உங்கள் குழந்தை காப்பியடிக்கிறதா? பொய் சொல்கிறதா?
காரணம் நீங்கள்தான்!
– கிருஷ்ண. வரதராஜன்
அந்தப் பையனின் கன்னம் வீங்கியிருந்தது. கன்னத்தில் பதிந்திருந்த விரல் அச்சுக்கள் தடிமன் தடிமனாய் என்னை உறுத்தின.
“பிராகரஸ் கார்டுல, அவனே அவங்க அப்பா கையெழுத்தைப் போட்டிருக்கான். இந்த வயசுலயே இப்படி ஒரு திருட்டுத்தனம் வந்திடுச்சு. இனிமே பொய் சொல்வான். நாளைக்கு வீட்டுக்குள்ளயே திருடுவான். ஒரு தப்பு செஞ்சவன் ஒரு தப்போடயா நிறுத்துவான்” என்று தன் குழந்தையை முறைத்தபடியே பேசினார் அவன் அம்மா.
அவன் செய்த தவறைக் கண்டறிந்தபோது வெகுண்டெழுந்தவர் என் முன்னால் கூட அடங்கவே இல்லை.
பெற்றோர்கள் எவ்வளவு தவறு செய்தாலும், “பிதாவே இவர்களை மன்னியும் இவர்கள் இன்னது செய்கிறோம் என்று அறியாதிருக்கிறார்கள்” என்று சொல்லி அவர்களுக்கு பாவ மன்னிப்பு வாங்கிக்கொடுத்து விடுவது என் வழக்கம். ஏனோ அன்று என்னால் அப்படி செய்ய முடியவில்லை.
அந்தக் குழந்தையை அணைத்துக்கொண்டு, அவன் “என்னுடன் இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு, அவன் அம்மாவை அன்று மாலை நாங்கள் ஏற்பாடு செய்திருந்த பெற்றோர்களுக்கான கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து அனுப்பி வைத்தேன்.
சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நடத்தும் பெற்றோர்களுக்கான நிகழ்ச்சிகளில் அவர்களின் தவறுகளைக் கூட நகைச்சுவையாக அவர்களே ரசிக்கும்படி சுட்டிக்காட்டுவதுதான் என் வழக்கம். சிக்கலான எவ்வளவோ கேள்விகள் கேட்கப்பட்டும்கூட ஒருமுறைகூட நான் மேடையில் கோபமாக பேசியதில்லை. கவுன்சிலிங்கின் போது தனிப்பட்ட முறையிலும் தங்கள் குழந்தைகளைப் பற்றி கோபமாக என்னிடம் புகார் சொன்னால்கூட சிரித்தபடியே பேசி பெற்றோர், குழந்தை இருவரின் தவறையும் உணர வைத்து அனுப்பியிருக்கிறேன்.
ஜெயா ப்ளஸ்ஸில் நடைபெற்ற நேரடி ஒளிபரப்பில் கூட உங்களுக்குக் கோபமே வராதா? என்று கேள்வி கேட்கிற அளவிற்கு பொறுமையாகத்தான் பல வருடங்களாக நடந்து வருகிறேன். ஆனால் அன்று கோபமாய்ப் பேசினேன்.
காரணம் இங்கே எல்லோரும் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், ஒரு சிலர்தான் வளர்க்கிறார்கள். குழந்தையை பெற்றுக்கொள்ள ஒரு தகுதியும் தேவையில்லை. நீங்கள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தால் போதும். ஆனால், நீங்கள் குழந்தையை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு சில தகுதிகள் வேண்டும். நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள், “நீங்கள் பெற்றோரா? வளர்ப்போரா?”
90 சதவீத பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு குறித்து ஒன்றுமே தெரியவில்லை. தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை.
ரோட்டோரங்களில் கலர் கோழிக் குஞ்சுகள் விற்பதை சிறு வயதில் பார்த்திருக்கிறேன். 50 பைசாவிற்குத் தருவார்கள். ஆசையாலும், 50 பைசா எளிதாகக் கிடைக்கும் என்பதாலும் எல்லா குழந்தைகளும் வாங்கும். ஆனால் அதை சரியாக பராமரிக்கத் தெரியாமல், வாங்கிய கோழிக் குஞ்சுகள் ஒவ்வொன்றாய் இறக்கும். நாய் அல்லது பூனை கடித்து இறந்தவை, குழந்தைகள் ஸ்கூலுக்குப் போன நேரத்தில் உணவிட மறந்து இறந்தவை, காரணமே தெரியாமல் இறந்தவை என சில நாட்களிலேயே அனைத்தும் இறந்துவிடும்.
இன்று பலர் குழந்தைகள் வளர்ப்பது கூட இப்படித்தான் ஆகிவிட்டது.
திருமணத்திற்கு முன் சமைக்கத் தெரியுமா? சம்பாதிக்கத் தெரியுமா? என்று தகுதி பார்க்கிற மாதிரி ஒரு உயிரை வளர்த்தெடுக்கிற ஆற்றல் இருக்கிறதா? அதற்கான தகுதி இருக்கிறதா? என்றெல்லாம் குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு முன் பார்ப்பதில்லை.
பொறுமை, நிதானம், இதெல்லாம் அருகிவரும் பழக்கமாகிவிட்டது. குழந்தைகள் தவறு செய்தால் திட்டுவதும் அடிப்பதும் மட்டுமே பெற்றோர்களுக்கு தெரிந்த தீர்வாக இருக்கிறது.
கொஞ்சம் யோசியுங்கள். உங்கள் வீட்டில் டிவி பழுதடைந்து விட்டது என்றால் உங்களால் சரி செய்ய முடியுமா? முடியாது. காரணம் பழுதுநீக்கும் முறைகள் தெரியாது.
டிவி சரிசெய்ய முடியாததும் அல்ல. உங்களால் அதன் மெக்கானிசத்தை கற்றுக்கொள்ள முடியாது என்பதும் கிடையாது. ஆனால் ஷோரூமில் கொடுத்து சரி செய்து கொள்கிறீர்கள். காரணம் நேரம் இல்லை. டிவி விஷயத்தில் அப்படி இருக்கலாம். குழந்தைகள் விஷயத்தில் அப்படி இருக்கலாமா?
உங்கள் குழந்தை தவறு செய்தால் ஒருநாளும் அவன் திருந்தமாட்டான் என்று அர்த்தம் கிடையாது. உங்களுக்கு திருத்தும் மெக்கானிசம் தெரியாது அவ்வளவுதான். தெரிந்துகொள்ள தேவையான முயற்சியும் எடுக்கவில்லை.
சரியாகத் தெரியாத டிவியை ரெண்டு தட்டுத்தட்டி சரி செய்யும் பழைய குருட்டு மெக்கானிசதத்தைதான் குழந்தைகள் விஷயத்திலும் பலரும் கடைபிடிக்கிறார்கள்.
உங்கள் குழந்தை காப்பியடிக்கிறது அல்லது பிராகரஸ் கார்டில் கையெழுத்துப் போடுகிறது என்றால் காரணம் நீங்கள்தான்.
முதலில், ஏன் காப்பியடிக்கிறார்கள்? என்று யோசித்துப் பாருங்கள்.
பெற்றோர் மேல் உள்ள பயம்தான் காப்பியடிக்கவும், பொய் சொல்லவும், ஏன், பிராகரஸ் ரிப்போர்டில் கையெழுத்துப் போடவும் காரணமாகிறது.
தன்னால் முடியாது என்று முடிவெடுக்கிறபோதுதான் எப்படியாவது மதிப்பெண் பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் காப்பியடிப்பது, புத்தகத்தை கிழித்து பிட் எடுத்துக்கொண்டு போவது போன்ற தேர்வறை குற்றங்களில் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள்.
‘ஒன்றை அடைவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை எப்படி அடைகிறோம் என்பதும்’, என்று நம் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தராததன் விளைவுதான் இத்தவறுகள்.
மதிப்பெண் குறைவதால் ஏற்படும் அவமானத்தைவிட காப்பியடிப்பது ஒன்றும் பெரிய அவமானம் இல்லை என்று நினைப்பதால்தானே நம் குழந்தைகள் காப்பியடிக்கிறார்கள்.
பிராகரஸ் ரிப்போட்டில் உங்கள் கையெழுத்தை அவர்கள் போடுவது தவறுதான். ஆனால், ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள். உங்களிடம் காட்ட முடியாமல் இரண்டு நாளாக ஸ்கூல் பேக்கில் வைத்துக்கொண்டு அவர்கள் எப்படியெல்லாம் தவித்துப்போய் இருப்பார்கள். எந்த அளவிற்கு பயமும் குற்றவுணர்ச்சியும் அடைந்திருப்பார்கள். கையெழுத்துப் போடும்போது எந்த அளவிற்கு உள்ளூர நடுங்கியிருப்பார்கள். உங்கள் மேல் இத்தனை பயத்தை ஏற்படுத்தியது, உங்கள் தவறு என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
பெற்றோர் மேல் இருக்க வேண்டியது மரியாதைதானே தவிர பயம் அல்ல. உங்களைப் பார்த்து உங்கள் குழந்தைகள் பயப்படுகிறது, பொய்சொல்கிறது என்றால் ஒரு பெற்றோராக நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம். உண்மை சொல்கிற அளவிற்கு நீங்கள் நடந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.
ஸ்கூல் டீச்சர் கூப்பிட்டுச் சொன்னது, அவமானம் அல்ல, குழந்தைகளை இந்த நிலையில் நாம் வைத்திருக்கிறோம் என்பதுதான் அவமானம். உங்கள் குழந்தைகள் தேர்வில் வெற்றியடைவதை விடவும் முக்கியம், நீங்கள் பெற்றோராய் தோற்றுப் போகாமலிருப்பது.
ஒரு கம்ப்யூட்டர் வாங்கினால் அதை எப்படிப் பயன்படுத்துவது, பராமரிப்பது என்று பயிற்சி எடுத்துக்கொள்கிறோம். ஒரு செல்போன் வாங்கினால் அதன் செயல்பாடுகள் பற்றி தேடித்தேடி தெரிந்துகொள்கிறோம். ஆனால், குழந்தைகள் மனவியல் பற்றி மட்டும் நாம் தெரிந்துகொள்ள அக்கறை காட்டுவதில்லை.
கணவன் மனைவிக்குள் சிறு சச்சரவு வந்து ஒருவரை ஒருவர் கோபித்துக்கொண்டால் அன்றைய பணிகளை உற்சாகமாக செய்ய முடிகிறதா? இல்லையே. சோர்வு அதிகரித்து எந்த வேலையும் செய்யப் பிடிப்பதில்லை. நாம் திட்டினாலும் அடித்தாலும் நம் குழந்தைகளுக்கும் இதே நிலைதான்.
ஒவ்வொரு மாதமும் என்ன மார்க்? என்று கேட்டு திட்டுவதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் இன்று என்ன கற்றுக்கொண்டாய்? என்று கேட்டு விளக்கச் சொல்லியிருந்தால் மதிப்பெண்ணிற்காக மண்டை காயாமல் கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தியிருப்பார்கள். கற்றுக்கொள்வதை நீங்கள் அக்கறையோடு கேட்பதைப் பார்த்து உற்சாகம் அடைந்திருப்பார்கள். நிச்சயம் மதிப்பெண்ணிலும் மேம்பட்டிருப்பார்கள்.
ஒருவர் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் உற்சாகப்படுத்த வேண்டுமா? அல்லது திட்டவோ அடிக்கவோ வேண்டுமா? என்று யோசித்துப்பாருங்கள்.
பெற்றோர் என்ற வார்த்தைக்கு குழந்தையின் பெற்றோர் என்று மட்டும் அர்த்தம் அல்ல வளர்ப்போர் என்றும் அர்த்தம். குழந்தைகளை வளர்க்கத் தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்வதே நீங்கள் உடனடியாக பெற்றாக வேண்டிய வெற்றி.
Leave a Reply