யாரோ போட்ட பாதை : எதையும் சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்!

– தி.க. சந்திரசேகரன்

“வாழ்க்கை உங்களுக்கு என்ன கொண்டுவந்து சேர்க்கிறது என்பதைவிட, வாழ்க்கைக்கு என்ன மனப்பான்மையை நீங்கள் கொண்டு வந்து சேர்க்கிறீர்கள் என்பதும்; வாழ்க்கையில் என்ன நேரிடுகிறது என்பதைவிட, ஏதோ ஒன்று நிகழும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதுமே உங்கள் வாழ்க்கையின் பொருளைத் தீர்மானிக்கிறது”.

லூயி டனிங்க்டன் என்ற ஒரு பாதிரியார் கூறிய இந்த கருத்து சிந்தனையைக் கிளறக் கூடியதாக அமைந்துள்ளது.

வாழ்க்கை நமக்கு நிறைய கொண்டு வந்து சேர்க்கிறது. பணம், பதவி, புகழ், சொத்து, வறுமை, உயர்வு, தாழ்வு, இகழ்ச்சி, புகழ்ச்சி, பெருமை, சிறுமை – இப்படி பலவற்றை வாழ்க்கை நமக்குக் கொண்டுவந்து சேர்க்கின்றது.

ஆனால் எந்த மனப்பான்மைகளை நாம் வாழ்க்கைக்குக் கொண்டு வந்து சேர்க்கிறோம்?

சுருக்கமாகக் கூறின்,

நமக்குப் பணம் வந்து சேருகின்றது; கூடவே நமக்கு என்ன வந்து சேருகிறது?

ஆணவம், அகந்தை, செருக்கு, அகம்பாவம், படாடோபம் – ஆகியவை பணம் வந்ததால் வந்துவிட்டதா? – அல்லது எளிமை, தாராள மனப்பான்மை, அடக்கம், பொறுப்புணர்வு ஆகியன பணம் வந்த பின்னும் நீடிக்கின்றதா?

ஒருவருக்கு வறுமை வந்து சேர்ந்துவிட்டது. வறுமை வந்தது முக்கியமல்ல; வறுமை வந்தவுடன் அவருக்கு வேறு என்ன வந்தது?

வேதனை, விரக்தி, வெறுப்பு, அவநம்பிக்கை, கோபம், பயம் ஆகிய உணர்வுகள் ஒட்டிக்கொண்டனவா? – அல்லது பொறுமை, துணிவு, நம்பிக்கை, உழைப்பில் ஆர்வம், துணிச்சல் ஆகிய பண்புகள் அந்த மனிதனிடம் குடிபுகுந்தனவா?

லூயி டனிங்க்டன் இவற்றைத்தான் விளக்கிக் கூறுகிறார். “உங்களுக்கு வாழ்க்கை எதைக் கொடுத்தது என்பது முக்கியமல்ல, வாழ்க்கைக்கு நீங்கள் என்ன மனநிலையைக் கொடுத்தீர்கள் என்பதே முக்கியம்!”

வாழ்க்கையை ஏழ்மையில் தொடங்கிய பலரை நான் அறிவேன். இன்று அவர்கள் பலகோடி ரூபாய்களில் புரளுகிறார்கள். ஆனாலும் அதே எளிமை, புன்னகை, அன்பான சொற்கள், மரியாதை, பாசம் ஆகிய குணங்களை விட்டுவிடவில்லை. இப்படிப்பட்ட பண்புகளை ஒரு சிலருக்காக மட்டும் வைத்திருக்கவில்லை; யாரோடு பேசினாலும் பழகினாலும் அப்படித்தான்.

பணம் அவர்களுடைய பெட்டகத்தை நிரப்பியதேயொழிய, அகந்தையும், கர்வத்தையும் நிரப்பவில்லை. அவர்களுடைய உயரிய மனப்பான்மைகளை பலிகொடுத்துவிட்டு, செல்வத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

நாம் கண்கூடாகப் பலரைக் காண்கிறோம்! சாதாரண நிலையில் இருந்திருப்பார்கள். பணம் சேர்ந்துவிட்டால் தலைகால் தெரியாது; தரையில் நடக்கமாட்டார்கள்; பழைய நண்பர்கள் – உறவுகள் கண்ணுக்குத் தெரியாது. எண்ணங்கள், செயல்கள், பேச்சு, உறவுகள் எல்லாவற்றிலும் ஆணவமும், செருக்கும் மமதையும் தெரிக்கும்.

சமநிலையில் இருப்பதை Balancing என்று குறிப்பிடுவார்கள். இன்பம் – துன்பம், வெற்றி – தோல்வி இவைகளால் பாதிக்கப்படாமல் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதும், பிறகு நம்முடைய குறிக்கோளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது உயரிய பண்பு!

இதைக் கற்றுக்கொண்டால் விரும்பத்தகாத மன அழுத்தம், சங்கடங்கள், வியாதிகள் நமக்கில்லை!

