அத்தனை வெற்றிகளுக்கும் ஆரம்பப்புள்ளி, அதிருப்திதான் என்றார் ஒருவர். உண்மைதான்!
நாம் ஒவ்வொருவரும் தன்னிடம் இருக்கும் அடிப்படைத் திறமையே அபாரம் என்று நம்புகிறோம். ஆனால், அந்த அடிப்படைத் திறமை மீது நமக்கே அதிருப்தி தோன்றும் போதுதான், அந்த அடிப்படைத் திறமையை மேலும் வளர்க்கிறோம். அது அசாத்தியமான திறமையாக – அசைக்க முடியாத திறமையாக – வளர்ச்சி பெறுகிறது.
” என்ன செய்ய வந்தோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்” என்ற கேள்வியை எப்போதும் எழுப்பிக் கொண்டே இருப்பது நல்லது. ஒரு தனி மனிதனிடம் இருக்கிற ஆற்றலின் குணம் விசித்திரமானது. வேகமும் வெறியும் இல்லையென்றால், இது வேண்டிய அளவு வெளிப்படுவதில்லை. வெற்றிகரமான கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் வாழ்க்கை இதைத்தான் சொல்கிறது.
முதல் வாய்ப்பில் அவர்கள் முத்திரை பதித்துக் காட்டியதும், ரசிகர்கள் அவர்கள் மீது கவனம் செலுத்துகிறார்கள். உடனே எதிரணிக்கு அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்கிற வேகம் வந்துவிடுகிறது. ஆடுகளத்தில் மட்டையுடன் இறங்கும்போது ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரம், விளையாட்டு வீரர்களை உசுப்புகிறது. அவர்களை வீழ்த்த வேண்டுமென்பதில் எதிரணி காட்டும் தீவிரமோ அவர்களை வெளியேற்றி விடுகிறது. கடுமையான பயிற்சியும், தன்மேல் குவியும் கவனமும், அவர்களை இதுவரை அளித்திராத அளவுக்கு, திறமையை வெளிக் கொணர்கிறது.
எட்டிவிட்ட வெற்றிகள் அவர்களுக்கு ஒருபோதும் நிறைவைத் தருவதில்லை. “இன்னும், இன்னும்’!” என்கிற வேகத்தில்தான் அவர்கள் வீறுகொண்டு எழுகிறார்கள். “இதுபோதாது” என்ற எண்ணத்தில்தான் தங்கள் இலக்குகளை நீடித்துக் கொண்டே போகிறார்கள். கழுதையின் முன்பு நீட்டப்படும் காரட் மாதிரி, நீட்டப்படும் இலக்குகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
நாம் குழந்தைகளாக இருந்தபோது, நம் சக்திக்கு உட்பட்டதை செய்யத் தொடங்கிறோம். சுற்றியிருப்பவர்கள் நமக்கு உற்சாகம் தருவதற்காகப் பாராட்டுகிறார்கள். ஒரு குழந்தையை, குறிப்பிட்ட செயலுக்காகப் பாராட்டினால், குதூகலத்துடன் திரும்பத் திரும்ப அதையே செய்யும். இந்த குணம், வளர்ந்த பிறகும் வருவது தவறு. எது நமக்கு எளிதோ, அதையே திரும்பத் திரும்பச் செய்வது, பாதுகாப்பானதாக இருக்குமே தவிர, நம் செயல் திறனைப் பெருக்குவதாக இருக்காது. அப்படியானால், செயல்திறனின் உச்சத்தை பெருவதற்கு சிறந்தவழி, நம் பலவீனங்களிலிருந்து தொடங்குவதுதான். தேர்தல் நேரத்தில் தலைவர்கள் தங்களுக்கு சாதகமான தொகுதியில் போட்டியிடுவதை விரும்புவார்கள். ஆனால் மற்ற நேரங்களில், கட்சி எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை பலப்படுத்தவே விரும்புவார்கள். அதற்கான முயற்சிகளில், முனைப்புடன் இறங்குவார்கள்.
இது, தலைவர்களுக்கு மட்டுமல்ல, தலைவர் பண்புள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான இயல்பு.
இதற்கு அடுத்தபடி நிலை, ஏற்கனவே இருக்கிற திறமையை இன்னும் மேம்படுத்துவது. அன்றாட அலுவலகப் பணிகளில் இருந்து, ஆர்வமுடன் நீங்கள் வளர்த்துக் கொள்ளும் தனித்திறமைகள் வரை எல்லாவற்றிக்கும் இது பொருந்தும். வலிமையான விலங்குகளுக்கும் வலை விரிப்பார்கள். காட்டுக்குள், எங்கிருந்தோ பாய்ந்து வருகிற பலம்பொருந்திய விலங்குகள் அந்த வலையில் வீழ்ந்துவிடும்.
சாதனையாளர்களுக்கும் அப்படியொரு வலை, வழியெங்கும் விரிக்கப்படுகிறது. அது சதிவலையல்ல, சந்தோஷ வலை. நம்மில் பலருக்கு மிகவும் பிரியமான வலை. அதுதான் பாராட்டு என்னும் பெரிய வலை. குழந்தைப் பருவத்தில், எதற்காக நாம் பாராட்டப்படுகிறோமோ அதையே திரும்பத்திரும்ப செய்வது என்கிற குணம், வளர்ந்த பிறகும் நம்மில் படிந்து விடுகிறது. இதைத் தாண்டி வரவேண்டும்.
உங்கள் வெற்றிக்கான கரவொலி அடங்கும் முன்னே அடுத்த வெற்றிக்கான ஆயத்தங்களில் இறங்கி விட வேண்டும். அடுத்ததாய் என்ன செய்வார்கள் என்று அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதுதான், சாதனையாளர்களின் பொது இலக்கணம். அப்படி உங்களை மேம்படுத்திக் கொள்ள ஒவ்வொரு நாளும் படிப்புக்கும் – பயிற்சிக்கும் போதிய நேரம் ஒதுக்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். மிக உறுதியாய், ஒவ்வொரு நாளும் உங்கள் திசையில் முன்னேறிக் கொண்டே இருங்கள்.
Raji
Miga Miga Arumai…
Intha paarataaiyum Yetrukkollalaame…
ashok kumar
sabash, wellsaid sir …………..congrats