– தயாநிதி
தொடர் 8
நமது உரிமைகளை உணர்ந்து கொள்ளுதலும், அவற்றிற்காகப் போராடுவதும் ஆளுமைத்திறன் என அறிந்துகொண்டோம். நமது உரிமை எதுவெனத் தெரிந்தால்தான், அதன்மீது பிறர் ஏறி நிற்க முயலும் போது அவர்களின் அத்துமீறலை எதிர்கொள்ள இயலும்.
வாழ்வின் ஒவ்வொரு தருணமும் சந்தேகமின்றி வேறுவேறானது. எல்லா நொடியிலும் நமது உரிமைகள் பற்றி நாம் சரியாகத் தெரிந்திருத்தல் மிகமிக அவசியம். மிகுந்த ஆளுமைத்திறன் பெற்றவர்களே கூட, சில அசாதாரண சந்தர்ப்பங்களில் தங்களது உரிமைகளை முழுமையாகத் தெரிந்திருப்பதில்லை.
ஒவ்வொரு சூழலையும் அதற்குரிய மரியாதையுடன் நோக்குவதும், எல்லாச் சூழலிலும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுவதும் ஆளுமைத் திறனை அடைய ஒரு சிறந்த வழியாகும்.
தடுமாற்றமான சூழலில், பின்வரும் வினாக்களை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொண்டு, விடைகாண முயலுங்கள்.
* “இவ்விஷயத்தில் நான் சொல்வதை பிறர் கேட்க வேண்டுமா?”
* “இவ்வாறு அவர்கள் எனக்கு எதிராய் செயல்பட அவர்களுக்கு ஏதும் உரிமையுண்டா?”
* “எனக்கெதிராய் இவ்வாறு கருத்துக்கூற அவர்களுக்கு உரிமையுண்டா?”
பொதுவாக, நாம் இழக்கும் உரிமைகள் பற்றி அதிகம் யோசிப்போம். அவை நமது உரிமைகள்தானா? அவற்றைப் பெறுவதற்காக நாம் வீரியமுடன் போராட வேண்டுமா? என்பதைப் பற்றி அலசி ஆராய்வோம். எவருடைய கருத்துக்கு எதிராயும் நமது கருத்துக்களை வெளிப்படுத்த நமக்கு எல்லா உரிமைகளும் உண்டு. இதனை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். இத்தகைய எண்ணமே நம்மிடமிருந்து ஆளுமைத்திறன் மிக்க பதில்களைக் கொண்டுவரும். இத்தகைய பதில்களை அடிக்கடி கூறிப் பழகுவோம். அப்போதுதான் அவை நமக்குள் நன்றாகப் பதிவாகி, மிகச் சரியாய் மிக இயல்பாய் பதில்தர இயலும்.
பின்வரும் சில வரிகளை நினைவில் கொண்டு தேவையான சமயங்களில் பேசிப் பழகுங்கள்.
* “நீங்கள் கூறிய அவ்வார்த்தைகள் என்னைக் காயப்படுத்திவிட்டன. இதனை நீங்கள் எண்ணிப் பார்த்து, திருத்திக்கொள்வது நல்லது”
* “இந்த விஷயத்தில் நான் கருத்துக் கூறிட எனக்கு எல்லா உரிமையும் உண்டு”
* “இதுபற்றி கருத்துக் கூற எனக்குப் போதிய அவகாசம் தேவை”
* “இதில் எனக்கு உடன்பாடில்லை. தயவுசெய்து எனது கருத்துக்களைக் கேளுங்கள்”
உங்கள் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டியவை என்பதும், நீங்கள் கேட்கப்பட வேண்டியவர் என்பதும் உங்களின் தார்மீக உரிமை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
பல ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு நிறுவனத்தில் பணியாற்றினேன். எங்கள் நிறுவனத்தில் புதிதாய் ஒருவர் பணியில் சேர்ந்தார். அவர் சேர்ந்த சமயத்தில் எங்கள் நிறுவனம் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருந்தது. பணிபுரியும் அனைவரிடமும் அம்முடிவு பற்றி கருத்துக் கேட்கப்பட்டது. அறிவும் தெளிவும் நிறைந்த புதிய பணியாளர் அம்முடிவு பற்றி தனது கருத்தை வெளிப்படுத்தவே இல்லை.
அதுபற்றி நான் அவரிடம் கேட்டபோது, “இந்த நிறுவனத்திற்கு நான் மிகவும் புதியவன். மேலும் எனக்கு அனுபவம் குறைவு. பிறரை விட நான் வயதிலும் மிகவும் இளையவன். நிறுவனத்தின் முக்கியமான முடிவில் நான் கருத்துக் கூறுவது அவ்வளவு முறையான செயலாய் இருக்காது” என்றார்.
அந்த நண்பர் கூறிய கருத்துக்களில் தவறில்லை. அது அவருடைய கோணம் மட்டுமே. அவர் கருத்துக் கூறாமலிருந்ததற்கு அவருடைய அச்ச உணர்வும், ஆளுமைக் குறைவுமே காரணம். அவருடைய கருத்தும் முக்கியம் என்பதாலேயே நிறுவனம் அவர் கருத்தைக் கேட்டது என்பதையும், நிறுவனம் மிகச் சரியான முடிவை மட்டுமே எவ்விதச் சார்புமின்றி எடுக்கும் என்பதையும் அவர் எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டார்.
இத்தகைய சூழ்நிலை உங்களுக்கும் கூட ஏற்படலாம். பல நேரங்களில் நாம் நமக்காகப் பேசவே அஞ்சுகிறோம், கூச்சப்படுகிறோம். இவ்வித அச்சமும் கூச்சமும் தேவையற்றவை. நமது நிலை பற்றிய நமது தெளிவற்ற தன்மையே இதற்கான முக்கியக் காரணம்.
நாம் வேறு ஒரு நிறுவனத்தில் புதிதாய் சேர்ந்த தருணம். அச்சமயம் நிர்வாகத்திற்கும் பணியாளர்க்கும் சுமுகமான சூழல் நிலவாத இக்கட்டான வேளை. அகில இந்திய ரீதியில் எடுக்கப்பட்ட சம்மேளன முடிவுக்குக் கட்டுப்பட்டு, வேலை நிறுத்தமும், அலுகத்திற்கு முன்பாக முழக்கமிடும் போராட்டமும் அறிவிக்கப்பட்டது.
அப்போது எனக்கு பணி நிரந்தரம் கூட ஆகவில்லை. எனது மூத்தோர் “நீ முழக்கமிடும் போராட்டத்திற்கு வரவேண்டாம்” என்று பலமுறை எச்சரித்தனர். நான் ஏற்கவில்லை. போராட்டத்தில் கலந்துகொண்டு முழக்கமிட்டேன். நான் கவனிக்கப்பட்டேன். நிர்வாகம் தனியறையில் தனியாளாய் நிறுத்தி கேள்வி கேட்டது.
நான் சொன்னேன்; “இது எனது தனிப்பட்ட பிரச்சனை மட்டுமன்று. ஒட்டு மொத்த பணியாளர்களுக்கும் உரியது. இதில் நான் தற்காலிகப் பணியாளன் – நிரந்தரப் பணியாளன் என்கிற பேச்சுக்கே இடமில்லை. மேலும் பணியாளர்களின் பக்கமிருந்த நியாயமே என்னைப் போராடத் தூண்டியது. என் செயல்பாட்டில் எவ்விதத் தவறும் இருப்பதாய் நான் நினைக்கவில்லை”. நான் கூறிய இப்பதிலால் நிர்வாகக் குழுவிலிருந்த சிலரின் எதிர்ப்பை சம்பாதித்தேன் என்றாலும், குழுவிலிருந்த சிலர் எனது நிலைப்பாட்டையும், அச்சமற்ற தன்மையையும் பெரிதும் பாராட்டினர். எனது செயல்பாடு பின்வந்த காலகட்டங்களில் கூட எடுத்துக்காட்டாய் பேசப்பட்டது.
உங்கள் ஆளுமைத் திறனை முழுமையாய் வெளிக்காட்ட இயலாது போனால், சமீபத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை எண்ணிப்பாருங்கள். அந்நிகழ்வு உங்கள் அலுவலகத்திலோ, குடும்பத்திலோ, பொது இடத்திலோ எங்கேயும் நிகழ்ந்திருக்கலாம். அல்லது நீங்கள் செய்யத் தேவையற்ற ஒரு செயலை, பிறரது வற்புறுத்தலுக்காகச் செய்திருக்கலாம். அல்லது உங்கள் குழந்தைகளோடு, குடும்ப அங்கத்தினர் யாருடனாவது தேவையின்றி ஒரு விவாதத்தில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம். அல்லது நீங்கள் பொருள் வாங்கச் சென்ற கடையில் உங்களுக்கு சற்றும் தகுதியற்ற மூன்றாந்தரச் சேவை கொடுக்கப்பட்டிருக்கலாம்.
ஒரு அமைதியான சூழலில் இந்நிகழ்வை ஆராயுங்கள். எவ்விதப் பாரபட்சமும் இன்றி, ஒரு நிதானத்தாடு யோசியுங்கள். இரு பக்க நியாயத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அலசிப் பாருங்கள். பின்வரும் வினாக்கள் உங்கள் ஆராய்ச்சிக்கு உதவக்கூடும். விடையில் பொய்யில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.
* நான் செயல்பட்ட விதம் சரிதானா?
* எனது அணுகுமுறை எனக்கே திருப்தி தந்ததா?
* எனது உரிமையை நான் முழுவதும் உணர்ந்துதான் செயல்பட்டேனா?
* இந்த நிகழ்வால் நான் எந்த அளவு பாதிக்கப்பட்டேன்.
* எனது செயல்பாட்டால் எனக்கு ஏற்பட்ட சாதகங்கள் அல்லது பாதகங்கள்
* எனது செயல்பாடு ஆளுமைத் திறனற்றது என எனக்கே பட்டால், நான் எதிர்காலத்தில் செயல்பட வேண்டிய முறை- அல்லது மாற்றுத் திட்டம்.
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆழமாகப் பாருங்கள். உங்கள் செயல்பாடு உங்களுக்கே விளங்கும். நம்மை நாமே விளங்கிக்கொள்வதே சரியான ஆளுமைத்திறன்.
(தொடரும்…)
Leave a Reply