“வாழ்க்கையில் உங்களுக்கு என்ன நேரிடுகிறது என்பதைவிட, ஏதோ ஒன்று நிகழும்போது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதே வாழ்க்கையின் பொருளைத் தீர்மானிக்கிறது” – இது லூயி டனிங்க்டன் கூற்றின் மறுபாதி.

இஸ்லாமிய வணிகர் ஒருவர் இருந்தார். மிகப்பெரும் பணக்காரர்; கோடிக்கணக்கில் சொத்து!காலணி ஏற்றுமதி வணிகத்தில் முதல் நிலையில் இருந்தார்.

அவருடைய மகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஒரு மருத்துவர் ஒரு தவறான ஊசியைப் போட்டதால் அந்தப் பெண் இறந்துவிட்டார். அத்தனைபேரும் கொதித்துப் போனார்கள். “அந்த மருத்துவரை தண்டிக்க வேண்டும்; சும்மா விடக்கூடாது; நடவடிக்கை எடு!!. … ஆத்திரமான குரல்கள் உறவினர்கள் பக்கமிருந்து ஒலித்தன.

வணிகர் அமைதியாகக் கூறினார், “அவள் இறந்துவிட்டாள்; அவள் மறைவு என்பது அல்லாஹ் விதித்த முடிவு. அதற்காக நாம் மருத்துவரைக் குறைகூறமுடியாது. அவரை ஒன்றும் செய்யவேண்டாம்!”

வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் நேரிடும்போது என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, வாழ்க்கையின் பொருள் புரிகின்றது – என்பது புரிகின்றது.

“நல்ல மனிதர்களின் வாழ்க்கையில் கெட்ட நிகழ்வுகள் நடக்கும்போது அவர்கள் என்ன ஆகிறார்கள்?

– மேலும் நல்லவர்களாகிறார்கள்!” – என்று ஓர் அறிஞர் கூறியதுதான் எத்துணை அழகான சிந்தனை!

“மனநிலை” – “மனப்பான்மை” இவையெல்லாம் எத்துணை அற்புதமான செய்திகள்.

ஒரு மனிதனை வெறி நாய் கடித்துவிட்டது. மிகப்பெரும் பணக்காரர். உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறாததால் சாகவேண்டிய கட்டத்திற்கு வந்துவிட்டார். மருத்துவர் கூறினார். “இன்னும் 24 மணி நேரத்தில் சாகப் போகிறீர்கள். இன்னும் 4 மணி நேரத்தில் நினைவு தவறும். நீங்கள் யாரைக் கடித்தாலும் அவர்களும் இதே நோயில் சிக்கிச் சாவார்கள். உங்களுக்குத் திருமணமும் ஆகவில்லை. இவ்வளவு பெரிய சொத்து; யாருக்கு என்ன தருவது என்று உடனடியாகத் தீர்மானம் செய்துவிடுங்கள்!”

அந்த மனிதர் மருத்துவரிடமே, ஒரு காகிதத்தையும் பேனாவையும் வாங்கி வைத்துக்கொண்டு ஒரு பட்டியல் போட்டார். முதலில் மருத்துவர் பெயர், பிறகு பல பெயர்கள். பட்டியல் நீண்டதும். மருத்துவர் கேட்டார், “எதற்கு இவ்வளவு பெயர்கள்? ” அவருக்குக் கவலை – இவ்வளவு பேருக்கும் சொத்தைப் பகிர்ந்து கொடுத்தால் தன் பங்கு குறைந்துவிடுமே என்று. அதற்கு சாகப் போகும் செல்வந்தர் கூறினார், “இந்தப் பட்டியலைப் பற்றித்தானே கேட்கிறீர்கள்? சாவதற்கு முன்னால் யாரையெல்லாம் கடிக்கவேண்டும் என்று பட்டியல் போடுகின்றேன். எழுத எழுதப் பெயர்களாக வந்துகொண்டே இருக்கிறது!”

இந்த நிலையிலும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஏதோ ஒரு நிகழ்வு வாழ்க்கையில் ஏற்பட்டுவிடுகின்றது. இந்த நிலையில் அவர்களால் நல்லதும் செய்ய முடியும்; கெட்டதும் செய்யமுடியும். ஆனாலும் சிலர் கெட்டதையே செய்யத் துடிப்பார்கள்.

பதவி வந்தவுடன் நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்கள் உண்டு; பழிவாங்கத் துடிப்பவர்களும் உண்டு. இவையெல்லாவற்றிற்கும் காரணம் மனநிலையே! ஒரு மனிதனை உயர்த்துவதும், தாழ்த்துவதும் அவனுடைய மனநிலையே!

சிறந்த மன நிலைகளை வளர்த்துக் கொள்ளும்போது வாழ்க்கை ஒரு சமநிலையில் அமையும். உடல் மனநிலை இரண்டும் சீராக அமையும்.

WRONG ATTITUDE எப்படி இருக்கும் என்பதை, WRONG என்ற சொல்லிலிருந்து எடுத்து ஆராயலாம்.

W – Worrying about things which cannot be controlled.

நம்மால் கட்டுப்படுத்த முடியாத செய்திகளைப் பற்றிக் கவலைப்படுவது ஒரு தவறான மனநிலை. நடந்து முடிந்துபோன, இன்றைக்கு ஒன்றும் செய்ய முடியாத ஒன்றைப் பற்றிக் கவலைப்படுவது.

நம் கட்டுப்பாட்டில் இல்லாத, விலைவாசி உயர்வு, மின்தட்டுப்பாடு, ஆப்ரிக்காவில் வறுமை, அணுசக்தி உடன்படிக்கை, போன்ற செய்திகளைப் பற்றி மணிக்கணக்காக விவாதம் செய்வது, கவலைப்படுவது தவறான மனநிலை.

மின்வெட்டைப் பற்றிக் கவலைப் படவேண்டாம் என்று கூறமுடியாது. ஆனால் தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பதுதான் சரியில்லை. “மாறாக இந்த சூழ்நிலையில் என்ன செய்வது? சிக்கல்களை எப்படி தீர்ப்பது? ” என்று சிந்திப்பது சரியான மனநிலை.

“இருட்டாக இருக்கிறதே என்று புலம்புவதைவிட ஒரு மெழுகுவர்த்தி ஏற்றலாமல்லவா?

R – RUSHING TO JUDGEMENT:

அவசரப்பட்டு முடிவெடுத்தல்:

என்ன ஏதேன்று ஆராயாமல் வேகமாக முடிவெடுத்தல் ஒரு தவறான மனப்பான்மை. இதனால் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்றுகூட சரியாகத் தெரிந்துகொள்ள முடியாமல் தவறான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

O – OVER-REACTING:

மிகையாக செயல்படுதல்:

எந்த ஒரு செயல் நம்மை பாதிக்கும்போதும், நாம் எப்படி செயல்படவேண்டும் என்று ஒரு நிலை – எல்லை இருக்கிறது. அதை மிஞ்சுவது நல்ல மனப்பான்மை அல்ல. நல்லதும் அல்ல.

கோபம் வந்தால் சற்று உரக்கப் பேசலாம் கத்தலாம். அதற்காக கையில் இருப்பதை வீசி, மண்டையை உடைக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

துக்கம் வந்தால் அழலாம், அழத்தான் வேண்டும். அதற்காகத் தரையில் உருண்டு புரளவேண்டியதில்லை.

வீட்டிற்கு விருந்தினர் வந்தால் அன்போடு நடத்த வேண்டியதுதான். அதற்காகத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடவேண்டிய அவசியமில்லை.

சிலர் எப்போதுமே கொஞ்சம் “ஓவராக” – மிகையாக இருப்பார்கள். இத்தகைய மனப்பான்மையின் விளைவுகளும் மிகையாக மோசமாக இருக்கும்.

N – NEGLECTING AREA OF CONTROL:

கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியவற்றைப் புறக்கணித்தல்:

எதையெல்லாம் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்?

உடல் நலம், வரவு செலவு, உற்பத்தி, விற்பனை, உறவுகள், நட்பு, குடும்ப நலன் – இப்படி கவனிக்க வேண்டிய, கண்காணிக்க வேண்டிய செய்திகள் பல இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல், பொழுதுபோக்கு, கேளிக்கை, வெட்டி வேலைகள் இவற்றில் ஈடுபாடு அவ்வளவு நல்லது அல்ல. இதுவும் தவறான மனப்பான்மையே!

G – GIVING UP TOO SOON:

ஒரு முயற்சியில் இறங்கி விரைவிலேயே கைவிட்டுவிடுவது வேகமாக ஒரு வேலையில் இறங்குவதும், இறங்கிய வேகத்திலேயே வெளியேறிவிடுவதும் சிலருடைய சுபாவம். எடுத்த காரியத்தில் முனைப்பாக இறங்கி, வெற்றியடையும் வரையில் போராடி, வெற்றியடையும் குணம் இவர்கட்கு இல்லை. எல்லாவற்றிலும் அரைகுறை. முழுவாழ்க்கை வாழ முடியாத மனிதர்களாக இவர்களிருப்பார்கள்.

லூயி டனிங்க்டன் அவர்களுடைய கூற்று நிறைய செய்திகளை நமக்குக் கற்றுத்தருகிறது.

  • உங்களுக்குள் எந்த மனப்பான்மை வளர்த்து வைத்திருக்கிறீர்கள்?
  • எந்த நிலை வந்தாலும், எந்த மனப்பான்மையில் இருக்கிறீர்கள்?
  • வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எப்படி எடுத்துக்கொண்டு
    செயல்படுகிறீர்கள்?

எதுவும் பெரிய அளவில் பாதிக்காத, எதையும் சரிசமமாக எடுத்துக் கொள்ளும் மன நிலையைப் பெற்றிருந்தால் வாழ்க்கையின் பொருளை அறியமுடியும்!

அந்த உயரிய மனப்பான்மையை வளர்க்கும் பாதையில் பயணம் செய்யலாமே!

– வளரும்

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *