வாழ்வின் நாடகம் வசீகரமானது

ஜிம்ரான் மறைந்தார்!

சுயமுன்னேற்ற உலகில், முன்னணி நிபுணராகத் திகழ்ந்த அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளரும் ஆன ஜிம்ரான் 2009 டிசம்பர் 5ம் தேதி தன் 79வது வயதில் மறைந்தார்.

கருத்தரங்குகள், புத்தகங்கள், சிடிக்கள், மின்னிதழ்கள் மூலம் சுயமுன்னேற்ற உலகில் 46 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்து, இலட்சக்கணக்கானவர்கள் வாழ்வில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர்.

“வாழ்வின் கடைசி சில ஆண்டுகள், அவர் கொடும் நோய் ஒன்றின் பிடியில் இருந்தார். ஆனாலும் அந்தக் காலங்களை அவர் கழித்த விதம் அலாதியானது. அடுத்த பிறவி குறித்த ஆராய்ச்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டு, சிலவற்றைக் கண்டறிந்து, மறுபிறவி பற்றிய எதிர்பார்ப்பால், மகிழ்ச்சியுடன் மரணத்தை எதிர்கொண்டார்” என்கிறார், அவரது 55 ஆண்டுகால நண்பர் குஹரால்ட் டைக்.

ஜிம்ரான், மிக சமீபத்தில் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவத்தை அவர் நினைவாக வெளியிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது, நமது நம்பிக்கை.

தரமான மனிதர்கள் ஈர்க்கும் தலைவராக நீங்கள் உருவாக வேண்டுமா? தரமான மனிதராய் உருவாகுங்கள், சில சிறப்பியல்புகளை, திறமைகளை, வாய்ப்புகளை மற்றவர்களுக்கு வழங்க வேண்டுமென்றால், அவை உங்களிடம் இருக்க வேண்டும். நிறுவன உரிமையாளராகவோ, நிர்வாகியாகவோ, பெற்றோராகவோ நீங்கள் இருக்கலாம். இந்தத் தலைமைப் பண்புதான் உங்களுக்குத் தரப்படுகிற மிகப்பெரிய சவால்.

உங்கள் திறமைகளையும் தகுதிகளையும் மெருகேற்றிக் கொள்வதே அவசியம். தலைசிறந்த தலைவர்கள் அத்தனைபேரும் தங்களைத் தயார்படுத்திக்கொண்டே இருப்பவர்கள்தான். இதோ…. அதற்கான சில வழிமுறைகள்.

வல்லமையோடு இருங்கள் கடுமையாய் இருக்காதீர்கள்:

வல்லமைக்கு கடுமை ஒரு மாற்று கூட இல்லை. வல்லவராய், சக்தி மிக்கவராய் விளங்குங்கள். அதற்காக, கடுமையானவராய் இருக்காதீர்கள்.

பரிவாய் இருங்கள் – பலவீனமாய் இருக்காதீர்கள்:

பரிவு ஒருவகை பலம். ஒருவரிடம் அவரைப்பற்றிய உண்மையைச் சொல்வதுகூட பரிவின் அடிப்படையில்தான். பலவீனம் சமரசம் செய்யும், பரிவுதான் ‘பளீர்’ என்று பேசும்.

துணிச்சலாய் இருங்கள் – பிடிவாதமாய் இருக்காதீர்கள்:

ஒவ்வொரு நாளையும் வெற்றி கொள்ள துணிச்சலே தேவை. முதல் அம்பைத் தொடுக்க, முதல் பிரச்சினைகளை முடிக்க, அச்சுறுத்தலின் முதல் அறிகுறியை அடையாளம் காண, துணிச்சல் அவசியம். பிடிவாதம் உண்மைகளைக் காண அனுமதிக்காது. துணிச்சல், உண்மைகளைத் தவறவிடவோ தவிர்க்கவோ செய்யாது.

பணிவாய் இருங்கள் – பயந்திருக்காதீர் கள்:

கோழைகள் தங்கள் வாழ்வில் எதையும் சாதித்ததில்லை. பலர் பயத்தை பணிவென்று நினைக்கிறார்கள். பணிவு தெய்வீகமானது. கோழைத்தனம் ஆபாசமானது. பணிவு ஓர் அருங்குணம். கோழைத்தனம் குணப்படுத்த வேண்டிய ஒரு நோய்.

பெருமிதமாய் இருங்கள் – அகங்காரமாய் இருக்காதீர்கள்:

வாழ்க்கை குறித்த பெருமிதமே வெற்றிகளைத் தருகிறது. அதுவே இலட்சியங்களைக் கட்டமைக்கிறது. அகங்காரமோ அறியாமையில் இருந்து வருவது. அறிவாளிகள் என்பதற்கு அடையாளம் பெருமித உணர்வுதானே தவிர அகங்காரம் அல்ல.

உயரிய தலைவராய் உருவாகவேண்டுமா? உண்மைகளையே சார்ந்திருங்கள். வாழ்க்கையைப் பலரும் வருத்தமானது என்று நினைக்கிறார்கள். இல்லை. வாழ்க்கையின் நாடகம் வசீகரமானது. தலைமைப் பண்புக்கான இந்த அடிப்படைக் கோட்பாடுகள், எல்லாச் சூழல்களிலும் எல்லோருக்கும் பொருந்தும். உங்கள் தனித்தன்மையை உங்களுக்கு உணர்த்தும்.

ஜிம்ரான் எழுதிய புகழ்பெற்ற புத்தகங்கள்

1. 7 Strategies for Wealth & Happiness
2. Leading and Inspired Life
3. How to live a Successful Li fe
4. The Seasons of Life

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *