ஆளப்பிறந்தவன் நீ

-தயாநிதி

இன்றைய நவீன உலகில், தனி மனிதராய் செயல்படுவதைக் காட்டிலும் குழுவாய், குழுவில் அங்கமாய் செயல்படுவதே பெரிய வெற்றிகளை ஈட்டித் தருகிறது.
நமது ஆளுமைத் திறனை நமது பணிகளில் செலுத்தும்போது, அதன் செயல்பாடும், விளைவும் நமது கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆனால், நமக்கான பணிகளைச் செய்யுமாறு மற்றவர்களிடம் நாம் நமது ஆளுமைத் திறனைக் காட்டும்பொழுது, நாம் தவறானவர்களாக, அதிகார ஆணவம் மிகுந்தவர்களாகப் பிறரால் புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எத்தகைய ஆளுமைத்திறனோடு பிறரை அணுகுகிறோம் என்பதைப் பொறுத்தே, நாம் பெறவேண்டியதைப் பெறுகிறோம் அல்லது பெறாமல் இழக்கிறோம்.

நமது வெற்றி அல்லது தோல்வி நமது ஆளுமைத்திறனின் அணுகுமுறையிலேயே இருக்கிறது. ஆளுமைத்திறனின்றி மிகமிகப் பணிவான கெஞ்சல் தொனியில் ஒன்றைச் செய்யுமாறு கேட்டால், எவரும் அதைப் பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
உங்கள் அலுவலகத்தில் உங்கள் வேலையில் சக ஊழியருடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அவரிடம் அதை எப்படி கேட்பீர்கள்?வெளிப்படையாய் ஒருவரிடம் உதவி கேட்க முடியாமல்போன ஒரு நிகழ்ச்சியை நினைவுபடுத்திப் பாருங்கள். நீங்கள் ஏன் அவருடைய உதவியை இழந்தீர்கள்? அவ்வாறு உதவி கேட்பது என்பது உங்களால் ஏன் இயலாது போகிறது? சிந்தியுங்கள்.

நீங்கள் உதவி கேட்கும் நபரைப் பொறுத்தே உங்கள் அணுகுமுறை மாறுபடுகிறது. உங்கள் முதலாளியிடம் ஒரு உதவியைக் கேட்பதற்கும், அதே உதவியை உங்கள் நண்பரிடம் கேட்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டல்லவா?பிறரிடம் ஒரு உதவி கேட்கும்போது நாம் ஏன் தயங்குகிறோம்? இதற்கான காரணங்கள் என்னென்ன?

* நான் உதவிகேட்டு அவர் மறுத்து விட்டால்… அது மிகவும் கேவலமாக இருக்கும்
* பிறரிடம் உதவி கேட்பதால் நான் மிகவும் தரம் தாழ்ந்தவனாய் உணர்கிறேன்
* பிறருடைய நேரத்தை எனக்காகப் பயன்படுத்துவதை நான் வெறுக்கிறேன்
* இது எனது இடமல்ல. எனவே இங்கு உதவி கேட்பது சரியாக இருக்காது
இவ்வாறு உணர்ந்தால், நீங்கள் கெஞ்சுகிறீர்கள்; பலவீனமாய் இருக்கிறீர்கள்; அரை மனதோடு அணுகுகிறீர்கள். இவை உண்மையெனில், உங்களுக்கான உதவி வெகு நிச்சயமாய் மறுக்கப்படும்.
* உங்களுக்கு பிறருடைய உதவி தேவை என்றால், அதை முறையாகக் கேளுங்கள் – நேரடியாகக் கேளுங்கள்.
* எந்த உதவியைக் கேட்கும் முன்பும், உதவி கேட்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு என்பதை உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதே சமயம், அதை மறுக்கும் உரிமையும் எதிராளிக்கு உண்டு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.* உதவி கேட்கும்போது, எதிராளியின் கண்களைப் பார்த்து ஆளுமைத்திறனோடு கேளுங்கள். உங்கள் தொனியில் எவ்விதத் தீவிரத்தன்மையும் இல்லாது கம்பீரமாய்க் கேளுங்கள்.
* மன்னிப்புடன் எதையும் துவங்காதீர்கள்.
உங்களிடம் இந்த உதவியைக் கேட்பதற்காக தயவு செய்து என்னை மன்னியுங்கள் என்று ஆரம்பிக்காதீர்கள்.
* உடனடியாக விஷயத்தைச் சொல்லுங்கள். சுற்றி வளைக்காமல் சுருக்கமாகப் பேசுங்கள்.
* கெஞ்சுகிற பாணியில் பேசி, மற்றவர்களிடம் ‘நல்லவராக’ முயலாதீர்கள்.
* நீங்கள் கேட்கும் உதவி வழக்கத்திற்கு மாறானதாய் இருந்தால், அதனைக் கேட்பதற்கான காரணத்தை எளிமையாக முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள்.
ஒருவேளை உங்களுடைய கோரிக்கை மறுக்கப்பட்டால் அதனை ஒருபோதும் உங்களுக்கு எதிரானதாய் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
* உங்கள் கோரிக்கை மறுக்கப்பட்டதற்கான சரியான காரணத்தைப் புரிந்துகொள்ளுங்கள். அத்தகைய புரிதல் எதிராளியின் மீதான எத்தகைய காழ்ப்புணர்வும் தோன்றாமல் உறவைச் சீரானதாய் வைத்திருக்கும்.
* விஷயங்களை அடுத்தவர் நிலையிலிருந்து புரிந்துகொள்வது, உங்கள் ஆளுமைத்திறனை மேலும் வளர்க்க உதவும்.
நீங்கள் செய்யக் கூடாதவை
* எதற்காகவும் கண்ணியக் குறைவாக, இழிவாக நடந்துகொள்ளாதீர்கள். வாதாடாதீர்கள். இத்தகையவர்கள் ஆளுமைத் திறனற்ற, பணிந்து போகும் பலவீனர்கள்.
* உங்கள் கோரிக்கை மறுக்கப்பட்டால், அதற்காக ஒருபோதும் கோபப்படாதீர்கள். கோபம் ஆளுமையன்று.
* உதவி மறுக்கப்படும்போது லேசான கோபம் தலைகாட்டுவது வெகு இயல்பு. அப்போது முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்ளாது ஒரு புன்முறுவலோடு எதிர்வினை செய்யுங்கள்.
* உதவி மறுக்கப்பட்டதற்கான காரணத்தை நிதானமாய் ஆராயுங்கள். மாற்றாய் என்ன செய்யலாம் என மௌனமாய் யோசியுங்கள்.
* நீங்கள் உதவிகோரி அணுகும் நபரை முன்கூட்டியே கணியுங்கள்.* நீங்கள் உதவி கோரிய நபர், உங்களை தேவையற்ற விவாதத்திற்கு இட்டுச் சென்றால், ‘உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். உங்கள் நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் நீங்கள் இவ்வுதவியைச் செய்வீர்களானால், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாய் இருக்கும்’ என நிதானமாய்க் கூறுங்கள்.
* நீங்கள் உதவிகோரிய நபர் தீவிர மனநிலையோடு மறுப்புத் தெரிவித்தால், எவ்வளவு நிதானமாய், அமைதியாய் இருக்க முடியுமோ அவ்வளவு நிதானமாய், அமைதியாய் இருங்கள். அச்சமயத்தில் இவ்வாறு கூறலாம்:
எனது கோரிக்கை உங்களைக் கோபமடையச் செய்யும் என நான் நினைக்கவில்லை

உங்களிடம் இவ்வுதவியைக் கோரியதில் தவறில்லை என நினைக்கிறேன். அவ்வுரிமை எனக்கு உண்டு என்பதாலேயே கேட்கிறேன்
எவரிடத்தில் உதவி கோரும் போதும், ஒரு கம்பீரத்தையும், கண்ணியத்தையும் பேணுங்கள். உங்களுக்கான உதவி பெரும்பாலும் கிடைக்க வாய்ப்புண்டு.
எந்த ஒரு நிகழ்ச்சியையும், நம் கோணத்திலிருந்து பார்க்காமல், எதிராளியின் கோணத்திலிருந்தும் பார்க்கக் கற்றுக்கொண்டு விட்டால், முழு ஆளுமைத் திறனில் பாதியை நாம் அடைந்துவிட்டதாகவே கருதலாம்.
உதாரணமாக உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைக்காரரிடம் நூறு ரூபாய்க்கு சில்லறை கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் இல்லை என்று கூறி விடுகிறார். இந்த மறுப்பை நம் கோணத்திலிருந்து மட்டும் பார்க்காமல், எதிராளியான கடைக்காரரின் கோணத்திலிருந்தும் பார்ப்பது எப்படி? இதனை யோசித்தால் பின்வரும் உண்மைகள் உங்களுக்கு புரியும்.
– உண்மையாகவே கடைக்காரரிடம் சில்லறை இல்லாதிருந்திருக்கலாம்.- வாடிக்கையாளர்கள் காத்திருக்க, கடைக்காரரும் தீவிரமாய் அவர்களுக்கான பொருட்களை தேடித்தேடி எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவருடைய சூழலை நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
– அவருடைய கடையில் அவரைத் தவிர வேறு எவருமில்லை.- மறுப்பைக்கூட ஒரு புன்முறுவலோடு தெரிவிக்கும் மனநிலையில் அவர் இல்லை.
ஆளுமைத்திறனுக்கும், அதிதீவிர மனப்போக்கிற்கும் வேறுபாடு உண்டு. அதிதீவிர மனப்போக்கு எவருடைய நன்மையையும் கருத்தில் கொள்ளாது, தனது நன்மையை மட்டுமே கருத்தில்கொண்டு, இயங்கும் ஒரு சுயநல மனநிலை. ஆனால் ஆளுமைத்திறன் என்பது பிறரது நன்மையையும் அக்கறையோடு கருத்தில் கொள்வது. ஆளுமைத்திறன் உள்ளவர், எதிராளியையும் தன்னைப்போலவே எல்லா வகையிலும் சமமானவர் என்றே கருதுவார்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *