ஒளிமயமான எதிர்காலம்

– சொல்வேந்தர் சுகிசிவம்

யார் நீங்கள்? முடியாததை முடிப்பவரா? முடிந்ததை முடிப்பவரா?

ஜாலியாக இருக்க வேண்டும். சுலபமான வேலை பார்க்க வேண்டும். தளுக்கான வேலை பார்த்து சுமாரான சம்பளம் வாங்கி, சினிமா, ஹோட்டல், செக்ஸ், சாராய சமாசாரங்களை அப்படி இப்படி எப்படியோ அனுபவித்தபடியே இருக்க வேண்டும். அலட்டிக் கொள்ளக் கூடாது. சட்டையோ, மூளையோ எதுவுமே கசங்கவே கூடாது. தான் மட்டும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். வாழ்க்கை என்பதே இதுதான், என்கிற சராசரியிஸத்தின் சம்ரட்சகர்கள் பலர் நிரம்பி வழியும் பூமி இது.

இவர்களால் மக்கள் தொகை புள்ளி விவரத்தில் இடம்பெற முடியும். தேசத்தின் தனிநபர் வருமான விகிதத்தைத் தாழ்த்த முடியும். வாக்காளர் பட்டியல், ஜனன மரணப் பட்டியல், போன்ற பட்டியலில் இடம் பிடிக்க முடியும். மற்றபடி இவர்கள் ஜடங்கள். சுற்றிக் கொண்டிருக்கும் சோம்பேறிகள். கண்விழித்து உறங்கும் கபோதிகள். கட்டி வைக்கப்படாத விலங்குகள்.

ஏன்? ஏன் இவர்களால் மக்கள் தொகை புள்ளிவிவரம் மாறுகிறதே ஒழிய வேறு எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. குடும்பமோ தேசமோ உலகமோ அரை அங்குல வளர்ச்சி கூட இவர்களால் அடைவதில்லை. இவர்கள் எதையுமே கண்டுபிடிக்க மாட்டார்கள். ஆனால், எல்லாக் கண்டுபிடிப்புகளையும் அனுபவிக்க ஆசைப் படுவார்கள். உழைக்க மாட்டார்கள். எல்லார் உழைப்பையும் உறிஞ்சிக் கொள்வார்கள். அதிகம் சம்பாதிக்க மாட்டார்கள். ஆனால், அடுத்தவர் சம்பாத்தியத்தில் அதிகம் உறிஞ்சுவார்கள். மரப் பொந்தில் வளர்ந்து மரத்தை உறிஞ்சும் காளான்கள் போல.

இவர்களுக்குத் தன்மானம், சுயகௌரவம், தேசப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, தியாக உணர்வு, தொலை நோக்குச் சிந்தனை, தலைமைப் பண்பு இப்படி எதுவுமே இருக்காது. ஆண், பெண் என்கிற பால் வேறுபாட்டு அடையாளங்கள்தான் இவர்களது பிரதான பயன்பாடுகள். இவர்கள் அதிகம் வேலை செய்யாவிட்டாலும் இவர்கள் ஜீரண மண்டலம் மட்டுமே அதிகம் வேலை செய்திருக்கும். இந்த மானு… சாபங்களாய் மானாவரி மனிதர்களாய் சாகப்பிறந்த சராசரிகளாக நீங்கள் செத்தொழிவதோ!

கல்லை வைர மணியாக்கல், செம்பைக் கட்டித் தங்கம் எனச் செய்தல் வெறும் புல்லை நெல்லெனப் புரிதல் பன்றிப் போத்தைச் சிங்க ஏறு ஆக்கல், மண்ணை வெல்லத்து இனிப்பு வரச் செய்தல் என்று முடியாதவற்றை முடியவைக்கும் பாரதித்தனம் உங்களுக்கு வேண்டாவோ.

டக்கர் பிகர்டா மச்சி என்று ஜொள்ளு வடிய பின்புலப் பாதுகாப்புச் செய்து ஊர்வலம் வந்து பல்வேறு டெக்னிக்குகளால் மெல்ல மெல்ல சரிய வைத்து படிய வைத்து, சமயம் பார்த்து தள்ளிக் கொண்டு போய் குப்பை கொட்டுகிற அசிங்கமான வேலையை, அயோக்கிய லீலையை மிகப் பெரிய வீரதீரப்பிரதாபமாக நீட்டி முடிக்கும் வெட்டிப் பெருமைக்கு நீங்கள் அடிமையாவதோ!

பலரைப் படிய வைத்து, படுக்கைக்கு அழைப்பதும் பலரோடு உடலுறவு கொள்வதும் ஒன்றும் பெரிய சாதனை அல்ல. மிருகங்கள் எப்போதும் அதைத்தான் செய்கின்றன. ஒரே ஒரு வித்தியாசம். அவைகளுக்காக யாரும் லாட்ஜ்களைக் கட்டி வைக்கவில்லை. மற்றபடி இதில் மார்தட்டிக் கொள்ள ஏதுமில்லை என்பது இளையதலை முறைக்கு நன்கு உறைக்க வேண்டாவோ!

வாழவேண்டும் என்கிற வெறியில் திருச்சியில் இருந்து சென்னைக்குச் சைக்கிளில் வர உங்களுக்குத் துணிச்சல் உண்டா? வந்தவர் ந.ந.வாசன். ஜெமினி ஸ்டுடியோ, ஆனந்த விகடன் என்று பிரம்மாண்டமான ஒரு சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ந.ந. வாசன் அவர்கள் ஒரு சாதாரண சமையல்கார விதவைத் தாயின் எளிய மகன். ஆனால், முடியாதவற்றை முடிக்கும் அவரது சாம்ராஜ்ய சரித்திரத்தின் முன்னுரை திருச்சி முதல் சென்னை வரையான சைக்கிள் பயணம். டிக்கட்டில்லாமல் ரயிலில் போகும் திருட்டுத் தனத்தை விட சைக்கிளை மிதிக்கும் சங்கடம் மேல் என்று கஷ்டத்தை நேசித்த மனோபாவம்தான் அவரைச் சக்கரவர்த்தியாக்கியது.முடியாததை முடிப்பவர்களே முடிசூடிக் கொள்கிறார்கள். முடியக் கூடியதை முடிப்பவர்கள் பாவம் முடிவெட்டிக் கொள்கிறார்கள். உங்கள் சிரம் முடிவெட்டத் தோன்றியதா? முடிசூடத் தோன்றியதா? முடிவெடுக்க வேண்டாவோ?ஐம்பத்தாறு சமஸ்தானங்கள் ஆளுக்கொரு திசையில் பிய்த்துக் கொள்ள ஆசைப்பட்டபோது அத்தனை பேரையும் அடக்குவது நடக்கிறகாரியமா? முடியாது முடியாது என்று பலரும் நினைத்தபோது ஏன் முடியாது அடக்கிக் காட்டுகிறேன்” என்று அடக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல். முடியாததை முடித்த முடி மன்னர். நீங்கள் அவரை விட மட்டமா?

எமர்ஜன்ஸி என்கிற இரும்புக் கைகளால் இந்திராகாந்தி இந்தியாவைப் பிசைந்தபோது திராவிட இயக்கமும் சரி, இந்து இயக்கமும் சரி காப்பாற்ற முடியாதபடி கரைந்துபோகும் என்றே எல்லோரும் கணக்குப் போட்டார்கள். ஆனால், இரண்டுமே கட்டுக் கோப்பாகக் காப்பாற்றப்பட்டு மாநிலத்திலும் மத்தியிலும் பதவியேற்று வரலாறு படைத்தார்களே எப்படி? எப்படி? சமைந்தது எப்படி என்று பாட்டுப் பாடினால் போதாது. சாவிலிருந்து எழுந்தது எப்படி என்ற சரித்திரம் படிக்க வேண்டும்.

இந்து இயக்கம் திராவிட இயக்கம் ஆகிய இரண்டு இயக்கங்களுமே எதிர் எதிரானவை என்றாலும் சாக மறுக்கும் உயிர் ஆவேசம், முடியாததை முடிக்கும் மனோபாவம் இருவருக்கம் பொதுவானவை. அதனால்தான் சாம்பலிலிருந்து புறப்படும் ஃபினிக்ஸ் பறவைபோல (கற்பனைதான்) சாவிலிருந்து புறப்பட்டவை அந்த இரண்டு இயக்கங்களும்!
ஒரு கோவிலின் மேல் கூரையில் ஓவியம் வரையவேண்டும். உட்கார்ந்தபடியோ நின்றபடியோ அல்ல. படுத்தபடி மேல் கூரையில் வரைவதால் சாரம் கட்டி அதில் படுத்தபடி பலமணி நேரம் வரைய வேண்டும். ஒருநாள் இரு நாள் அல்ல நான்கரை ஆண்டுகள் வரைந்தார் ஒருவர். உங்களால் அப்படி உழைக்கமுடியுமா? உணவு நேரத்திற்கு உணவு கிடையாது. கொடுமையான பெயிண்ட் வாசனையால் நுரையீரல் கோளாறு ஏற்பட உடல்நலம் கெட எதையுமே பொருட்படுத்தாமல் ஐயாயிரத்து எண்ணூறு சதுர அடி பரப்பளவில் முந்நூற்று நாற்பத்திமூன்று அமர ஓவியங்களை வரைந்து பைபிளை உயிர்ப்பித்த மைக்கல் ஏஞ்சலோதான் அந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர்.

அவர் வெறும் ஓவியர் மட்டுமல்ல சிற்பி, கட்டடக் கலை வல்லுநர். இடைஇடையே இந்தப் பணிகள் வேறு. முடியாததை முடித்ததால் ஓவியத்தில் முடிசூடிய மன்னர் அவர்.
கல்லே இல்லாத ஊரில் கற்கோவில். கிரேனே இல்லாத போது பல டன் எடையுள்ள கல்லை சாரம் கட்டி உச்சிக்குக் கொண்டுபோன சாதனையாளன். முடியாததை முடித்தவன் ராஜ ராஜ சோழன். அதனால் தான் சோழ அரசர்களின் மணி மகுடம் அவன்.
அடிமையாக இருப்பவர்கள். அடிபடவே பிறந்தவர்கள் என்று நசுக்கப்பட்ட தொழிலாளர் கள் தோளை நிமிர்த்தி பொதுவுடமை என்கிற வாளை நிமிர்த்தி அடிமைச் சங்கிலியை அறுத்தெறிந்து ஆட்சிச் செங்கோலைத் தொழிலாளர் கையில் தந்து உலகம் அதுவரை கண்டிராத ஆட்சிமுறைக்கு வித்திட்டாரே கார்ல மார்க்ஸ். அவரென்ன முடியக் கூடியதை முடித்தவரா? முடியாததை முடித்தவரா? யோசியுங்கள். யோசியுங்கள்.
கடல் வழிப் பயணம் ஒரு கனவாக இருந்த காலத்தில் நனவாக்கும் வெறியில் புறப்பட்டார் கொலம்பஸ். பக்கத் துணையாகப் பயணிகள் வரவில்லை. கொள்ளையர்களும் குற்றாவளிகளும் அனுப்பப்பட்டனர்.

பாதி வழியில் பிரச்சனை பிறந்தது. உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வந்த ரொனால்ட் என்பவன் அதிர்ச்சியை அறிவித்தான். கைவசம் உள்ள உணவு ஊர் திரும்ப மட்டுமே போதுமானது. மேற்கொண்டு பயணம் தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் திரும்புவதற்கான உணவு தீர்ந்து போவதால் கப்பலைத் திருப்புவோம். புறப்பட்ட இடமே போய்ச் சேருவோம் என்றான். உடனிருந்த மாலுமிகள் ஆம் ஆம் என்றனர். கொலம்பஸின் கப்பல் கவிழவில்லை. கப்பல் பயண லட்சியம் கவிழ ஆரம்பித்தது. கொலம்பஸின் கூற்று அவர்கள் பய மண்டையில் ஏறவே இல்லை. கொலம்பஸ் கைதானார். ரொனால்ட் தலைமை ஏற்றான். கொலம்பஸ் அசரவில்லை.
ஒரு புதுக் கணக்கு சொன்னார். திரும்பும் நாட்களில் தமக்கென்று உள்ள மொத்த உணவை மற்றவர் எல்லோரும் பங்கிட்டுக் கொள்ளலாம். பட்டினி கிடக்க தான் தயார். அந்த உணவு துணைகொண்டு ஒரு நாளோ இரு நாளோ திட்டமிட்டபடி மேலே பயணம் தொடர்வோம். திரும்ப வேண்டாம் என்று கெஞ்சினார். அது நியாயமாகப்பட்டது. பயணம் தொடர்ந்தது. அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்துக்குள் அமெரிக்கக் கடற்கரை அவர்களுக்குத் தட்டுப்பட்டது. உணவைக் கருதி திரும்பி இருந்தால், கொலம்பஸ் உலகப் புகழ் வெறும் புஸ். முடியாததை முடித்தார். முடிசூடிக் கொண்டார்.

முடியாததை முடிக்கவே நாம் பிறந்திருக்கிறோம். முடிவதை முடிப்பதற்கு அல்ல!

(தொடரும்…)

7 Responses

  1. venkatesan

    Dear Sir,

    I am really amaging of your nice thoughts. I would like to have friendship with you. Can u please call me this number ?

    Venkatesan 9840726495.

  2. srinivasan

    odungiya manam viru kondu ezum alavuku ullathu veliitavarku nanri

  3. D.Ravi cheyyar

    முடியாததை முடிக்கவே நாம் பிறந்திருக்கிறோம்

  4. SELVARAJ

    very good very very good work is imparted all people work.hard we will get good result

    selvaraj

  5. Siva

    முடியாததை முடிக்கவே நாம் பிறந்திருக்கிறோம்

  6. KHALIL RAHMAN-PUDUMADAM

    ஐயா,
    சுகிசிவம் அவர்களே! உங்களின் தமிழின் தெளிவான விளக்கங்கள் என்றும் தொடற எனது துஆ உடன் வாழ்த்துக்கள்!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *