மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் !!

வள்ளுவர் அறக்கட்டளை க. செங்குட்டுவன் நேர்காணல்

வள்ளுவர் ஹோட்டல்ஸ், வள்ளுவர் நூலகம், வள்ளுவர் அறக்கட்டளை, வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி என்று எல்லாத் திசைகளிலும் திருவள்ளுவருக்குப் பெருமை சேர்த்து வரும் கரூர் க.செங்குட்டுவன், பல புதுமைகளின் பிறப்பிடமாய்த் திகழுகிறார். அவருடன் உரையாடிய போது…

உங்கள் தொழில்துறை ஈடுபாடு எந்த வயதில் தொடங்கியது?

பரமத்தி வேலூர்தான் எங்கள் சொந்த ஊர். என் தந்தை திரு.க.கருப்பையா அவர்களுக்கு வள்ளுவர் மேல் எல்லையில்லாத ஈடுபாடு. அதன் விளைவுதான், அவர் நிறுவிய வள்ளுவர் எலக்ட்ரிகல்ஸ். பத்து வயது மாணவனாகப் பள்ளிக்குச் செல்லும்போதே, கடையில் சிறிது நேரம் இருந்து செயல்பாடுகளை கவனிப்பேன். நாலரை மணிக்குப் பள்ளி விட்டால் 4.45 மணிக்குக் கடையில் இருப்பேன். வள்ளுவர் வகுத்த குறள் நெறி மீது எங்கள் தந்தையாருக்கும் எங்கள் குடும்பத்தினருக் கும் எல்லையில்லாத ஈடுபாடு உண்டு. நேர்மை, உதவும் குணம் ஆகியவை தொழிலில் அவசியம் என்று கருதியதால், பல்லாண்டுகளாக வள்ளுவர் பைனான்ஸ் லிமிடெட், நம்பகமான நிதி நிறுவனமாக நடத்தி வருகிறோம்.பல தொழிலதிபர்கள் உருவாக இந்த நிதி நிறுவனம் காரணமாக இருந்திருக்கிறது. 99.9% வாராக் கடன்களே இல்லை என்னும் அளவு நெறிமுறையோடு நடக்கிறது.

உணவகம் தொடங்கியது எப்படி?

உணவகத் துறையில் எங்களுக்கு ஏதும் முன் அனுபவம் கிடையாது. நல்ல உணவை, சுகாதாரமாகவும் சுவையாகவும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு தொடங்கப்பட்டதுதான் வள்ளுவர் ஹோட்டல்ஸ். பேருந்து நிலையம் அருகில், பலரும் வந்து போகக்கூடிய பகுதியில் சேவைக்கு முதலிடம் கொடுத்து இந்த உணவகம் தொடங்கினோம். அசைவம் கிடையாது. மது அருந்த முடியாது. இந்தக் கொள்கைகளில் உறுதியாக இருக்கிறோம்.அதிலிருந்து கல்வித் துறையிலும் அழுத்தமாகக் காலூன்றியிருக்கிறீர்களே?உணவகத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில் 2002ல், வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி தொடங்கினோம். அதேபோல 2004ல் கலை அறிவியல் கல்லூரியும் தொடங்கியிருக்கிறோம்.

இன்று கேட்டரிங் கல்லூரியில் ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், பிரஞ்சு உள்ளிட்ட மொழிகள் பயில மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்தியர்களின் மிகப்பெரிய வளம், மனித வளம். இந்தியர்களின் மிகச்சிறந்த கலாச்சாரம், விருந்தோம்பல். இந்த இரண்டும் இணைந்த கேட்டரிங் கல்விக்கு இன்று உலகளாவிய வரவேற்பு இருக்கிறது.

இப்போதே தாஜ் போன்ற நட்சத்திர உணவகங்கள் சார்பாக எங்கள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தப்படுகிறது.குறுகிய காலத்தில் இவ்வளவு விரிவாக்கங்கள் செய்திருக்கிறீர்களே, எப்படி சமாளிக்கிறீர்கள்?

ஒரு நாளுக்கு 18 மணி நேரம் வரை உழைக்கிறோம். என் மனைவியும் துணை புரிகிறார்கள். என் தந்தை எனக்குச் சொன்னது எந்த தொழில் செய்தாலும் கடன் வாங்காமல் செய்” என்பதுதான். எந்தத் தொழிலிலும் முயற்சியும் பயிற்சியும் அவசியம். தொழில் மீது பயம் கலந்த ஈடுபாடு இருக்க வேண்டும். சில சமயங்களில் தோல்வி ஏற்படும். அந்தத் தோல்வி ஏன் ஏற்பட்டது என்று சிந்தித்து அதனை சீர் செய்யும்போது நன்மை வரும். தொடர்ந்து கண்காணிப்பு இருக்க வேண்டும்.இவையெல்லாம் இருக்குமேயானால், தைரியமாக விரிவாக்கங்கள் செய்து வெற்றிகரமாகவும் தொழில் செய்யலாம்.

உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அலுவலர்கள் ஈடுகொடுப்பது எப்படி?

நம்மிடம் பணிபுரிபவர்களை நாம் முதலில் நம்ப வேண்டும். அன்பு, அரவணைப்பு, கண்டிப்பு அனைத்தும் சரியான கலவையில் சேர்ந்திருப்பது தான் நிர்வாகம். தலைமை முன்னுதாரணமாக இருந்தால்தான் அலுவலர்கள் பின்பற்றுவார்கள். அலுவலர்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது. இந்த வசதிகள் வெளியே போனால் கிடைக்காது என்பது புரிந்துவிட்டால், தங்கள் பணியில் கூடுதல் நேர்மையோடும் ஈடுபாட்டோடும் அலுவலர்களும் பணியாளர்களும் செயல்படுவார்கள்.

சேவைத்துறையில் செயல்படுபவர்களுக்கு வேண்டிய பண்புகள் என்று எவற்றை எண்ணுகிறீர்கள்?

சேவையில் எத்தனையோ போட்டிகள் இருக்கும். ஆனால், நம்முடைய தரம், கனிவு, தொழிலில் இருக்கிற கோட்பாடு ஆகியவற்றில் உறுதியாக இருக்க வேண்டும். கால்பந்தாட்டத்தில் வீரர்கள் மத்தியில் இருக்கும் ஒருங்கிணைப்புப் போல ஒத்த சிந்தனையும் புரிந்துகொள்ளும் பாங்கும் இருந்தால் சேவை துறைகளில் வெற்றி நிச்சயம்.
உங்கள் கல்லூரியில் மாணவர்களுக்குத் தரப்படும் வாய்ப்புகள் பற்றி?கல்லூரிப் பருவம்தான் ஓர் இளைஞனின் வாழ்வில் முக்கியமான பருவம். அதனை வீண் கேளிக்கைகளில் ஈடுபடுத்தக்கூடிய சூழ்நிலைதான் பெரும்பாலும் உள்ளது. ஆனால், முன்னேறுகிற ஆர்வமும், வாய்ப்புகளைத் தேடுகிற வேகமும் இந்தப் பருவத்திலேயே வரவேண்டும்.

எங்கள் மாணவர்கள் மத்தியில் பேசுகிற போது கூட கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, பெற்றோரிடம் ஒரு பைசா கூட வாங்காமல் சொந்தக் காலில் நின்று பழக வேண்டும் என்று நான் அடிக்கடிக் கூறுவதுண்டு. எங்கள் கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரை, முதலாமாண்டு மாணவர்களுக்குப் பகுதி நேர வேலையும் தருகிறோம்.
தாட்கோவுடன் இணைந்து 30 பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வேலை வாய்ப்புக்கான ஏற்பாடும் செய்யப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை எண் 7ல், மரங்கள் நடும் பொறுப்பு கேட்டரிங் கல்லூரியில் ஒவ்வொரு மாணவனுக்கும் மாணவிக்கும் தரப்படுகிறது. அவர்கள் அதனை தினமும் நீரூற்றி சரியாகப் பராமரித்து வந்தால் அதற்கேற்ப கல்வியாண்டின் இறுதியில் மதிப்பெண்கள் அளித்து அவர்களை ஊக்குவிக்கிறோம்.

இந்தத் திட்டத்தை, இந்தியா முழுவதிலுமுள்ள 6-12 வகுப்புகள் வரையிலான மாணவ மாணவியருக்கு அறிமுகம் செய்தால் இந்தியா பசுமை செழிக்கும் நாடாகத் திகழும். அதற்கான விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு அளித்திருக்கிறோம்.
உங்கள் கல்வி நிறுவனங்களின் தனித்தன்மை என்று எதனை சொல்வீர்கள்?

காந்தியடிகள் கல்வி கற்கிறபோதே உடல் உழைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுவதைப் பெரிதும் வலியுறுத்துகிறார். மனிதன் என்பவன் உடல், அறிவு, ஆன்மா மூன்றின் ஐக்கியமாய் விளங்குவதால், அந்த மூன்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுவதே கல்வியின் நோக்கம் என்றார். ஆனால் உடலுழைப்பின் மேன்மையை உணர விரும்பாத நாம், அறிவு சார்ந்த வளர்ச்சியை மட்டுமே கல்வியில் மையப்படுத்தினோம். அதன் விளைவே இன்று நம் முன்னே சவாலாக நிற்கும் வன்முறையும், பயங்கரவாதமும், வேலையில்லாத் திண்டாட்டமும். இவற்றுக்கு ஒரே தீர்வு நாம் அனைவருமே உடலுழைப்பை அடிப்படையாகக் கொண்டு வாழ்வதே ஒரு குறிக்கோளாகவாவது கொள்வதும், அதைச் சார்ந்து வாழும் இளைஞருக்குள்ளே ஏற்கெனவே ஒளிந்திருக்கும் கல்வியை இனங் காண வைக்க உதவுவதுமே ஆகும்.எனவே காலையில் படிப்பு மாலையில் ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பு என்கிறதிட்டத்தை எங்கள் கல்வி நிறுவனங்களில் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளோம். கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் எங்கள் உணவகங்களிலேயே பகுதி நேர வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். அதே போல எங்கள் அறிவியல் மற்றும் மேலாண்மை மாணவர்களுக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கி வருகிறோம். கரூரிலுள்ள முக்கிய ஏற்றுமதி நிறுவனங்களுடன் கலந்து பேசி மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்குவது எங்கள் திட்டம். இதன் மூலம் படிக்கிறபருவத்திலேயே மாணவர்களுக்கு அனுபவத் தெளிவும் அதன் மூலம் எதிர்காலம் குறித்த அசைக்க முடியாத நம்பிக்கையும் ஏற்படும்.

இதன் பயன் என்னவாக இருக்குமென்று கருதுகிறீர்கள்?

பள்ளி மாணவர்கள், மரம் வளர்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதோடு இத்திட்டம் நின்று விடக்கூடாது. கல்லூரிகளில், விளையாட்டு வீரர்களுக்கு, முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு தரப்படுகிறது. அதுபோல, தேசத்தின் பசுமையைக் காக்க முற்படும் மாணவ மாணவியருக்கென்று கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் இட ஒதுக்கீடு தர வேண்டும்.

பொதுமக்களுக்காக இலவச நூலகம் ஒன்றும் நடத்துகிறீர்களே?

2000 சதுர அடி பரப்பளவில் வள்ளுவர் நூலகம் என்ற பெயரில் தொடங்கியுள்ளோம். 3000த்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. படிக்கும் பழக்கம்தான் ஒரு சமுதாயத்தின் உயிர்த்துடிப்பு. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற நாங்கள் எடுத்திருக்கும் முயற்சியே வள்ளுவர் நூலகம். கல்வி, விருந்தோம்பல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தரம்மிக்க தனிமனிதர்களை உருவாக்குவதே எங்கள் இலட்சியம்.

உங்களை செதுக்கிய சிந்தனைகள் – சிந்தனையாளர்கள் குறித்து?

எண்ணங்கள் தான் வாழ்க்கை. நேற்றைய எண்ணங்கள் இன்றைய வாழ்க்கையாகிறது. இன்றைய எண்ணங்கள் நாளைய வாழ்க்கையாகும். எனவே நல்ல எண்ணங்கள்தான் சிறந்த வாழ்க்கையாகிறது. சிந்தனையாளர்களில் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களே என்னைக் கவர்ந்தவராவார்.

தொழிலில் ஏற்படும் பொருளாதாரத் தோல்விகள் எந்த அளவு பாதிக்கும்? எப்படி மீண்டு வரலாம்?

தோல்வி ஏற்படும் போது தோல்விக்கான காரணங்களை நன்கு ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். நமது அடுத்த செயல்பாட்டில் அந்த குறைபாடுகளை கவனமாக தவிர்த்து விட்டு வெற்றியை அடைய முயற்சிக்க வேண்டும்.

முன்பின் அறிமுகமில்லாத துறையில் இறங்கும் போது நம்மை எப்படித் தயார்ப் படுத்திக் கொள்ளலாம்?

நாம் தேர்ந்தெடுக்கின்றதுறையில் 100 சதவீதம் கவனமாக இருக்க வேண்டும். எடுத்து வைக்கின்றஒவ்வொரு அடியும் குழந்தை நடைபயில ஆரம்பிப்பது போல மெதுவாகவும், கவனமாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு கவனமுடன் செயல்படும் போது படிப்படியாக வளர்ந்து நிச்சயம் முன்னேற்றத்தை அடைய முடியும்.ஒரு மனிதன் பொதுவாக தன் கனவுகளில் எத்தனை சதவீதம் எட்டுகிறான் என்று கருதுகிறீர்கள்?ஒவ்வொருவரின் முயற்சியையும், செயல்பாட்டையும் பொறுத்தே அவர்கள் காணுகின்றகனவுகளின் பலன் அமையும். அதிகபட்சமாக முயற்சி செய்து 100% கனவுகளையும் எட்ட முயற்சி செய்ய வேண்டும்.

பல கல்வியாளர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள். அத்தகைய பழக்கத்தில் மறக்க முடியாத சம்பவங்கள் ஏதும்?

பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. லேனா தமிழ்வாணன் அவர்களின் நேர உணர்வு எனக்கு நிரம்பப்பிடிக்கும். அவர் ஒருமுறைஎங்கள் கல்லூரி மாணவர்களுக்க நேரந்தவறாமை பற்றிப் பேசியதிலிருந்து மாணவர்கள் நேரஉணர்வில் மிகவும் அக்கறையும் செயல்பட்டு வருகின்றனர். நேரத்துக்கு வந்து நேரத்துக்குப் பேசி என மிகவும் திட்டமிட்டு வாழ்ந்து வரும் திரு. லேனா அவர்களுடனான நட்பை மறக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *