– பிரதாபன்
சுகம் என்னும் வாழ்க்கை முறையை உலகின் பெரும்பகுதி தன்னுடைய தாக்கிக் கொண்டு தடுமாறும் நேரத்தில், மனித சமூகத்தின் சில பிரிவுகள் நிதானத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றவாழ்க்கை முறை ஸ்லோயூரப்
(slow Europe), வேகம் குறைந்து விவேகம் நோக்கி நகர்கின்ற வாழ்க்கை முறை இது. உணர்வு ரீதியான இந்த மாற்றத்தை உணவிலிருந்து தொடங்குகிறார்கள் இவர்கள்.
பாஸ்ட்ஃபுட் எனும் துரித உணவுக்கு எதிராக ஸ்லோஃபுட் என்ற முறையின் கீழ் இயற்கை உணவு, ஆவியில் வேகவைத்த உணவு போன்றவற்றைநோக்கி இவர்கள் நகர்கிறார்கள். அவசரமாய் அள்ளிப் போட்டுக்கொண்டு ஓடுவதை விடுத்து நிதானமாய், குடும்பத்துடன் கூடியிருந்து மென்று சாப்பிடக் கூடிய உணவுப் பழக்கத்தை உருவாக்குகிறார்கள்.
இந்த விவேகம் எப்படி வாழ்க்கை முறையில் வெளிப்படுகிறது என்பதை உணர்த்த, ஸ்வீடன் நாட்டில் ஒரு சம்பவம் நடைபெற்றது. வால்வோ என்கிற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் ஒருவர். அவர் ஊருக்குப் புதியவர் என்பதால், உடன் பணிபுரியும் ஒருவர் சில நாட்களுக்கு தினமும் காலையில் தன்னுடைய காரில் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்.
பரந்து விரிந்த அந்த தொழிற்சாலைக்குள், பணி நேரத்திற்குப் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே அந்தக் கார் நுழையும். வாகன நிறுத்தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்தப் பகுதியோ குறைந்தது இரண்டு கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. ஆனால், காரை ஓட்டி வருகிற இந்த அலுவலக சகா, அதன் கோடியில் கொண்டு போய் நிறுத்துவார். நுழைவாயிலுக்கு அருகே கார்கள் நிறுத்துமிடம் காலியாகத்தான் இருக்கும். ஆனால் இவர் கடைசியில்தான் நிறுத்துவார்.
புதிதாகச் சேர்ந்த நண்பருக்கு இது புதிராக இருந்தது. தயங்கித் தயங்கிக் காரணம் கேட்டார். “நாம் முன்னதாகவே அலுவலகம் வருகிறோம். நிறைய நேரம் இருக்கிறது. நிதானமாக நம்முடைய இடத்திற்கு நடந்து போகலாம். கடைசியில் வருபவர்கள் நேரமின்மையால் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு முன்பகுதியிலேயே இடம் கிடைத்தால் விரைவாக வண்டியை நிறுத்திவிட்டுப் பதட்டமில்லாமல் அலுவலகத்திற்குள் போகலாம். அதற்காகவே நம்முடைய காரைத் தள்ளி நிறுத்துகிறேன்” என்றார் அவர். இதற்குத்தான் விவேகம் என்று பெயர்.
இத்தகைய அணுகுமுறை காரணமாக, பதட்டமில்லாமல் திறமையாக செயல்பட முடிகிறது. ஐரோப்பாவின் சில பகுதிகளில், செயல்திறனை மேப்படுத்துவதற்காக அவர்கள் செய்திருக்கும் மாற்றம் நமக்கு வியப்பாக இருக்கும். வேலை நேரத்தைக் குறைத்திருக்கிறார்கள்.
பாரீஸ் போன்ற பகுதிகளில் வாரம் 35 மணி நேரம்தான் வேலை நேரம். ஜெர்மனியில் 28.5 மணி நேரம்தான் வேலை நேரம். இதன் காரணமாக நிதானமாய், பதட்டமில்லாமல வேலை நடக்கிறது. இரண்டு மணி நேரம் சொந்த வேலைக்காக முழுநாள் விடுமுறை எடுக்கும் முறைகுறைந்து, அலுவலக வருகைப்பதிவு அதிகமாகியிருக்கிறது. பதட்டமில்லாத – பக்குவமான செயல்பாடு கூடுகிறது.
ஒரு டெலிபோன் ஆப்ரேட்டருக்கு ஒரே நேரத்தில் பத்து அழைப்புகள் வரலாம். ஆனால் அவர் ஒவ்வோர் அழைப்பையும் தனித்தனியாகத்தான் கையாள வேண்டியவர் ஆகின்றார். தான் பதில் சொல்ல வேண்டிய முதல் அழைப்பை அவர் அடையாளம் கண்டவுடனேயே அடுத்தடுத்த அழைப்புகளின் வரிசை அவருக்குப் பிடிபட்டுவிடுகிறது. அதுபோல், ஒழுங்குபடுத்தப்பட்ட – நெருக்கடியில்லாத நேர நிர்வாகம் ஆகியவை செயல்திறனைப் பெருக்குவதோடு விவேகத்தையும் வளர்த்தெடுக்கிறது.
பணி நேரத்தைக் குறைப்பது என்பது அவரவர் சூழலில் சாத்தியப்படுகிறதோ இல்லையோ, குறைவான செயல்திறன் நேரங்களில் நிதானமான – எளிய வேலைகளைப் பார்க்கலாம். மதியம் 2 – 3.30 வரையிலான நேரம் பெரும்பாலும் செயல்திறன் குறைகிற நேரம்தான். அந்த நேரத்தைப் பதட்டமில்லாமல் – சின்னச் சின்ன எளிய வேலைகளை செய்து முடிக்கப் பயன்படுத்துதல் – ஒரு நாளைத் திட்டமிடுவது – ஒரு வாரத்திற்காக வேலைகள் முன்கூட்டியே திட்டமிடுவது போன்றவை கடைசி நேரப் பதட்டங்களைத் தவிர்க்கும் விவேகத்தை வளர்க்கும்.
Leave a Reply