சேது சமுத்திரத் திட்டம்…

145ஆண்டுகளுக்குப் பிறகு சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுவதற்கான அரசாணை பிறந்திருக்கிறது. அந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதால் பொருளாதார நன்மை, வாழ்க்கைத் தரத்தில் மேம்பாடு, உலகளாவிய புதிய வாய்ப்புகள் போன்ற உயரிய நன்மைகள் மலர உள்ளன.

சமூகத்தில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் திட்டத்தை நிறைவேற்றியது யார் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் தலைவர்கள் உரிமை பாராட்டுவார்கள். ஆனால் மக்களின் நீண்ட காலக் கோரிக்கை ஒன்று வென்றிருக்கிறது. இதை உரியமுறையில் நடைமுறைப் படுத்துவதும் மீன் பிடி தொழிலில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட வழிவகுப்பதும், இந்த வெற்றிக்கு உரிமை பாராட்டும் தலைவர்களின் உடனடிக் கடமை.

இடைத் தேர்தலுக்குப் பின்னால்…

தமிழகத்தில் நடந்த இடைத் தேர்தல், தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கண்காணிப்பில் இதுவரையில்லாத பரபரப்புகளை அரங்கேற்றி முடித்திருக்கிறது. இந்த முறை, முறைகேடுகளுக்கு அதிக வாய்ப்பில்லை என்பது மக்களுக்குத் தெரிய வந்த உண்மை. சிலர், தேர்தல் முடிவுகளுக்குக் காரணம் வாக்காளர்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்ததுதான் என்று அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். ஆட்டைக் கடித்து… மாட்டைக் கடித்து… என்கிற பழமொழிதான் நம் நினைவுக்கு வருகிறது. நீதிமன்றத் தீர்ப்புகள் மட்டுமல்ல, வாக்குச் சாவடிகளின் தீர்ப்புகளும் புனிதமானவையே.!

Leave a Reply

Your email address will not be published.