வெற்றிப் பக்கங்கள்

-கிருஷ்ண வரதராஜன்

உலகத்திலேயே, ‘அதிக உழைக்கும் திறன் உள்ளவர்கள், இந்தியர்கள்’ என்று ஒருவர் ஆய்வின் மூலம் கண்டறிந்தார். அந்த ஆய்வு முடிவை ஏற்றுக் கொள்ளாத அவரின் நண்பர்கள் கேலி செய்யும் பாவனையோடு கேள்வி கேட்டார்கள், ‘அப்படி யென்றால் இந்தியா இந்நேரம் வல்லரசாக வந்திருக்க வேண்டுமே?’

ஆய்வாளர் அடித்துச்சொன்னார், ”என்னால் உறுதியாக சொல்லமுடியும். ஒரு அமெரிக்கன் இரண்டரை நாளில் செய்யும் வேலையை ஒரு இந்தியன் ஒரே நாளில் செய்துவிடுவான். ஒரு ஜப்பானியன் இரண்டு நாளில் செய்யும் வேலையை ஒரு இந்தியன் ஒரே நாளில் செய்துவிடுவான். எனவே உழைக்கும் திறனை பொறுத்த அளவில் இந்தியர்கள்தான் முதலில் இருக்கிறார்கள். ஆனால் என்ன பிரச்சனை என்றால், இவர்கள் உழைப்பதே இல்லை”.

இதை நான் நேரடியாக உணரும் வண்ணம் ஒரு சம்பவம் நடந்தது. மீன் வலை தயாரிப்பில் தேசிய அளவில் முன்னணியில் இருக்கிற நிறுவனம் ஒன்றிற்கு நாங்கள் மனிதவள மேம்பாட்டு ஆலோசகர்களாக இருக்கிறோம். அங்கு நான் கண்ட விஷயம், அந்த ஆய்வு முடிவை எனக்கு தெளிவாக்கியது.

மிக நவீனமாக செயல்பட்டு வரும் அந்நிறுவனத்தில் ஜப்பானிலிருந்து தருவிக்கப்பட்ட இயந்திரங்களை நிறுவும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அமிதா என்கிற அந்த ஜப்பானிய நிறுவனத்திலிருந்தே பொறியாளர்கள் வந்திருந் தார்கள். அதே நேரத்தில் அங்கேயிருந்த பழைய மிஷின் ஒன்று விற்பனையாகி தனித்தனி பாகங் களாக பிரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. உள்ளூர் மெக்கானிக் ஒருவர் இரண்டு அஸிஸ்டெண்டுகளை வைத்து வேலை செய்து கொண்டிருந்தார்.

இரண்டையும் பார்த்துக்கொண்டிருந்த போது, என்னையும் அறியாமல் ஒப்பிடுதல் ஆரம்பமாகி விட்டது.

இந்தியர் வேலை செய்த இடத்தில் இயந்திரத்தை கழற்றுவதற்கு தேவையான அனைத்து கருவிகளும் தரையில் சிதறிக்கிடந்தது. கைக்கு வாகாக இருக்கும் பொருட்களை எடுக்கக்கூட அஸிஸ்டெண்டுகளை கூப்பிட்டுக்கொண்டிருந்தார் அந்த மெக்கானிக். ”டேய், அந்த ஸ்பேனர எடு. இதை கொண்டு போய் ஓரமா வை”
மதியம், உணவுக்காக போனவர்கள் உண்ட களைப்பு தொண்டனுக்கு உண்டு என்பதை நிரூபிப்பதற்காக சற்று ஓய்வெடுத்துவிட்டு நான்கு மணிக்குத்தான் வந்தார்கள்.

அதேநேரத்தில் ஜப்பானிய மெக்கானிக், உதவியாளர்கள் இல்லாமலே வேலை செய்து கொண்டிருந்தார். அங்கே உபகரணங்கள் எதுவும் தரை முழுக்க சிதறிக்கிடக்கவில்லை. அவருடைய சட்டை பேண்ட் முழுக்க பாக்கெட்டுகளாக இருந்தது. ஸ்பேனர், ஸ்குரூ ட்ரைவர் என அது முழுக்க உப கரணங்களால் நிறைந்திருந்தது. அவர் தனியாளாகவே வேலை செய்தார். வேலை விரைவாக முடிய வேண்டும் என்ற நினைப்பில் நிறுவனம் தந்த உதவியாளர்களையும் அவர் புன்னகையோடு மறுத்தார்.

உணவிற்குச் சென்றவர் உற்சாகமாக சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்தவுடன் அதை விட உற்சாகமாக வந்து வேலையைத் துவங்கினார்.

ஓர் இயந்திரத்தை பூட்டுவதை விட பிரிப்பது சுலபம்தான் என்ற போதிலும் அந்த இயந்திரத்தை ஒன்றரை நாளில் ஜப்பானியர் நிறுவி ஓட விட்டார். இந்தியர் இயந்திரத்தை பிரிப்பதற்கு இரண்டு நாள் எடுத்துக்கொண்டார்.

அமெரிக்கர்களைவிட ஆப்பிரிக்கர்களை விட ஜப்பானியர்களை விட இலங்கையில் இருப்பவர்களை விட இந்தியர்களின் உழைக்கும் திறன் கூடுதல்தான். ஆனால் அவர்கள் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி முழு மூச்சாக உழைப்பதே இல்லை என்ற அந்த ஆய்வு வரிகள் எனக்குள் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து கொண்டே இருந்தன.

வேலை முடிந்ததும் கைகழுவச் சென்ற உள்ளூர் மெக்கானிக் பைப்பை திறந்து விட்டுக் கொண்டு கைகளை நனையவிட்டபடி அஸிட்டெண்டுகளை பார்த்து கத்தினார், ‘டேய், சோப்பு எடுத்துட்டு வா’

அடுத்து வந்த ஜப்பானிய மெக்கானிக் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய பொட்டலத்தை பிரித்து அதிலிருந்த சோப்பை வைத்துக்கொண்டு கைகழுவ ஆரம்பித்தார். அந்த முன்னேற்பாடு தான் அவர்களின் உயர்வுக்கு காரணம் என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது அவரிடமிருந்த புன்னகை.
அது எனக்கு வெற்றியின் புன்னகையாக தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *