ஆளப்பிறந்தவன் நீ

– தயாநிதி

நீங்கள் விரும்பிய வண்ணம் செயலாற்றுங்கள்அலுவலகம், தொழிற்சாலை, வணிக மையம் என பல்வேறு களங்களில் நம் அன்றாடப் பணிகளை நாம் செய்துகொண்டிருக்கிறோம். எல்லா இடங்களிலும் நாம் செயலாற்றுகிறோம் – இயங்குகிறோம். சரி.செயலாற்றும் நாம் – இயங்கும் நாம், நாம் விரும்பிய வண்ணம்தான் செயலாற்றுகிறோமா? அல்லது இயங்குகிறோமா?இந்தக் கேள்வியின் உட்பொருள் நமக்கு விளங்கிவிட்டால், நாம் நமது ஆளுமைத் திறனைப் புரிந்து கொள்வதும், வளர்த்துக் கொள்வதும் எளிதாகிவிடும்.

விருப்பத்தோடு செய்கிற எல்லாப் பணிகளும் சுகமாய் அமையும். விருப்பமின்றிக் ‘கடனே’ என்று செய்கிற எல்லாப் பணிகளும் சுமையாய் அமையும். எனவே நமது பணிகளை சுகமாய் மாற்றவும் அல்லது சுமையாய் மாற்றவும் நம் விருப்பம் ஒன்றே அளவுகோல்.ஆளுமைத்திறன் பெறுதல் என்பது பிறப்பிலிருந்தே வருவதன்று. அது வளர்த்துக் கொள்ளக் கூடிய ஒன்று.நமது ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்ள எங்கிருந்து தொடங்குவது?நாம் செய்தேயாக வேண்டியவை என்கிற பணிகளின் பட்டியலைத் தயார் செய்வோம். உதாரணமாய் நம் அலுவலக நடவடிக்கைகள், வாடிக்கையாளர் சந்திப்பு, உடன் பணிபுரிபவர்களுடனான நல்லுறவு, நமது நிறுவனத்திற்கு பொருட்களை வினியோகிப்பவர்களுடனான தொடர்பு, முதலாளியை சந்திக்கும் நேரம், அலுவலகப் பிரச்சனைகளைக் கையாளும் விதம், உணவு விடுதியில் உணவருந்தும் தருணம், கடைகளில் பொருட்களை வாங்கும் நேரம் எனப் பல்வேறு பணிகளைப் பட்டியலிடுவோம். இப்பணிகளில் ஈடுபடும்போது நமது செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிப்போம். அல்லது நமது செயல்பாடுகள் எவ்வாறெல்லாம் இருந்தால் நாம் மகிழ்ச்சியுடன் இருப்போம் என்பதைக் கண்டறிவோம்.நாம் தீர்மானித்த வண்ணமே நம் செயல்பாடுகள் அமையுமானால், நாம் ஆளுமைத் திறன் பெற்றவர்கள் என்றே நம்மைக் கருதி மகிழலாம்.

உங்கள் செயல்பாடுகள் முழு திருப்தி தரவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் கட்டாயம் மாறவேண்டும். உங்கள் மாற்றம் உங்கள் கைகளில் மட்டுமே. அவசியம் என்று நீங்கள் கருதினால், உங்கள் மாற்றம் பற்றி உங்கள் உற்ற நண்பருடன் அல்லது நெருங்கிய உறவினருடன் விவாதியுங்கள். ஆலோசனை பெறுங்கள்.
நீங்கள் அன்றாடம் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலிலிருந்து, உங்களை அச்சுறுத்தும் மூன்றினை மட்டும் தெரிவு செய்து கொள்ளுங்கள். அத்தருணங்களில் உங்கள் செயல்பாடு உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வண்ணம், எவ்வாறு உங்கள் ஆளுமைத்திறனைக் கையாளலாம் என முடிவு செய்து, அவ்வாறே செயல்படுங்கள். நாளின் முடிவில் நீங்கள் செயல்பட்ட விதத்தை அலசி ஆராயுங்கள். பலமுடன் செயல்பட்ட இடங்களை எண்ணி உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். பலவீனமாய் செயல்பட்ட கணங்களை எண்ணி நொந்துவிடாதீர்கள். மாறாக, அடுத்த முறை எவ்வாறு பலவீனங்களைத் தவிர்க்கலாம் என ஆராய்ந்து பாருங்கள்.எனது பலவீனங்களை நீக்கி, பலமுடன் செயல்படுவேன்” என உறுதி கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு உங்களை அச்சுறுத்தும் பின்வரும் மூன்று பணிகளை எடுத்துக் கொள்வோம்.(1) உங்கள் இருசக்கர வாகனத்தைப் பழுது பார்க்கும் இடத்தில் உங்கள் செயல்பாடு.
(2) பருவ வயதிலுள்ள உங்கள் மகனுடனான தொடர்பு.
(3) வாராந்திரப் பணியாளர் கூட்டத்தில் உங்கள் செயல்பாடு.
இம் மூன்று தருணங்களிலும் உங்கள் செயல்பாடு எவ்வாறு இருந்தது என ஆராயுங்கள். உங்கள் செயல்பாடு உங்களுக்கே மகிழ்ச்சி தரவில்லை என்றால், பின்வரும் உறுதிமொழியை நீங்களே எழுதி, தொடர்ந்து இவற்றை கவனத்தில் வைத்திருந்து, உங்கள் செயல்பாடுகளை மாற்ற முயலுங்கள்.
கடந்த காலங்களில் எனது இரு சக்கர வாகனத்தை பழுது பார்ப்பவர் முறையாக தனது பணியை செய்யவில்லை. அடுத்த முறை அவருடைய கவனக்குறைவைக் கட்டாயம் சுட்டிக் காட்ட வேண்டும்”பருவ வயதிலுள்ள என் மகனுடனான எனது உறவு-தொடர்பு சற்றே விரிசல் கண்டுள்ளது. பருவம் மாறும் இத்தருணம் அவனுள் மன மாற்றமும் நிகழும். எனவே, அவனுடன் பேசும் போது நான் மிகுந்த கவனமுடன், அக்கறையுடன் பேச வேண்டும்.

வாராந்திரப் பணியாளர் கூட்டத்தில், நான் இன்னும் உற்சாகத்துடன் கலந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நான் செயல்பட வேண்டும்
மேற்குறிப்பிட்ட மூன்று விஷயங்களும் என்னை மிகவும் பாதித்துள்ளன. இத்தருணங்களில் மிகுந்த ஆளுமையுடன் செயல்பட்டு, எனது குறைகளை நான் போக்கிக் கொள்வேன். அதுவே எனது வெற்றி. அவ்வெற்றியின் மூலமாய் நான் புதிய நம்பிக்கை பெறுவேன். அதன் மூலம், எனது மற்ற பணிகளும் சிறப்புடன் நிறைவேறும்” என்று உங்களுக்கு நீங்களே உறுதி கூறிக் கொள்ளுங்கள். நீங்கள் மாறப் போவது வெகுநிச்சயம்.

நீங்கள் பிறரால் மதிக்கப்பட வேண்டியவர் என்கிற உணர்வு, உங்களைப் பார்க்கும் போதே ஏற்படும் வண்ணம் கம்பீரமாய், கண்ணியமாய் நடந்து கொள்ளுங்கள். உங்கள் பார்வையில் கனிவும், சொற்களில் தெளிவும், தோற்றத்தில் மிடுக்கும், நடையில் – அங்க அசைவுகளில் கம்பீரமும் மிளிரும் வண்ணம் செயல்படுங்கள். இவை எல்லாவற்றையும் மெல்ல மெல்லக் கற்றுக்கொள்ள முடியும். உங்களையும், உங்கள் தோற்றத்தையும், செயல்பாடு களையும் நீங்களே நேசிக்கத் துவங்குங்கள். உங்களை நீங்களே மதிக்கத் துவங்குங்கள். பிறர் மதிப்பு தானே உங்களைத் தேடி வரும்.

எவ்வகைகளிலெல்லாம் உங்கள் ஆளுமைத் திறனை மேம்படுத்தலாம் என சிந்தித்து செயல் படுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள். தோள்களை அகல விரியுங்கள். தலை நிமிர்ந்து கம்பீரமாக எதிராளியின் கண்களைப் பார்த்து பேசுங்கள். புன்முறுவலோடு பதில் கொடுங்கள். மெதுவாகப் பேசுங்கள். பொறுமையாய் நிதானமோடு பேசுங்கள். பேசும் ஒவ்வொரு வார்த்தையின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து பேசுங்கள். தேவையெனில் பேசாதிருந்தும் பழகுங்கள்.

நாம் சொல்கிற அனைத்தும் பிரபலமாக வேண்டும் என்கிற அவசியமில்லை. நாம் பிரபலமாகாவிட்டாலும், உரிய முறையில் பிறரால் மதிக்கப்பட வேண்டும்-கண்ணியத்தோடு நடத்தப் பட வேண்டும். இதனை எப்போதும் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.பின்வரும் சொற்றொடர்களை மிகுந்த ஆளுமையுடன் அடிக்கடி உரக்கச் சொல்லிப் பழகுங்கள்.”உங்கள் பரிசிற்கு நன்றி. அதனை நான் மிகவும் மதிக்கிறேன். எனக்குப் பரிசளிக்கத் தோன்றிய உங்கள் நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன்”உங்கள் செயல்பாடு பற்றி நேர்மையான கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எனது கருத்தை சிரத்தையுடன் கேட்பீர்கள் என நிச்சயமாய் நம்புகிறேன்”இச்சமயத்தில் என்னால் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது பற்றி யோசித்து என் கருத்தைச் சொல்ல, எனக்கு சிறிது அவகாசம் தேவைப்படுகிறதுமேற்கூறிய சொற்றொடர்களை கண்ணாடி முன், காரில் செல்கிறபோது, நடைப் பயிற்சியின் போது என சமயம் கிடைக்கும்போதெல்லாம் தெளிவாய் சொல்லிப் பழகுங்கள். உங்கள் வார்த்தைகள் சூழ்நிலைக்கேற்ப பொருந்துவதாய் இருக்கட்டும். பிறர் கருத்தை மதிப்பதாகவும் இருக்கட்டும்.பிறர் கருத்தை மறுக்கும் சூழலிலும், எதிர்க்கருத்தை முன் வைக்கும் போதும், மிகுந்த கவனமுடன், பிறர் மனம் புண்படா வண்ணம், அதே சமயம் உங்கள் கருத்தை வெகு உறுதியாகத் தெரிவியுங்கள். எப்போதும் தரமான சொற்களையே தெரிந்து பேசுங்கள்.ஆளுமைத்திறன் என்பது நீங்கள் வென்று, பிறர் தோற்பதன்று. ‘வெற்றி இருவருக்கும்’ என்கிற சூழலை உருவாக்குவதே உண்மையான ஆளுமைத் திறன்.

பிறருடன் இணைந்து பணியாற்றும்போது…நமக்கு நாம் செயலாற்றும்போது, நாம் விரும்பிய வகையில் நமது ஆளுமைத்திறனைப் பயன்படுத்தலாம். நம் அளவில் அது பெரிய பாதிப்புகளை உண்டாக்காது. ஆனால், நம் உடன் பணிபுரிவோருடன், அல்லது ஒரு குழுவோடு இணைந்து செயலாற்றும் போது, நாம் நமது ஆளுமைத்திறனை மிகவும் கவனத்தோடு பிரயோகிக்க வேண்டும். எவர் மனமும் பாதிக்கப்படாவண்ணம், மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் செயல்பட வேண்டும். சற்றே பிசகினாலும், நாம் கர்வி என்றோ, அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்துபவர் என்றோ முத்திரை குத்தப்படுவோம்.

(-தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *