புதுமை புத்துணர்வு புத்தகம்

நேர்காணல் கனகலக்ஷ்மி

ராஜீவ் காமினேனி

ஆக்ஸ்ஃபோர்ட் புக் ஸ்டோர் மூலம் கோவையில் ஆங்கில நூல்கள் வாசிப்பில் அதிரடிப் புதுமைகள் புகுத்தியவர்.

ஆஸ்திரேயாவில் பார்த்த நூல் நிலையங்களை மனதில் சுமந்து, ஆக்கபூர்வமான வாசிப்புச் சூழலை உருவாக்கும் கனவுகளுடன் உற்சாகமாய் நடையிடுபவர்.

புதுமைகளை உருவாக்கும் உத்திகள் பற்றியும் புத்தகங்கள் பற்றியும், இதோ… நம்முடன் பேசுகிறார்.


உங்கள் வாழ்க்கைப் புத்தகத்தின் முன்னுரை ப்ளீஸ்?

என் கல்லூரிப் படிப்பை இந்தியாவிலும் பின்பு ஆஸ்திரேலியாவிலும் கற்றேன். ஆரம்ப காலத்தில் சிமெண்ட் கம்பெனியில் விற்பனை மேலாளராகப் பணியாற்றினேன். பின்பு முனைவர் பட்டம் பெறுவதற்காக அஸ்திரேலியா சென்றேன். என் படிப்பு முடிந்தவுடன் அங்கேயே ஆசிரியராக ஒன்பதரை ஆண்டுகள் பணியாற்றினேன்.

இத்துறைக்கு எப்படி வந்தீர்கள்…?

நான் ஹைதராபாத்தில் படித்துக்கொண்டு இருந்தபோது என் உறவினர் ராம்பிரசாத் ஒரு புத்தக நிலையம் வைத்திருந்தார். அங்கே பகுதி நேர வேலை பார்த்தேன். அந்தச் சூழலும் அனுபவமும் நான் வருங்காலத்தில் புத்தக நிலையம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற முனைப்பை எனக்கு ஏற்படுத்தியது. பின்பு ஆஸ்திரேலியா சென்று ஆசிரியராகப் பணியாற்றும்பொழுது, என்னுள் இந்தத் தூண்டல் இருந்தே வந்தது. அதுவே நான் நாடு திரும்பி புத்தக நிலையம் அமைக்க காரணமாய் இருந்தது. புத்தக விற்பனை நிலையம் என்றாலே தூசியும் இருட்டும் நிரம்பிய இடம் என்பதை மாற்றி, ரசனைக்குரிய ரம்மியமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே என் கனவு.

வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு வாழ்க்கை வழங்கும் வரங்கள் என்னென்ன?

இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவர் புத்தகம் படிப்பவர். மற்றொருவர் புத்தகம் படிக்காதவர். இந்த உலகில் 160க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. அத்துனை கலாச்சாரங்களையும், தகவல்களையும் நேரில் சென்று பார்ப்பது சுலபமல்ல. ஆனால் புத்தகம் மூலம் அது சாத்தியம். சிறந்த பண்பாளனாக நம்மை உருவாக்கும் களஞ்சியங்கள் புத்தகங்கள். புத்தகம் படிக்கும் பழக்கமில்லாதவர்கள் குறைந்தபட்சம் படிப்பவர்களிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். புத்தகத்தில் மட்டும்தான் படிக்க வேண்டுமென்றில்லை, இன்றைய சூழலில் இணையதளம் அதற்குப் பெரிதும் கைகொடுக்கிறது.

புத்தக நிலையத்துடன் காபி ஷாப் அமைத்துள்ளீர்கள். இந்த எண்ணம் எப்படி உதித்தது?

நான் ஆஸ்திரேலியாவில் இருந்தபொழுது அங்கே ‘பார்டர்ஸ்’ என்ற புத்தக நிலையத்திற்கு அடிக்கடி செல்வேன். அந்தச் சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. புத்தகம் படித்துக்கொண்டே காபி குடிப்பது, குறிப்பெடுப்பது, கலந்துரையாடுவது என்றெல்லாம் அங்கே நடக்கும். இதுபோன்ற சூழல், புத்தகம் படிப்பதற்கான ஆர்வத்தை மேலும் தூண்டிது. நாம் ஆரம்பிக்கும் புத்தக நிலையம் இதுபோன்ற ஒரு சூழலைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதுபோல ஒரு புத்தக நிலையத்தை இந்தியாவில் கல்கத்தா நகரில் ‘ஆக்ஸ்போர்ட்’ நிறுவனம் நடத்தி வருவதை அறிந்து அவர்களுடன் தொடர்பு கொண்டேன். நான் இந்தியாவிலேயே முதல்முறையாக ‘ஆக்ஸ்போர்ட்’ நிறுவனத்தின் சார்பு நிறுவனத்தை கோவையில் துவக்கினேன்.

இந்த புதிய முயற்சியை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள்?

கோவையில் ஆக்ஸ்போர்ட் துவங்கப்பட்டபொழுது மக்கள் புத்தகம் வாங்க வந்தால் புத்தகம் மட்டுமே வாங்கிச் செல்வார்கள். காபி அருந்த வந்தால் காபி மட்டும் அருந்திச் செல்வார்கள். ஆனால், இந்தக் கருத்தாக்கத்திற்கான நோக்கம் கலந்துரையாடல் நிகழ்த்துவது, குறிப்பாக இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்வது. இப்பொழுது மக்கள் இதை புரிந்துகொண்டார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தத் துறையில் உங்களை ஈர்த்த விஷயம் எது மற்றும் ஈர்த்த மனிதர் யார்?

நான் முதுகலை ஆங்கிலம் படிக்கும்பொழுதே புத்தகங்கள் மீதான காதல் துவங்கியது. நான் லயோலா கல்லூரியில் படித்தபொழுது, ஒரு புத்தகத்தை படித்து பின் அதற்கான விவாதத்தை நடத்துவோம். அப்பொழுதுதான் அனைத்து வகையான புத்தகங்களையும் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். இந்தத் துறையை நோக்கி என்னை ஈர்த்த மனிதர் மும்பையை சேர்ந்த ஷான்பாக். இவர்தான் புத்தகத் துறையில் ‘பத்மஸ்ரீ’ விருதுபெற்ற ஒரே இந்தியர். நான் இவருடைய புத்தக நிலையத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு அவரைப் பற்றி நான் அறிந்துகொண்ட தகவல்கள் எல்லாம் மேலும் என்னை இவர் பக்கம் ஈர்த்தன.

உங்கள் புத்தக நிலையம் மூலமாக மக்களிடம் நீங்கள் கொண்டுவர நினைக்கும் மாற்றங்கள் என்னென்ன?

ஒரு மனிதனுக்கு புத்தகம் எல்லா நிலையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. புத்தகமே படிக்க விருப்பமில்லாதவர்கூட பள்ளியில் படிக்கிற காலத்தில் தன் பாட புத்தகங்களைப் பெற புத்தக நிலையங்கள் வந்தாக வேண்டும். ஒரு கலாச்சாரமே புத்தகங்களைச் சுற்றித்தான் உருவாக்கப்படுகிறது என்ற விழிப்புணர்வு வரவேண்டும். இன்றைய இளைஞர்கள் அவர்களின் பெரும்பாலான நேரத்தை தொலைக்காட்சி, வீடியோ கேம்ஸ் போன்றவற்றில் செலவிடுகிறார்கள். இந்த நிலை முற்றிலும் மாறவேண்டும்.

இதற்காக நீங்கள் எடுத்துள்ள முயற்சிகள் என்னென்ன?

இதை மக்கள் மத்தியிலும் குழந்தைகளிடமும் கொண்டு சேர்ப்பதற்காக நாங்கள் பல நிகழ்ச்சிகள் நடத்திவருகிறோம். ‘லாபதான்’ – இது புத்தகங்களைத் தாண்டி நகைச்சுவை உணர்வை அதிகரிக்கும்விதமாய் நடத்தப்படுகிறது. சனிக்கிழமைகள் தோறும் குழந்தைகளுக்காக நாடகப்போட்டி, மாறுவேடப் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் எங்கள் புத்தக நிலையத்தில் நடைபெறுகிறது. மாதமொறுமுறை புத்தகம் எழுதிய எழுத்தாளரை எங்கள் நிலையத்திற்கு நேரடியாக அழைத்துவந்து மக்களுடன் கலந்துரையாட வைக்கிறோம். இதுவரை 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

இந்தத் துறையில் நீங்கள் சந்தித்த தடைகள் என்ன. அதை எப்படி தகர்த்தீர்கள்?

பெரும்பாலான புத்தக நிலையங்களில் 100% புத்தகங்களே இருப்பதில்லை. 50% புத்தகங்கள் மற்றுமொரு 50% விளையாட்டுப் பொருட்கள்தான் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. என் லட்சியம் எந்த ஒரு தருணத்திலும் பொதுவான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் நிலையமாக இருக்கக்கூடாது. முழுக்க முழுக்க புத்தகங்கள் மட்டுமே இருக்கும் இடமாக இருக்கவேண்டும். இதற்குப் பொருளாதார ரீதியில் பல நெருக்கடிகள் வந்தன. ஆனால், என் லட்சியத்தின் மீதிருந்த தீறாத காதலாலும் என்னுடைய கடின உழைப்பாலும் வெற்றிபெற முடிந்தது.

நம்பிக்கை மற்றும் நாவல் துறைகளுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள்?

ராபின் சர்மாவின் “குட்நஸ் கைட்” மற்றும் ஷிவ் கேராவின் “யூ கேன் வின்” இவை அனைத்தும் தமிழிலும் கிடைக்கின்றன. நாவல் துறையில் “ஜெப்ரி ஆர்ச்சர்” புத்தகங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. பால் குஹியோவின் கதையுடன் கூடிய செய்தி சொல்லும் விதம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் எந்த வயதில் கற்பிக்க வேண்டும்?

5 வயது முதலே இந்தப் பழக்கத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். குழந்தைகளை நல்ல கதைகளைப் படிக்கச் சொல்லலாம். வரைபடங்களைப் பார்த்து கதைகள் சொல்லும் விதமாகவும் படிக்க வைக்கலாம். அவர்களை ஊக்கப்படுத்துவது பெற்றோர்கள் கடமை.

ஓர் மனிதன் வாழ்க்கையில் வெற்றிபெற எந்த வகையான புத்தகங்களை பரிந்துரைப்பீர்கள்?

சுயசரிதைதான் நம்பிக்கையை வளர்ப்பதற்கு சரியான புத்தகங்கள். இது ஒரு தலைவர் அல்லது மனிதனின் வெற்றிக் கதைகள் மற்றும் அவர் கடந்துவந்த சோதனைகள், நம்முள் ஒரு தாக்கத்தையும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தையும் அதிகப்படுத்தும். சுயஉதவி மற்றும் புதிய தலைமுறை புத்தகங்கள் ஒருவர் வாழ்வில் கடந்துவந்த இக்கட்டான சூழல்கள் அதை அவர்கள் கையாண்டவிதம் போன்றவை ஒரு ஒரு மனிதன் வாழ்வில் வெற்றிபெற மிகவும் உதவும்.

தீவிரமான வாசகர் ஒரு மாதத்தில் எத்தனை புத்தகம் படிக்கலாம். படிப்பதற்கு சரியான நேரம் எது?

எனக்குத் தெரிந்த நண்பர்கள் ஒரு மாதத்தில் 4 புத்தகம்கூட படிப்பதுண்டு. நான் மாதத்திற்கு குறைந்தது 2 புத்தகம் படிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளேன். புத்தகம் படிப்பது மன அழுத்தத்தைக் குறைப்பதற்குச் சரியான மருந்து. நம் வேலைப்பழு அல்லது தினசரி ஓட்டத்திற்கு மத்தியில் நம்மை உற்சாகப்படுத்தும் விதமாய் எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம்.

சமீபத்தில் படித்த புத்தகத்தில் நீங்கள் மிகவும் ரசித்த பகுதி எது?

சமீபத்தில் மரியா பூசோவின் ‘காட் ஃபாதர்’ படித்தேன். வாழ்க்கையை சரியான வழியில் வாழ்வதற்கான சாராம்ச வரிகள் என்னை மிகவும் ஈர்த்தன.

“What manner of men are we then, if we do not have our reason, we are all no better than beast in a jungle if that were the case. But, we have reason, we can reason with each other and we can reason with ourselves” …………… Speech by Donvito Corlene.

கனவு காண வேண்டும். கனவை நோக்கியே அனைவரும் நகர வேண்டும். புத்தக நிலையம் ஆரம்பிக்க வேண்டும் என்ற என் கனவு நிறைவேற 20 ஆண்டுகள் ஆனது. உலகப் புகழ்பெற்ற வாஷிங்டனின் ‘சிஷ்மித் சோனியன்’ நூலகத்தைப் போன்ற ஓர் பிரமாண்டமான நூலகத்தை உருவாக்க வேண்டும் என்பது என் கனவு…..

அதற்கான முதல்படி ‘ஆக்ஸ்போர்ட் புத்தக நிலையம்’. நிச்சயம் என் கனவை நிறைவேற்றுவேன் என்று நம்பிக்கை பொங்கக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *