வளவு செலவு செய்து விளம்பரம் கொடுத்தாலும் சுவையற்ற ஹோட்டலில் ஆள் நடமாட்டம் இருக்காது. சுவை மட்டும் கொடுத்துவிட்டால் ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு முட்டுச்சந்தில் இருந்தாலும் எல்லோரும் தேடி வருவார்கள்.
எனவே பூக்கள் வண்ணத்தாலும் வாசனையாலும் விளம்பரம் செய்வதைப்போல… திறமையால் உங்களை விளம்பரம் செய்யுங்கள்.
சிங்கம் ஒன்று காட்டுக்குள் கம்பீரமாக திரிந்து கொண்டிருந்தது. தன் வருகையை பதிவு செய்ய, எல்லோரும் தன்னை வியந்து பார்க்க அவ்வப்போது அது கர்ஜனை செய்தது. மரப் பொந்தில் அமர்ந்து அதைப்பார்த்துக் கொண்டிருந்த முயலுக்கு ஒரு ஆசை.
நாமும் இது போல கர்ஜனை செய்ய வேண்டும். மரத்திலிருந்து இறங்கி ஒய்யாரமாக நடந்தது. தொண்டையை கனைத்துக்கொண்டு தன் குரலால் கர்ஜனையை போல கத்தியது. முயலின் குரலை கேட்ட மாத்திரத்தில் பாய்ந்து வந்த சிங்கம் ஒரே அடியில் வீழ்த்தி தன் பற்களால் கவ்விக்கொண்டு காட்டிற்குள் ஓடி மறைந்தது.
இதனால் அறியப்படும் நீதி யாதெனில், கம்பீரம் இருந்தால் மட்டுமே கர்ஜனை செய்ய வேண்டும்.
Leave a Reply