ஆளப்பிறந்தவன் நீ

– தயாநிதி

பிறரையும், அவரது நலத்தையும் கருத்தில்கொண்டு அணுகும் முறையால், பிறருடன் எப்போதும் நல்லுறவு ஏற்படுகிறது. நல்ல உறவுகள் ஒருநாளும் நெருடல் தருவதில்லை.

ஒரே அலுவலகத்தில் பணிபுரிவோர், முதலாளி – தொழிலாளி, ஆசிரியர் – மாணவர், நண்பர்கள் என எத்தகைய உறவு நிலையிலும், அவ்வுறவு நல்ல உறவாய் அமையுமானால், பரஸ்பரம் ஒருவர் கோரிக்கையை மற்றவர் புரிந்து கொள்வது என்பது மிக நியாயமானதாய் இருக்கும்.

எந்த அளவுக்குப் பிறரை நாம் மதிக்கிறோமோ அந்த அளவிற்கு நம் காரியம் வெற்றியடையும். மற்றவர்களுடைய நன்மையையும் மனதில் கொண்டு செயலாற்றும்போது, தீவிர மனப்போக்குடைய சூழல்களும் மென்மையாய் கனிந்துவிடும். பிறரது சந்தேகங்களும், ஆதங்கங்களும் புரிகிறபோது, ஒரு பிரச்சனையில் பாதி, அப்புரிதலிலேயே தீர்ந்துவிடுகிறது. இதனால், தொடர்புடைய இருவருக்குமே நன்மை ஏற்படுகிறது.
பிறரது நன்மையைக் கருத்தில் கொள்வது என்பது, பிறருக்கு காரணமற்ற தயவுகாட்டுவதாய் ஆகாது. அது அனுதாபத்தின் வெளிப்பாடன்று. ஆளுமைத்திறனைக் கற்க விரும்புவோர், இந்த நுட்பமான வேறுபாட்டை அறிந்து செயல்படுவது மிக நல்லது.

நீங்கள் எவ்வளவு ஆளுமைத் திறனுடன் செயல்படக் கூடியவராயினும், சில நேரங்களில் எதிர்மறை விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டியதாய் அமைந்துவிடுகிறது. அத்தகைய சூழல்களில், சிந்தித்துச் செயல்படுங்கள்.
எதிராளி ஒரு விஷயத்தில் தீவிர மனநிலையை அடைந்துவிட்டால், அவர் ஏன் அவ்வாறு மாறினார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டதாய் அவரிடம் அமைதியாய், நிதானமாய் நேரடியாய் கூறுங்கள். “நான் கூறிய அந்த வார்த்தை உங்களைக் காயப்படுத்திவிட்டது என எண்ணுகிறேன்” என்பது போன்ற நேரடியான சொற்றொடர்கள் நிலையை எளிமையாக்கும்.

பழிவாங்க எண்ணாதீர்கள். உங்கள் பக்க நியாயத்திற்காக உறுதியோடு வாதாடுங்கள். சட்டென முகத்தில் அறைவது போன்ற சொற்களைத் தவிர்த்து, கனிந்த சொற்களைத் தெரிந்தெடுத்துப் பேசுங்கள்.
ஆளுமைத்திறன் கொண்ட வாடிக்கையாளரா நீங்கள்?
இப்போது உங்களை ஒரு வாடிக்கையாளராய் கருதிக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் ஒரு பொருளை வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். நிச்சயம் அது உங்கள் இடமில்லை. கடைக்காரர் உங்களிடம் சரியான அணுகுமுறையில் நடந்து கொள்ளவில்லை. வாடிக்கையாளருக்குத் தரவேண்டிய உரிய மரியாதையைத் தரவில்லை. அவரது நடவடிக்கை உங்களைச் சிறுமைப்படுத்துவதாய் கூட இருக்கிறது.
வாடிக்கையாளராய் உங்கள் உரிமையை உணர்ந்து கொண்டு, உங்கள் உரிமைக்காகப் போராடத் தயாரா நீங்கள்?

அல்லது ஒரு உணவு விடுதிக்குச் செல்கிறீர்கள். அவ்விடுதியின் உணவு தரமானதாய் இல்லை. அல்லது அவ்விடுதியின் பணியாளரின் சேவை உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. விடுதியின் உரிமையாளரிடம் இதுபற்றி எப்படி முறையிடுவீர்கள்?

உங்கள் மனக்குறையை மூன்று வழிகளில் வெளிப்படுத்தலாம்.

1. தீவிர மனப்போக்குடன் பணியாளரிடம் உங்கள் பணத்தைத் திரும்பக் கேட்கலாம்.
2. உங்கள் அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில் “ரொம்ப அருமை உங்கள் உணவு விடுதியின் உணவும், சேவையும்” என வேதனையுடன் கூறலாம்.
3. மிகுந்த ஆளுமைத்திறனுடன், நீங்கள் நினைப்பதை உறுதியாய், அதேநேரம் நிதானமாய் பின்வருமாறு கூறலாம். “இதைச் சொல்வதற்காக நான் வருந்துகிறேன். நீங்கள் கொடுத்த உணவு சுவையில்லாததாய், தரம் குறைந்ததாய் உள்ளது. தயவுசெய்து இதை எடுத்துக் கொண்டு, நன்றாக சமைக்கப்பட்ட ஏதாவது புதிய, நல்ல உணவைத் தரமுடியுமா?”

ஒரு வாடிக்கையாளராய் உங்களுக்குரிய சட்ட உரிமைகளை நீங்கள் உணர்ந்திருப்பது மிகவும் அவசியம். அது பல சிக்கல்களைத் தீர்த்து வைக்கும்.
பின்வருவனவற்றை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் மிகச்சரியாக, கண்ணியமாக நடத்தப்பட வேண்டியவர். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு, உரிய மதிப்புடைய பொருளைப் பெறுவதற்கு உங்களுக்கு 100% உரிமை உண்டு. தரமற்ற பொருளையோ, சேவையையோ நீங்கள் பெற நேரும்பொழுது, உங்கள் பணத்தைத் திரும்பக் கேட்கவோ, மாற்றுப்பொருளைத் தருமாறு வலியுறுத்தவோ அல்லது வேறு வகையிலான நஷ்டஈட்டைக் கோரவோ, உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.
நீங்கள் உங்கள் உரிமைகளை அறிந்திருக்கும் அதேநேரம், தொடர்புடைய நிறுவனத்தின் சட்டவிதிகளையும் அறிந்திருத்தல் மிக நல்லது.

ஆளுமைத்திறனுள்ள பேச்சு
நீங்கள் மிகச் சரியாய் பேசினால் மட்டும் போதாது. உங்கள் தொனியில் ஆளுமையின் கம்பீரமும், நேர்மையின் பிரதிபலிப்பும் மிளிர வேண்டும். உங்கள் எதிராளி எப்படிப்பட்டவர் என்பதைப் பொறுத்தே உங்கள் பதில்கள் அமைய வேண்டும். அதற்கு எதிராளியை நன்கு அறிதல் வேண்டும். எதிராளியின் தொனி எத்தகையது என்பதைத் துல்லியமாக அறிந்துகொண்டு, அதற்கேற்ப உங்கள் பதில்களை அளியுங்கள்.
ஆளுமைத்திறன் மிக்க பதில்களைத் தரவும், பேச்சை வளர்த்துக் கொள்ளவும் கற்பது போலவே, உங்கள் உடைகளைத் தெரிவு செய்யவும், முழுமையான உடல் அசைவுகளை வெளிப்படுத்தவும் கற்றுக் கொள்ளுங்கள். உடையும், உடல்மொழியும் ஆளுமைத்திறனின் இன்னொரு பக்கம் என்பதைத் தெரிந்து செயல்படுங்கள்.
உங்கள் பதில்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவற்றை வெளிப்படுத்தும் பாவமும், வெளிப்படுத்தும் விதமும் சரியானவற்றை, சரியான முறையில் கூறக் கற்றுக்கொள்ளுங்கள்.

எது சரியான, ஆளுமைத்திறனுள்ள அணுகுமுறை?
எதையும் மன்னிப்புக் கோரலுடன் துவங்காதீர்கள். “மன்னியுங்கள். இந்தச் சீட்டில் குறிக்கப்பட்டுள்ள விலைகளைத் தயவு செய்து சரிபார்க்க முடியுமா? – இது தவறான அணுகுமுறை.

“இந்தச் சீட்டில் குறிக்கப்பட்டுள்ள விலைகள் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளன என நினைக்கிறேன். இதனைச் சரிபார்த்துக் கொடுத்தால் நலமாக இருக்கும்” – இது ஆளுமைத்திறனுள்ள சரியான அணுகுமுறை.உங்கள் உணர்வுகளை நேர்மையாகவும், வெளிப்படையாகவும், உறுதியாகவும் வெளிப்படுத்துங்கள். எதற்கும் அஞ்சாதீர்கள். எதையும் உறுத்தலாய் உணராது, மிகவும் சகஜமாய் உணருங்கள்.
அமைதிதான் முக்கியம் என்பதற்காக உரிமைகளை இழக்கச் சம்மதிக்காதீர்கள். உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உங்களுக்கு எப்போதும் உரிமையுண்டு.

உங்களுக்கு எதிராய் ஒரு நியாயமற்ற கடிதம் தரப்படுகிறது. அதைத் தந்தவர் உங்கள் முதலாளியாக இருக்கலாம். அல்லது மேலதிகாரியாக இருக்கலாம். எவராயினும் காரணத்தைக் கேட்க தயங்காதீர்கள். கடிதத்தில் உள்ள நியாயமற்ற தன்மைகளை விளக்கி, அதன் பாதகங்களை அவர்கள் உணரச் செய்யுங்கள். இத்தகைய கடிதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதையும் எடுத்துச் சொல்லத் தயங்காதீர்கள்.ஒரு விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். தீவிர மனப்போக்குடைய ஒருவர் அந்த விவாதத்தை ஆக்கிரமித்துள்ளார் என நீங்கள் கருதினால், அத்தகைய ஆக்கிரமிப்பை அனுமதியாதீர்கள். நியாயமான முறையில், பிறர் கவனத்தை, உங்கள் வாதத்தால் உங்கள் பக்கம் திருப்புங்கள்.

உங்கள் உணர்வுகளை கட்டாயம் வெளிப்படுத்துங்கள். எவ்விதக் குற்றவுணர்வும், கூச்சமும், வேண்டாத பயமும், தேவையற்ற தயக்கமும் ஆளுமைத்திறனை வளர்க்க உதவாது. இறுக்கமின்றி, எளிமையாய் இருங்கள். எதையும் சகஜமாய் எடுத்துக் கொள்ளப் பழகுங்கள்.

– (தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *